இராதே

இராதே
eradevadassou

சனி, 30 நவம்பர், 2013

உயிர்க்கொல்லி ( எய்ட்சு ) - எண்சீர்

          காமத்தால்  கன்னியரின்  கைக்குள்  சென்றேன் ;
                    கண்டுருகும்  அழகினிலே  இதழை  மென்றேன் ;
          ஊமத்தம்  உண்டதுபோல்  பித்தம்  ஏறி
                    ஊர்சுற்றும்  மாதர்களை  விருந்தாய்த்  தின்றேன் ;
          நாமக்கல் ,சேலமெலாம்  கூடிச்  சென்று
                    நங்கையரின்  இச்சைக்கே  இசைந்தே  நின்றேன் ;
          நாமமது  கெட்டதுதான்  மிச்சம் !  மிச்சம் !
                    நலிந்தவுடல்  கண்டதுதான்  வைரஸ்  எச்சம் !


          பெற்றோர்க்கும்  பிடிக்காத  பிள்ளை  யானேன் ;
                    பேசாத  பேச்சுக்குப்  பொருளு  மானேன் ;
          உற்றார்க்கும்  உறவினர்க்கும்  பகையு  மானேன் ;
                    ஊருக்குள்  விளங்காத  குடியு  மானேன் ;
          கற்றார்க்கும்  பாவலர்க்கும்  கருவா  யானேன் ;
                    கருத்தில்லாச்  சிந்தைக்கே  இடமு  மானேன் ;
          மற்றவர்கள்  மதிக்காத  மடைய  னானேன் ;
                    மாசுடைய  வீணையதன்  இசையு  மானேன் !


          நிலவில்லா  வானானேன் ;  நானே  இன்று
                    நிறமில்லா  மலரானேன் ;  வெளியே  செல்ல
          நலமில்லா  நோயானேன் ;  மருந்தே  இன்றி
                    நடமாடும்  பிணமானேன் ;  சருகாய்  ஆனேன் ;
          உலகெல்லாம்  சிரிக்கின்ற  உருவ  மானேன் ;
                    உருக்குலைந்த  எலும்புகளின்  கூடு  மானேன் ;
          வளமான  இளமையினைக்  கருக்கி  விட்டு
                    வாட்டுகிற  நோயதற்கே  இரையு  மானேன் !


          ஆணுக்கும்  பெண்ணுக்கும்  முறையில்  லாத
                    ஆடுகிற  ஆட்டத்தின்  உச்சத்  தாலே
          ஊனுக்குள்  குருதியதன்  ஓட்டத் துள்ளே
                    ஊடுருவி  வந்துவிட்ட  அரக்கன்  வைரஸ்
          பேணுகிற  வெள்ளையணு  அதனைக்  கொன்று
                    பெருகுகிற  நோயெதிர்ப்பை  மெல்லச்  சாய்க்கும் ;
          காணுகிற  பிணியெல்லாம்  வளரும்  ஓங்கும்
                    கண்டபடி  ஆதிக்கம்  செலுத்தும்  ஏய்க்கும் !

          தடைபோட  முடியாத  ஆசை  யாலே ,
                    தவறிழைத்தே  துன்பங்கள்  கண்ட  தாலே ,
          உடைகூட  அணிந்திடவே  இயலா  தாகி
                    ஊட்டமிலா  மெலிந்தவுடல்  வாட்டங்  கொள்ள
          எடையெல்லாம்  குறைவாகி  மேனி  தேயும் ;
                    எளிதான  இருமலுக்கே  படுக்கை  காணும் ;
          நடைபோட்டே  எலும்புருக்கி  உடனே  தொற்றும் ;
                    நாட்பட்ட  காய்ச்சலுமே  தொடரும்  வாட்டும் !


          வேசிகளின்  பழக்கத்தால்  வருதல்  சொன்னேன் ;
                    வேறுசில  வழிகளுமே  இருத்தல்  சொல்வேன் ;
          ஊசிகளின்  பயன்பாட்டால்  வருதல்  உண்டே ;
                    உடல்மாற்றும்  குருதியினால்  வருதல்  உண்டே ;
          தூசுக்கும்  கொசுவுக்கும்  வருவ  தில்லை ;
                    தும்மலாலும்  இருமலாலும்  இல்லை  தொற்று ;
          யாசித்துப்  பெற்றுவிட்ட  எயிட்சி  னாலே
                    ஏக்கத்தால்  வாழ்க்கை யினை  இழக்கக்  கண்டேன் !


          பதறாத  செயல்களெலாம்  சிதறா  தென்பார் ;
                    பக்குவமாய்  உயிர்க்கொல்லி  நோயைப்  போக்கக்
          கதறாமல்  பாசமுடன்  கருணை  வேண்டி ,
                    கனிவான  நட்புணர்வைப்  பெறுதல்  வேண்டும் ;
          இதமான  உடற்பயிற்சி  நாளும்  வேண்டும் ;
                    இயற்கையதன்  அழகினையே  சுவைத்தல்  வேண்டும் ;
          பதமான  மருத்துவத்தில்  பலனைக்  கண்டு
                    பலமான  எயிட்சினையே  எதிர்ப்போம் !  வெல்வோம் !


