இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 26 டிசம்பர், 2014

தோழர் நல்லகண்ணு பிள்ளைத்தமிழ் - சப்பாணிப் பருவம்

வேய்ந்த  ஓலைக்  கூரையுமே
               வேண்டு  மளவு  கிழிந்திருக்கும் ;
     வேகா  அடுப்பில்  பூனையுமே
               விரும்பி  யுறங்கிப்  படுத்திருக்கும் !



பாய்ந்த  வறுமை  செழித்திருக்கும் ;
               பருவ  மழையும்  பொய்த்திடவே
     பசுமை  யில்லாப்  பயிரிருக்கும் ;
               பட்டி  னிச் 'சா '  நிறைந்திருக்கும் !



காய்ந்த  தலையில்  பிசுக்கிருக்கும் ;
               கண்ணில்  குழியும்  விழுந்திருக்கும் ;
     கடனில்  வீடு  மிதந்திருக்கும் ;
               கருகும்  உழவர்  நிலையிதுவே !



தோய்ந்து  தொடர்ந்து  போராடித்
               துவண்ட  உழவர்  கடன்மீட்ட
     தோழர்  தோழா  நல்லகண்ணே
               தொடரக்  கொட்டுக  சப்பாணி !

                                                                                    -இராதே

வியாழன், 25 டிசம்பர், 2014

தோழர் நல்லகண்ணு -சிறுதேர் பருவம்

திங்கள்  பிறையே !  திருத்தேரே  !
               துவளு  முழவர்க்  காப்பகமே !
     தெருவி  லிறங்கிப்  போராடித்
               திருயே  ருழவர்  கடன்தீர்த்தாய் !



மங்கா  ஒளியே !  மரிக்கடலே !
               மதிப்பில்  மிளிர்ந்த  மணிமுத்தே !
     மயங்கா  மனமே !  அதிதீரா !
               மண்டும்  வைர  பேரொளியே !



சங்காய்  முழங்கித்  தொழிலாளர்த்
               தடைகள்  தகர்த்த  தனிவீரா !
     சகடம்  போலே  உழைக்கின்ற
               தன்னி  கரில்லா  பெருந்தலைவா !



எங்கு  மெழுச்சிப்  புயலாகி
               எளியோர்  வாழ்வைக்  காப்பவனே !
     எளிமை  குன்றே !  நல்லகண்ணே !
               எழுந்து  தடந்தேர்  உருட்டகவே !

                                                                                           -இராதே




சனி, 21 ஜூன், 2014

அழுகை

அழுகையைச்  சொல்லிச்  சொல்லி
          அழுதிட  வந்தே  னிங்கே ;
அழுகையின்  உணர்வைக்  கூறி
          அழுகையில்  வந்தே  னின்று ;
அழுகையால் வாடத்  தானோ
          அன்னையோ  பெற்றால்  என்னை
அழுகையைப்  பாட யானே
          அதிசயப்  பொருத்த  மானேன் !


அழுகைதான்  பிறக்கும்  போதும் ;
          அழுகைதான்  இறக்கும்  போதும் ;
அழுகைதான்  சிரிக்கும்  போதும் ;
          அழுகைதான்  சிறக்கும்  போதும் ;
அழுகைதான்  உள்ளத்  துள்ளே
          அடங்கிடும்  அழுக்கை  யெல்லாம்
அழுக்குடன்  வெளியே  தள்ளி
          அகத்தினைத்  தூய்மை  செய்யும் !


விழிகளில்  ஊறி  நீராய்
          விழுந்திடும்  அருவி  கண்ணீர் ;
பழிகளைத்  தாங்கித்  தாங்கிப்
          பாய்ந்திடும்  வெள்ளம்  கண்ணீர் ;
மொழிந்திடும்  சொற்கள்  நோக
          முகிழ்த்திடும்  முள்ளாய்க்  கண்ணீர் ;
பொழிந்திடும்  அழுகை  யெல்லாம்
          புலன்களின்  உறுத்த  லன்றோ ?


கன்னியின்  காதல்  தோல்வி
          கைவரக்  கரைந்த  கண்ணீர் ;
நண்பரோ  முதுகில்  குத்த
          நனைந்திட  அழுத  கண்ணீர் ;
திண்ணிய  நெஞ்சம்  ஓயத்
          திரட்சியில்  சிந்தும்  கண்ணீர் ;
எண்ணிய  எல்லாம்  வீழ
          எழுந்திடும்  திவலைக்  கண்ணீர் ;


