இராதே

இராதே
eradevadassou

சனி, 30 செப்டம்பர், 2023

மழை


 மழை


ஆயிரம் வளையங்கள்

ஆயிரம் வளையல்கள்

வான் தூறலில்

குளம்


புரளும் சருகுகள்

முனகல் முகவரியில்

முகங்காட்டும்

காற்று


அமைதியின் இருப்பைச்

சுரண்டிச் சுரண்டி

அடையாளப்படுத்தும்

தவளை சத்தம்


மெல்ல மெல்ல

காடு கவ்வும்

மை இருளில்

சொட்டுச் சொட்டாய்த்

தாளமிடுகிறது

மழை


              - இராதே

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

உண்மை

 'நீ தான் மணல்'

அறைந்தும் சொல்கிறது


அடித்தும் சொல்கிறது

பாறையை

அலைகள்

உணர்த்தலிலும்

உணர்தலிலும்

ஒளிர்ந்து சிரிக்கிறது

உண்மை 


        - இராதே

பிரிவு



இழந்த துணைக்காய்

ஏங்கி இடந்தேடி

அலைகளின் விளையாட்டில்

திக்குமுக்காடி

கரைக்கும் கடலுக்குமாய்க்

கடலாடிக் கசந்துபோய்க்

கரையில் தனித்து

யாருமற்றுக் காட்சிபடுகிறது

ஒற்றைச் செருப்பு

யாரறிவரோ தொலைந்த

துணையின் முகவரி ?


இயற்கை பொழிவு


 முன்மொழிவு

   கம்பளிப்பூச்சிகள்

வழிமொழிவு

  பட்டாம்பூச்சிகள்

கொதிநீரால் கூடுகளகன்று

நூல்கொடுக்க உயிர்மொழியும்

 பட்டுப்பூச்சிகள்

முனகல்களில் உடலருவும்

பட்டாடைகளின் மினுக்கலில்

ஈரம் கசியா

இயற்கை பொழிவுகள் !

                - இராதே

திங்கள், 18 செப்டம்பர், 2023

சிதம்பரநாதம்




நட்பெனும் சிதம்பர நாதம் !


நட்பெனும் சிதம்பர நாதம் ! - அதன்

   நற்றமிழ் ஓதிடும் தத்துவ வேதம் !

சட்டென இசைத்திடும் கீதம் ! - நேய

   சாரத்தை வகுத்திட நடந்திடும் பாதம் !


தித்திக்குந் தேன்சுவை பேச்சு ! - அதில்

   தீந்தமிழ் சிறப்புற எழுந்திடும் மூச்சு !

எத்திக்கும் முழவிடும் வீச்சு ! - நமை 

   இயல்பிலே களிப்புற மயக்கிட லாச்சு !


அன்பிலே திளைத்திட செய்வான் ! - அவன்

   ஆர்த்திடுந் தமிழாலே உள்ளத்தில் உய்வான் !

பண்பாலே நட்பினைக் கொய்வான் ! - ஆழப்

   படித்ததைப் பாரினில் பயனுற பெய்வான் !


இன்பன் சிதம்பரம் வாழ்க ! - நங்கை 

   இணையோடே என்றென்றும் இன்பமே சூழ்க !

நன்றாய் மகிழ்வினில் மூழ்க ! -  நாளும்

   நன்மைகள் பெற்றேநீ நலங்களில் ஆழ்க !

             - பொறிஞர் இராதே

புரிதல்


 தள்ளாடித் தள்ளாடி

முன் விரிகிற

வாழ்க்கை


ஊர்ந்து நெளிகிற

உண்மைகள் பின்னால்

விழிபிதுங்கி

வழித்தொலைத்து நிற்கும்

கனவுகள்


அன்றிலிருந்து இன்றுவரை

வளைய வளைய

தேய்ந்து தேய்ந்து இளைக்கும்

நினைவுகள்


ஒவ்வொரு புரிதலுக்குள்

முளைவிடும் பட்டறிவு

பயனுறும் முன்

அடங்குகிறது மூச்சு !


                  - இராதே