          தேனூறும்  மனையாளிடங்  காணும்  இன்பம் ;
                    தேவடியாள்  மனைசென்றால்  கிடைக்குந்  துன்பம் ;
          வானுடைய  புகழ்கொண்ட  தமிழர்  பண்பு ;
                    வழித்தவறிப்  போவதினால்  இழக்கும்  அன்பு ;
          மானுடனே  மதியிழந்து  தவற்றைச்  செய்து
                    மறுதலித்துப்  போனவரின்  வருத்தங்  கண்டு
          நானுடனே  நல்லதமிழ்  இசையைக்  கூட்டி
                    நடப்பறிந்தே  நலங்காண  விருத்தங்  கண்டேன் !
                                                                                                                                       -இராதே



வியாழன், 28 நவம்பர், 2013

மரங்கொத்தி

     கறுப்பு  வெள்ளை  நிறத்திலே
          கடமை  வீர  னாகவே
     சுறுசு  றுப்பின்  வடிவமாய்
          துளைக்கும்  மரத்தை  மரங்கொத்தி ;
     இறுக்கும்  விரலால்  மரத்தினை
          இறுக்கிப்  பற்றிக்  கொள்ளுமே ;
     நறுக்கும்  அலகால்  கொத்துமே ;
          நழுவும்  புழுவை  உண்ணுமே !



     மரத்தில்  கூடு  கட்டிட
          மரத்தைக்  குடையும்  மரங்கொத்தி
     மரத்தின்  கூட்டில்  இருவழி
          வைக்கும்  மதியின்  நுட்பத்தால்
     முரட்டுப்  பகைவர்  கூட்டினுள்
          முன்னம்  வழியில்  நுழைந்திட
     வரவை  யறிந்த  மரங்கொத்தி
          மாற்று  வழி யில்  பறந்திடும் !


     நீள  மான  நாக்கினை
          நீட்டும்  இரையின்  புற்றினுள்
     நீள  நாக்கின்  பசையிலே
          நெளியும்  இரைகள்  சிக்குமே ;
     சாலச்  சுவைத்தே  உண்டிடும் ;
          சாது  போல  நின்றிடும் ;
     ஞாலங்  கண்ட  இயற்கையின்
          நளின  பறவை  மரங்கொத்தி !
                                                                             -இராதே

புதன், 27 நவம்பர், 2013

பூரான்

     கொட்டும்  மழையின்  காடுகளில்
               குடும்பங்  கண்டு  வாழ்ந்திருக்கும் ;
     கட்டுக்   கட்டாய்  உடலிருக்கும் ;
               கட்டுக் (கு)  இரண்டு  காலிருக்கும் ;
     முட்டுந்  தலையில்  உணர்விழைகள்
               முந்தி  நீண்டே  அசைந்திருக்கும் ;
     தட்டும்  இரையில்  நச்சூட்டித்
               'தாடைக்  காலி '  பிசைந்துண்ணும் !


     முன்னும்  பின்னும்  ஊர்ந்தோடும் ;
               முதுகில்  எலும்பே  இருக்காது ;
     பின்னே  நெளியும்  பகுதியில்
               பிறப்பைப்  பெருக்கும்  உறுப்பிருக்கும் ;
     கன்னங்  கரிய  நிறமுண்டாம் ;
               கறுப்பும்  சிவப்பும்  கலப்புண்டாம் ;
     எண்ணும்  போதே  உடற்சிலிர்க்கும் ;
               இயற்கை  படைப்பே  பூரான்கள் !
                                                                                            -இராதே



 'தாடைக்  காலி ' = பூரான்

செவ்வாய், 26 நவம்பர், 2013

மண்புழு

          மண்ணில்  நெளியும்  மண்புழு
                    மண்ணைத்  தின்று  வாழ்ந்திடும் ;
          மண்ணைத்  துளைத்தே  உழுவதால்
                    மண்ணில்  காற்றின்  வினையுறும் ;
          மண்ணின்  வளமும்  பெருகிடும் ;
                    மகசூல்  நிறைந்து  வழிந்திடும் ;
          உண்ணும்  பயிர்கள்  செழிப்புற
                    உழவர்  நண்பன்  மண்புழு !


          சின்னச்  சின்ன  துண்டங்கள்
                    சேர்ந்த  வளையில்  தொடர்ச்சியில்
          முன்னும்  பின்னும்  சுருங்கியே
                    முழுமை யாக  ஊர்ந்திடும் ;
          தின்னும்  வாயின்  பின்புறம்
                    திருகும்  நீண்ட  உறுப்புண்டாம் ;
          உண்ணும்  இரையைத்  தேடிட
                    உதவி  செய்யும்  உறுப்பிதாம் !


          மண்ணுங்  குளிரும்  வேளையில்
                    வலையை  விட்டு  வெளிவரும் ;
          உண்ணும்  இரையை  நாடியே
                    உணவு  வேட்டை  யாடிடும் ;
          எண்ணி  லடங்கா  இரைப்பைகள்
                    இதனின்  உடலில்  உள்ளதால்
          தின்னத்  தின்ன  செரித்திடும் ,
                     செழுமை  உரங்கள் வழங்கிடும் !
                                          -இராதே 

ஞாயிறு, 17 நவம்பர், 2013

கம்பும் வரகும்

கம்பு  வரகு  கதிர்களைக்
          கசக்கித்  தூற்றி  மணிகளாய்த்
தொம்பைப்  பெட்டி  நிரப்புவோம் ;
          தூய  மணிகள்  உலர்த்துவோம் ;
தெம்பு  கொடுக்கும்  பரல்களைத்
          திரட்டிச்  சுவைத்து  மகிழுவோம் ;
நம்பி  உண்ணும்  உணவிது
          நலமே  சேர்க்கும்  உணவிது !