நலிந்தவர்  வாழ்வை  மெல்ல
          நசிக்கிடும்  முதலைக்  கண்ணீர் ;
வலிமையால்  சதியைத்  தீட்டி
          வடித்திடும்  நீலிக்  கண்ணீர் ;
பொலிவுறும்  ஊரை  ஏய்க்கப்
          பூத்திடும்  போலிக்  கண்ணீர் ;
மலிவினில்  மதுவை  உண்டு
          மயங்கிடும்  போதைக்  கண்ணீர் ;


பாசமாய்  வரலாம்  கண்ணீர் ;
          பரிவினில்  வரலாம்  கண்ணீர் ;
நேசமாய்  வரலாம்  கண்ணீர் ;
          நெகிழ்வினில்  வரலாம்  கண்ணீர் ;
பூசலாய்த்  தருமே  கண்ணீர்
          பூட்டிய  அன்பைக்  காட்ட
ஆசையில்  அழுகை  வந்தே
          அடக்கவே  இயலா  தோடும் !


இம்மியும்  இடைவி  டாமல்
          இழுத்தழும்  நாசி  தானே
விம்மியே  கதறிக்  கூவி
          விக்கலில்  கேவி  நின்று
கம்மலாய்க்  குரலும்  மாறிக்
          கட்டிய  தொண்டை  யுண்டு ;
தெம்பின்றி  முணகித்  திக்குத்
          தேம்பிடும்  திணற  லுண்டு ;


ஓலமிட்  டலற  லென்றும்
          ஒப்பாரி  அழுகை  யென்றும்
தாளமாய்க்  குலுங்கி  நின்று
          தவிப்பிலே  அழுவ  தென்றும்
நாளத்தில்  விறைப்புக்  குன்றி
          நடுங்கியே  அழுவ  தென்றும்
காலமாய்  அழுது  தீர்த்த
          காவியம்  பலவும்  கண்டோம் !


கண்ணிலே  தூசி  பட்டுக்
          கலங்கிட  அழுகை  கண்டோம் ;
புண்ணிலே  பட்ட  பாட்டால்
          புலம்பிட  அழுகை  கண்டோம் ;
மண்ணிலே  பட்ட  துன்பம்
          மண்டிட  அழுகை  கண்டோம் ;
கண்ணிலே  விளையும்  உப்பின்
          கரைசலே  அழுகை  யன்றோ ?


அழுவதை  நிறுத்து  போதும்
          அவரவர்  கால்கள்  பற்றித்
தொழுவதை  மறுத்து  பாரும்
          தோன்றிடும்  தெளிவு  மின்னல்
விழுகின்ற  மனதைத்  தூக்கி
          விறைபுடன்  உயர்த்து  மேலே
எழுகின்ற  நம்பிக் கையால்
          இமயமும் துகலாய்  மாறும் !
                                                                              -இராதே
                                                                          

ஞாயிறு, 15 ஜூன், 2014

தூவல் முள்

என் தூவலின்
கவிழ்ந்த முள்ளில்
கலங்கி  வழிகிறது
கவிதை


கனக்கும்  இதயத்தின்
வலிக்கும்  வார்த்தைகள்
வசப்படாமல்
திக்குமுக்காடி
திணறி  கிறுக்குகிறது
தூவல்  முள்


படிப்பதற்குள்
கசங்கி
பந்துகளாய்
உருண்டோடி
குப்பைக்  கூடைகளில்
தஞ்சம்  புகும்
தாள்களின் புலம்பலில்
தவித்திடும்
செவிகள்


உள்ளும்  வெளியுமாய்
ஓடோடி  கனைக்கும்
எண்ணக் குதிரைகளின்
கடிவாளம்
கைவரப்பெறாமல்
தத்தளிப்பில்  சுழலும்
கணங்களில்
காணாமல் போய்விடும்
மகிழ்வு


இறுதித்  தீர்ப்பின்  பின்
ஒடிபடும்  தூவல் முள்
முன்பாகவே
ஒடிகிறது
அவசரத்தில் . . .
                                                -இராதே


நிறப்பிரிகை

வெள்ளொளியாய்
ஊடுருவி
வெவ்வேறாய்  விரிந்து
ஏழொளியாய்
மருவிச்  சிதைந்து
வெளிப்படுததில்
விலகிச்சென்றாலும்
விரும்பி  வந்து
பூசிச் சிரிக்கின்றன
நிறங்கள். . . .



கறுப்பும் வெளுப்புமாய்
நீலமும் மஞ்சலுமாய்
காவியும் பச்சையுமாய்
மாறி மாறி
சிலிர்க்கின்றன
பச்சோந்தியாய் . . .



மௌனங்கள்
பிய்த்துதிர
குழப்பங்களின்
வித்தாய்
அடையாளமிடும்
நிறங்களின்
புன்னகை


அவரவர்  பார்வையில்
பிரியும்  நிறமாய்
நான் !
                                                     இராதே