உரலில்  இட்டு  மணிகளை
           உலக்கை  யாலே  குத்துங்கள் ;
சரள  மாக  மாவுமே
          சலிக்க  நமக்குக்  கிடைத்திடும் ;
திரளும்  மாவைச்  சேமித்துத்
          தினுசு  தினுசாய்ச்  சமைக்கலாம் ;
தரமே  மிகுந்த  உணவிது ;
          தருமே  நாளும்  சத்திது !


கஞ்சி  கூழு  காய்ச்சலாம் ;
          கலியும்  புட்டும்  செய்யலாம் ;
நஞ்சு  நல்கா  உணவிது ;
          நல்ல  ஊட்ட  உணவிது ;
கெஞ்சிக்  கொஞ்சிச்  சொல்கிறோம் ;
          கேடில்  லாத  உணவிது ;
அஞ்சி  டாமல்  உண்ணுங்கள் ;
          அருமை  உடலைக்  காத்திடும் !
                                                                             -இராதே

சனி, 16 நவம்பர், 2013

கொழுக்கட்டை

வெல்லப்  பாகு  காய்ச்சனும் ;
          வெள்ளைத் தேங்காய்த்  துருவனும் ;
மெல்ல  கலந்து  இரண்டையும்
          மெதுவாய்  உருண்டைச்  செய்யனும் ;
நல்ல  அரிசி  மாவினை
          நன்றாய்  அவித்து  பிசையனும் ;
வில்லை  வில்லை  யாகவே
          வெள்ளை  மாவைத்  தட்டனும் !


உள்ளே  இனிப்பின்  உருண்டையை
           உருட்டி  மடித்தே  அவிக்கனும் ;
வெள்ளை  ஆவி  சட்டியில்
          வெந்து  கிடைக்கும்  கொழுக்கட்டை ;
பிள்ளை  யாரு  சாமிக்கு
          பிடித்த  உணவு  கொழுக்கட்டை ;
பிள்ளைச்  செல்வம்  நீங்களும்
          பிகு பண்  ணாமல்  உண்ணுங்கள் !
                                                                                         -இராதே

தொப்பி

தலையில்  சூடும்  தொப்பி ;
          தருமே  தோற்றம்  தொப்பி ;
மலையில்  மகுடம்  போல
          மதிப்பைக்  கூட்டும்  தொப்பி ;
கலையும்  முடியை  அடக்கி
          கட்டுக்  குள்ளே  வைக்கும் ;
அலையும்  வெயிலில்  தலையை
          அனலி  லிருந்து  காக்கும் !


கொட்டும்  மழையி  லிருந்தும்
          குல்லா  தலையைக்  காக்கும் ;
குட்டுங்  கைகள்  தடுக்க
          குல்லா  கவச  மாகும் ;
மொட்டை  வழுக்கைத்  தலையை
          மூடி  அழகு  காட்டும் ;
பட்டுத்  துணியில்  தொப்பி ;
          பருத்தித்  துணியில்  தொப்பி !


கதரில்  குல்லா  தைத்து
          காந்தி  தந்த  தொப்பி ;
உதவும்  உள்ளம்  நேரு
          உடுத்திக்  கொண்ட  தொப்பி ;
பதமாய்ச்  செய்த  தொப்பி ;
          பாங்காய்  அமைந்த  தொப்பி ;
இதமாய்  மூங்கில்  பட்டை
          இறுக  பிணைந்த  தொப்பி !


திரளும்  திறமை   யூடே
          திகைக்குங்  கலையின்  நுட்பம்
புரளும்  வேலைப்  பாட்டில்
          புதிய  புதிய  தொப்பி ;
வரமாய்  நமக்கு  வந்தே
          மகிழ  உதவும்  தொப்பி ;
தரமாம்  தொப்பி  குணத்தைத்
          தரணி  காக்கக்  கொள்வோம் !
                                                                           -இராதே



வெள்ளி, 15 நவம்பர், 2013

மின்மினி

இரவில்  ஒளிரும்  மின்மினி
          இயற்கை  தந்த  வண்டினம் ;
பரவும்  இருட்டில்  மின்மினி
          பறக்கும்  நெருப்பாய்த்  தோன்றுது ;
நரம்புத்  தூண்டுஞ்  செயல்களால்
          நடன  மிட்டே  ஒளிருது
புரளும்  புழுக்கள்  நத்தையைப்
          பிடித்தே  உண்ணும்  மின்மினி !


முட்டை  புழுக்கள்  வண்டென
          மூன்று  நிலையும்  ஒளிருமே ;
கொட்டும்  அரிவாள்  கொடுக்கினால்
          கொடுக்கும்  மயக்க  மருந்தினில்
பட்டு  வீழும்  இரைகளில்
          பாய்ச்சும்  செரிக்கும்  நொதிகளில்
விட்டு  விட்டுக்  கூழாகும்
          விருந்தாம்  இரையை  உறிஞ்சிடும் !


கூட்டுப்  பொருளாம்  லூசிபெரின்
         கூடும்  மூச்சு  காற்றுடன்
ஊட்ட  மேற்றும்  மெக்னிசியம்
          ஒன்றி  ஒளியை  உமிழுதே ;
நோட்டம்  பார்க்கும்  பறவைகள்
          நிறைக்கும்  இதனைக்  கூட்டினுள்
வாட்ட  மான  ஓளியிலே
          வசதி  யாக  வாழுமே !
                                                                            -இராதே

வியாழன், 14 நவம்பர், 2013

சிலந்தி

உண்ணும்  வாயில்  உமிழின்  ஊற்றை
          ஊதி  ஊதி  இழையாய்  மாற்றி
கண்ணுங்  கருத்தும்  ஒன்றாய்க்  கூட்டிக்
          கலையின்  நுணுக்கம்  மெத்தக்  காட்டிப்
பின்னும்  வலையில்  இரைகள்  சிக்க
          பிடித்துக்  கொன்றுப்  பசியைப்  போக்கி
மின்னல்  நடனம்  எட்டுக்  காலில்
          மிதந்தே  ஆடும்  சிலந்திப்  பூச்சி !


குள்ள  சிலந்தி ;  தோட்ட  சிலந்தி ;
          கூடு  கட்டித்  தொங்குஞ்  சிலந்தி ;
முள்ளு  சிலந்தி  நண்டு  சிலந்தி ;
          முட்டி  முட்டித்  தாவும்  சிலந்தி ;
துள்ளி  ஓடும்  ஓநாய்ச்  சிலந்தி ;
          துரத்தும்  நீண்ட  தாடை  சிலந்தி ;
துள்ளும்  நெல்லு  வண்டை  தின்று
          துயரைத்  துடைக்குங்  கணுக்கால்  சிலந்தி !


இயற்கை  தந்த சிலந்தி   யெல்லாம்
          இளமை   யான  பயிரைக்  காக்கும் ;
வியக்கும்  வகையில்  பயிரை  உண்ண
          விரையும்  உயிரை  உண்டு   மாய்க்கும் ;
 செயற்கை  வேதி  மருந்தைத்  தெளித்து
          சிலந்தி  இனத்தைச்  சிதைத்து  விட்டால்
இயற்கைச்  சுழற்சி  என்ன  வாகும் ?
          இணக்க  மின்றி  அருந்து  போகும் !

                                                                                                    இராதே

புதன், 13 நவம்பர், 2013

தவளை

குட்டை  குளங்கள்  நிலங்களில்
          குதித்துத்  தாவி  ஓடிடும் - தன்
முட்டைக்  கண்கள்  இரண்டையும்
         மூடி  மூடித்  திறந்திடும் !
திட்டை  மேகந்  திரண்டதும்
          திளைத்துக்  கூச்சல்  போட்டிடும் - வான்
கொட்டும்  மழையின்  வரவினை
          குரலொ  லித்துக்  காட்டிடும் !


முட்டை   யிட்டே  இனத்தினை
          மூழ்கும்  நீரில்  பெருகிடும் - அதன்
குட்டிக்  குட்டி  முட்டைகள்
          குட்டை  நீரீல்  பொரிந்திடும் !
சுட்டி  மீன்கள்  உருவிலே
          சுற்றிச்  சுற்றிந்  திரிந்திடும் - நீள்
தட்டை  வாலும்  மறைந்திட
          தவளை  வடிவம்  தெரிந்திடும் !


வேட்டை   யாடும்  மனிதர்கள்
          விற்கும்  பொருளில்  சேர்ந்திடும் - ஊண்
கூட்டைக்  காக்கும்  மருத்துவக்
          கூறும்  ஆய்வில்  அழிந்திடும்!
சேட்டை  செய்யும்  சிறுவனின்
          சில்லாக்  கோலில்  சிக்கிடும் - நீள்
சாட்டை  வடிவ  பாம்பினம்
          தாக்கும்  இரையாய்  மாய்ந்திடும் !


தீட்டும்  தீய  செயல்களால்
          திரளும் இயற்கை  மரித்திடும் - பல
நாட்டின்  சுற்றுச்  சூழல்கள்
          நாளும்  நசிந்து  கெட்டிடும் !
கோட்டை  விட்டு  வருந்திடும்
          கூசும்  நிலைமைத்  தொடர்ந்திடும் -நூல்
ஏட்டைக்  கொண்டு  நுணலினை
         இயம்பும்  காலம்  வந்திடும் !
                                                                                       -இராதே

செவ்வாய், 12 நவம்பர், 2013

சேவல்

சிவப்புக்   கொண்டை   சேவல் ;
          செய்யும்   எழுப்பும்   ஏவல் ;
உவகைக்   குரலில்   கூவல் ;
          ஊரின்   நல்ல   காவல் ;
துவங்கும்   காலை   தாவல் ;
          துரத்தும்   பெட்டை   ஆவல் ;
கவரும்   நெல்லின்   தூவல் ;
          கண்டு   கொத்தும்   சேவல் !

                                                                      -இராதே




மோனை , சாணை

மரபு   பாட்டில்   மோனை ;
          மயக்க   இசைக்கும்   வீணை ;
மதிலின்   மீது   பூனை ;
          மண்டி   யிடுது   யானை ;
வடிக்க   சோற்றுப்   பானை ;
          வரிசை   யாக   சேனை ;
வண்டு   குடிக்கும்   தேனை ;
          வாளைத்   தீட்டும்   சாணை !
                                                                        -இராதே

எங்கள் வீட்டுத்தோட்டம்

எங்கள்   வீட்டுத்   தோட்டத்தில்
          இயற்கை   யெழிலே   கொஞ்சிடும் ;
அங்கும்   இங்கும்   எங்குமே
          அழகு   பசுமை   தோன்றிடும் ;
தொங்கு   கின்ற   காய்கறி
          தோற்றம்   கண்ணைப்   பறித்திடும் ;
பொங்கும்   நல்ல   பூமணம்
          புத்து   ணர்வை    ஊட்டிடும் !


கட்டங்   கட்ட   மாகவே
          கட்டி   வைக்கும்   பாத்தியில்
கிட்டுங்   கீரை   விதைகளைக்
          கிளறித்   தூவ   வளர்ந்திடும் ;
நட்டு   வைத்த   செடிகொடி
          நன்குப்   பயனைத்   தந்திடும் ;
கொட்டிக்   குவியுங்   கனிகளைக்
          கொடுக்கும்   எங்கள்   தோட்டமே !


நீங்கள்   உங்கள்   வீட்டிலே,
          நிலவு   காயும்   மாடியில்
தொங்கும்   தோட்டம்   போட்டதில்
          துளிர்க்கும்   பசுமை   போற்றுங்கள் ;
தீங்கும்   நச்சும்   இன்றியே
          சிறந்த   உணவு   விளைந்திடும் ;
வீங்கும்   நன்மை   பொழிந்திடும்
          வீட்டுத்   தோட்டம்   காண்போமே !
                                                                                            -இராதே

ஞாயிறு, 10 நவம்பர், 2013

வேப்ப மரம்

ஒளிரும்  மஞ்சள்  நிறத்திலே
          உதிரும்  வேப்பம்  பழங்களைக்
கிளிகள்  குயில்கள்  உண்டதன்
          கிளையில்  ஊஞ்சல்  ஆடுமே!
தளிரும்  துளிரும்  மருத்துவம்
          தாங்கும்  கொழுந்தை  வழங்கியே
குளிர்ச்சி  யானக்  காற்றினைக்
          குழைத்து  வாரி  வீசுமே!


இலைகள்  பூக்கள்  காய்கனி
          இறுகும்  பட்டை  வேர்களும்
விலையி  லாத  மருந்ததாய்
          வீட்டின்  நலத்தைக்  காக்குமே !
பலகை  சட்டம்  சன்னலாய்ப்
          பதிக்கும்  வாரைக்  கூரையாய்
பலதும்  தந்து  பயனுள
          பண்பு  நிறைந்த  வேம்பிதே !


சூம்பிக்  குன்றித்  தன்னலம்
          சூழ  நின்று  வெட்டியாய்க்
காம்பி  லாத மலரைப்போல்
          காத  றுந்த  ஊசிபோல்
ஓம்பும்  வெற்று  வாழ்வினை
          உதறித்  தள்ளி  விருப்புடன்
வேம்பின்  உயர்ந்த  குணத்துடன்
          விரைந்தே  உதவ  வாருங்கள் !
                                                                               -இராதே

ஆந்தை


வட்ட  வடிவ  வெண்முகம்
          வளைந்த  கூனல்  அலகுடன்
கொட்டக்  கொட்ட  விழிப்புடன்
          கூர்மை  வாய்ந்த  நகத்துடன்
எட்டுத்  திசையும்  திரும்பிடும்
          இயல்பாய்ச்  சூழலுங்  கழுத்துடன்
திட்ட  மிட்டே  இரவிலே
          திரியும்  பறவை  ஆந்தையார் !


பாழ  டைந்த  வீட்டிலே
          பழைய  கோட்டை  வாசலில்
ஆழ  மான  கிணற்றிலே
          அசையும்  மரத்தின்  பொந்திலே
சூழ  வாழும்  ஆந்தையார்
          சூழலுங்  கண்கள்  கொண்டவர் ; 
வாழ  உணவாய்  எலிகளை
          வயலில்  வேட்டை  யாடுவார் !                                                

!


உழவுத்  தொழிலின்  நண்பனாய்
          உண்பார்  வெட்டுக்  கிளிகளை
இழவு  சொல்லும்  பறவையாய்
          இழிவாய்  உலகம்  காணுதே ;
பழகும்  மூட  நம்பிக்கை
          பழியில்  ஆந்தை  அழியுதே ;
அழகாம்  இயற்கை  படைப்பினை
          அழித்தி  டாமல்  போற்றுவோம் !
                                                                                    -இராதே

பேரீச்சம்

ஈச்சம்  ஈச்சம்  பேரீச்சம் ;
          ஈனுஞ்  சுவையைப்  பேரீச்சம் ;
"உச்சு"க்  கொட்டி  உண்ணலாம் ;
          உண்டு  நன்மை  கொள்ளலாம் ;
நச்சுப்  பிணிகள்  ஓடிடும் ;
          நாளும்  வலிமை  கூடிடும் ;
அச்ச  மூட்டும்  புற்றுநோய்
          அழிக்க  வல்ல  பேரீச்சம் !


நரம்புத்  தளர்ச்சி  போக்கிடும் ;
          நாசி  சளியுங்  குறைந்திடும் ;
இரவில்  மூன்றை  உண்ணுங்கள் ;
          இரத்த  அணுக்கள்  பெருகிடும் ;
பரவும்  குருதிக்  குழாய்களில்
          பாதை  அடைப்பு  மறைந்திடும் ;
வரமாய்  வந்த  பழமிதே
          வளமை  ஈட்டுங்  கனியிதே !


நினைவின்  ஆற்றல்  வளர்ந்திடும் ;
          நெருடும்  வலிகள்  தொலைந்திடும் ;
கனைக்கும்  இருமல்  தொல்லையின்
          கவலை  காற்றில்  பறந்திடும் ;
நனைந்து  தேனில்  ஊறிடும் ;
          நாவில்  சுவையைக்  கூட்டிடும் ;
நினைக்க  நினைக்க  இனிமைகள்
          நிறைந்த  பழமே  பேரீச்சம் !
                                                                                    -இராதே

குரங்காட்டம்

                    குட்டிச்   சுட்டிக்   குரங்கு ;
                              குதித்தே   ஆடுங்   குரங்கு ;
                    முட்டி   முட்டிச்   சிரித்து ,
                              முன்னங்   கைகள்   விரித்து ,
                    எட்டி   இலங்கை   தாவும் ;
                              எடுக்குங்   கோலை   ஏவும் ;
                    சட்டி   தலையில்   கவிழ்த்துத்
                              தானே   யெடுக்கும்   அவிழ்த்து !


                    ஆடு   ராமா   என்றால்
                              ஆடிக்   கொட்ட   மடிக்கும் ;
                    தேடு   ராமா   என்றால்
                              சீதை   தேடி   நடிக்கும் ;
                    கோடு   ராமா   என்றால்
                              கோட்டைத்   தாண்டி   முடிக்கும் ;
                    போடு   ராமா   என்றால்
                              போடுங்   குட்டிக்   கரணம் !

                                                                                                          -இராதே

கீரை - 2

                    மூட்டு   வலிக்கு   முடக்கற்றான் ;
                              முதுமை   குறைக்க   பசலைங்க ;
                    வேட்டு   வைக்கும்   வாயுவை
                              விரட்டும்   வாதக்   கீரைங்க ;
                    மீட்கும்   இளமை   தூதவளை ;
                              மினுக்க   பொன்னாங்   கன்னிங்க ;
                    வாட்டி   வதைக்கும்   பிணியெலாம்
                              வாரி   யடித்தே   ஓடுங்க !


                    அகத்தி   வயிற்றுப்   புழுக்களை
                               அகற்றித்   தள்ளும்   வெளியேங்க ;
                    முகத்தில்   பொலிவு   பொங்கிட
                              முருங்கைக்   கீரை   உதவுங்க ;
                    புகட்டும்   மணத்தக்   காளியும்
                               புண்ணை   ஆற்றுங்   கீரைங்க ;
                    சகல   சத்தும்   நல்கிடும்
                              சமச்சீர்   உணவு   கீரைங்க !


                    மூளை   சிறக்க   வல்லாரை;
                              முழுக்க   செரிக்க   வெந்தியம் ;
                    பாளைக்   கீரை   புளிக்கீரை
                              பருப்புக்   கீரை   ""காசினி""யும்
                    வேளை   பார்த்துப்   பகுத்துண்டால்
                              வேண்டும்   நன்மை   கிட்டுங்க ;
                    நாளை   யென்று   தள்ளாமல்
                              நாளுங்   கீரை   உண்ணுங்க !

                                                                                                      -இராதே

கீரை - 1

                    நலமே   தருமே   கீரைங்க ;
                              நாளும்   உணவில்   சேருங்க ;
                    வளமை   கூடும்   பாருங்க ;
                              வாழும்   நாட்கள்   முழுதுமே !
                    நிலத்தில்   நூறு   வயதுடன்
                              நிலைக்க   கீரை   உண்ணுங்க ;
                    இளமை   யோடு   வாழ்ந்திட
                              இயக்கும்   உடலைக்   கீரைங்க !


                    கூட்டு , பொரியல் ,  செய்யலாம் ;
                              குழம்பு  , சாம்பார்   வைக்கலாம் ;
                    கட்டி   சட்னி   அரைக்கலாம் ;
                              கடைந்து   மசியல்   எடுக்கலாம் ;
                    சட்டி   நிறையக்   கீரையில்
                              சாறும் ,  ரசமும்   சமைக்கலாம் ;
                    தட்டில்   இட்டு   சோறுடன்
                              சத்துக்   கீரை   உண்ணுங்க !


                    நீரை   இழக்கும்   நீரிழிவை
                              நிறுத்துங்   கீரை   நீராரை ;
                    ஆரைக்   கீரை   அரைக்கீரை
                              அறுக்கும்   நோயை   உள்ளுற
                    கீரைத்   தண்டு   முளைக்கீரை
                              கீழா   நெல்லி   சிறுகீரை
                    சேர   உண்டால்   நோயெல்லாம்
                              திகைக்க   ஓடி   ஒளியுமே!
                                                                                                           -இராதே

சனி, 9 நவம்பர், 2013

மூட்டைப் பூச்சி

                    முட்டை   தட்டை   வடிவமே
                              மூட்டைப்   பூச்சி   வடிவமாம் ;
                    கட்டில்   படுக்கை  , பாயிலே ,
                              கதவின்   இடுக்கின்   ஓரத்தில்,
                    வீட்டின்   மூலை   முடுக்கெல்லாம்
                              விரைவில்   பதுங்கி   வாழ்ந்திடும் ;
                    கெட்டி   அரக்கு   நிறத்திலே
                              கேடு   செய்யும்   பூச்சிது !


                    இரவில்   வெளியில்   வலம்வரும் ;
                              இரத்தங்   குடித்தே   உயிர்பெறும் ;
                    உரசும்   இரண்டு   குழல்களால்
                              உடலில்   துளைகள்   இட்டிடும் ;
                    உரசும்   உணர்வு   மங்கிட
                              ஒன்றில்   உமிழ்நீர்ப்   பாய்ச்சிடும் ;
                    உரசும்   மற்ற   குழலினால்
                              உறிஞ்சி   குருதி   குடித்திடும் !


                    மனித   உடலின்   சூட்டையும்,
                              மனித   கரிம   வாடையும்,
                    இனிய   சூழ   லாக்கியே
                              இரவு   வேட்டை   ஆடிடும் ;
                    அணிகள்   அணிக   ளாகவே
                              அமைதி   காத்துத்   தாக்கிடும் ;
                    துணிவு   மிக்க   பூச்சிது ;
                              தூக்கங்   கெடுக்கும்   பூச்சிது !


                    கடித்த   இடத்தில்   தடித்திடும் ;
                              கடுமை   யாக   அரித்திடும் ;
                    அடித்து   நசுக்க   முயற்சித்தால்
                              அடுத்த   நொடியில்   மறைந்திடும் ;
                    பிடிக்கத்   துரத்தி   ஓடுங்கள் ;
                              பிதுக்கி   அழுத்தி   கொல்லாது ,
                    பிடித்து   தீயில்   பொசுக்குங்கள் ;
                              பின்னர்   கையைக்   கழுவுங்கள் !
                                                                                                             -இராதே

வெள்ளி, 8 நவம்பர், 2013

உள்ளங் கொதிக்குது ! - உருப்படி

                                                   எடுப்பு


               உள்ளங்கொ   திக்குதை   யோ  -  சின
               வெள்ளம்பெ   ருகுதை     யோ                                                              (உள்ளம்)

                                                  தொடுப்பு


               கள்வரோ   வெஞ்சிறை   உள்ளிருந்   தேதீய
               கொள்ளைகள்   செய்யும்   கொடுமையை   எண்ணினால்         (உள்ளம்)

                                                 முடிப்பு


               ஏனென்று   கேட்கவோர்   ஆளில்லை   யா ?  -  மக்கள்
               ஏங்கிய   ழுங்குரல்   கேட்கலை   யா ?
               நாணும்ஈ   னச்செயல்   நின்றிடு   மா ?  -  காவல்
               நாலுஞ்செய்   தேஇதை   வென்றிடு   மா ?  -  எங்கள்                   (உள்ளம்)



               செல்பேசி   நாடகந்   தொடரனு   மா ?  -  காவல்
               சேவையின்   நாணயம்   இடறனு   மா ?
               கொள்ளையர்   குற்றங்கள்   முடங்கிடு   மோ ?  -  அவர்
               கொட்டமும்   முற்றிலும்   அடங்கிடு   மோ ?  -  எங்கள்            (உள்ளம்)


               தீச்செயல்   ஊடாட   யார்உடந்   தை ?  -  சிறை
               சேவகர்   சூழலோபே   சாமடந்   தை ?
               அச்சமும்   ஐயமும்   விலகிடு   மோ ?  -  மக்கள்
               ஆனந்த   பெருமூச்சு   பெருகிடு   மோ ?  -  எங்கள்                       (உள்ளம்)

                                                                                                                                                 -இராதே

வியாழன், 7 நவம்பர், 2013

மாமழை நீர் - உருப்படி

                                                  எடுப்பு


               தேடிப்   பொழியுது   மாமழை   நீர்  -  அதைத்
                              தேக்கி   நிரப்பிடும்   வழிகளைப்   பார்                (தேடி)

                                                  தொடுப்பு


               வாடி   வற்றிடும்   ஏரியெல்   லாம்  -  வளம்
                              மாய   வறண்டிடும்   குளங்களெல்   லாம்        (தேடி)

                                                  முடிப்பு


               ஏரி   முழுதுமே   பயிர்வள   ரும்  -  அதில்
                              எப்படி   நீர்நிலை   உள்நிரம்   பும் ?
               ஊரின்   குப்பைகள்   குளத்தடை   யும்  -  பின்
                              ஊருணி   எங்கணும்   நிறைந்திருக்   கும்          (தேடி)


               ஓடும்   ஓடையில்   வீடுக   ளாம்  -  அதன்
                              ஓட்டம்   தடைபடும்   சாக்கடை   யாம்
               வீட்டின்   கிணறுகள்   பொருட்கிடங்   காம்  -  இனி
                              வெறுமை   உலவிடும்   தடயங்க   ளாம்            (தேடி)


               ஊறுங்   குட்டைகள்   மாய்ந்தன   வே  -  நீர்
                              ஊற்றின்   கண்களும்   ஓய்ந்தன   வே
               ஆறும்   மணல்பட   காய்ந்தன   வே  -  விழும்
                              அருவி   மலைபட   தேய்ந்தன   வே                      (தேடி)

                                                                                                                                             _இராதே

புதன், 6 நவம்பர், 2013

வட்ட நிலா - ஆனந்த களிப்பு

                                                  எடுப்பு


               வட்டநி   லாவானில்   வந்து  -  மிளிர்
                              வண்ணங்கு   ழைந்திட   மேலெழும்   பந்து             (வட்ட)

                                                  முடிப்பு


               எட்டஇ   ருந்தேக   வர்ந்து  -  மனம்
                              ஏங்கிடச்   செய்கிற   கண்கொள்வி   ருந்து
               குட்டிக்கு   ழந்தைக்கே   உன்னை  -  காட்டிக்
                              குழைத்த   உணவினை   ஊட்டுவாள்   அன்னை     (வட்ட)


               சுட்டுக்கா   தல்கதை   சொல்லும்  -  சுவை
                              சொட்டிடச்   சொட்டிட   உள்ளமே   துள்ளும்
               கட்டுக்கா   வல்தனை   மீறும்  -  இளம்
                              காதலர்   வாழ்வினில்   இன்பமே   ஊறும்                  (வட்ட)


               முட்டுங்க   டலலை   சீறும்  -  மோதி
                              முட்டுங்க   ரும்பாறை   மேலலை   மீறும்
               விட்டுக்க   டல்பின்னே   வாங்கும்  -  ஓதம்
                              மீள்விசை   யீர்ப்பினால்   மீண்டநீர்   வீங்கும்            (வட்ட)


               தொட்டுவி   ழுங்குமா   பாம்பு ?  -  பொய்
                              தொடர்கதை   அறிவினைக்   கெடுத்திடும்   வீம்பு
               கட்டுக்க   தைகளோ   வம்பு  -  இதைக்
                              காணாமல்   அறிவியல்   தெளிவினை   நம்பு            (வட்ட)

                                                                                                                                               _இராதே

சிட்டு

சிட்டு  சிட்டுக்  குருவி ;
            சின்ன  சிட்டுக்  குருவி ;
பட்டுப்  போல  மேனி ;
            பார்க்க  அழகு  ராணி ;
குட்டிக்  குட்டிச்  சிறகு ; 
            குலுங்க  விரி யும்  இறகு ;
கொட்டும்  அலகால்  தின்னும் ;
            கொத்திக்  கொத்தி  உண்ணும் !


அல்லும்  பகலும்  தேடும் ;
            அரிய  உணவை  நாடும் ;
நெல்லின்  மணிகள்,  பயிர்கள்
            நெளியும்  புழுக்கள்,  உயிர்கள்
மெல்ல  குஞ்சிற்  கூட்டும் ;
            மேன்மை  தாய்மை  காட்டும் ;
நல்ல  சிட்டுக்  குருவி ;
            நன்மை  பயக்கும்  குருவி !


செல்லும்  போதே  பேசும் ;
            செயலில்  கதிர்கள்  வீசும்
''மல்லல்''  நிறைந்த  கருவி ;
            மடியும்  சிட்டுக்  குருவி ;
கொல்லும்  சூழல்  விடுத்து
            குருவி  அழிவைத்  தடுத்து
தொல்லை  இன்றிக்  காப்போம் !
            துயர  றுத்து  மீட்போம் !
                                                                 -இராதே
                                                                   

மல்லல்= வலிமை
                                                                      -

செவ்வாய், 5 நவம்பர், 2013

கரப்பான் பூச்சி

              
               வெள்ளை  இரத்த  பூச்சி ;
                         விந்தை  யான  பூச்சி ';
               மெல்ல  மேலே  பறக்கும் ;
                         மிரண்டு  கவிழ்ந்து  துடிக்கும் ;
               கொல்லைப்  புறத்தில்  வசிக்கும் ;
                         கூடும்  அழுக்கைப்  புசிக்கும் ;
               தொல்லை  கொடுக்கும்  பூச்சி ;
                         துரத்தா  விட்டால்  போச்சி !


               மீசை  இரண்டும்  நீளம் ;
                         மேயும்  இடமோ  கூளம் ;
               ஓசை  யின்றி  நடக்கும் ;
                         உலவி  நோயைக்  கொடுக்கும் ;
               மேசை  அடுக்கின்  இடுக்கில்
                         மேனி  துறுத்திப்  பதுங்கும் ;
               நாச அணுகுண்  டாலும்
                         நசிந்தி  டாமல்  பிழைக்கும் !
                                                                                      - இராதே

ஆனை

ஆடி  அசைந்தே  ஆடியே
          ஆனை  ஒன்று  வந்ததே ;
ஆடும்  மணியின்  ஓசையும்
          ஆனை  வரவைக்  கூறுதே ;
கூடி யாடும்  குழந்தையர்
          கூட்டம்  பின்னே  சென்றதே ;
பாடி யாடித்  துள்ளியே
          பார்த்துச்  சிரித்து  மகிழ்ந்ததே !


ஆசி  வழங்க  தும்பிக்கை
          ஆனை  தூக்கி  நின்றதே ;
ஊசி  ஒன்றை  பழத்துடன்
          உட்செ  லுத்தி  ஆனைக்கு
யோசி  யாமல்  சிறுவனும்
          உணவாம்  என்றே  வழங்கினான் ;
ஊசி  நெஞ்சில்  குத்தவே
          ஓடி  ஆனை  பிளிறுதே !


கூறு  கெட்ட  மதியுடன்
          குறும்பு  செய்கை  விலங்கினை
ஊறு  செய்து  வாட்டுதே ;
          உயிர்கள்  துயரில்  வேகுதே ;
ஊறும்  அன்பை  உயிரினம்
          உய்யும்  வகையில்  காட்டுங்கள் ;
பேறு  பெருமை  புகழெலாம்
          பெருகி  வந்து  சேருமே !
                                                                 - இராதே