இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

கொள்கைக் கோமகன் சுப்பையா

மக்கள்  தலைவராம் சுப்பையா ;
          மதிப்பின்  முகவரி  சுப்பையா ;
செக்கச்  சிவந்திடும்  சிந்தனைகள்
          செயலில்  காட்டிய சுப்பையா ;
சிக்காப்  புலியெனப்  போர்நின்று
          சீமை  பிரான்சினை  அடக்கியவர் ;
சொக்கத்  தங்கமாய்ச்  சுடர்விசிச்
          சோரா  துழைத்தவர்  சுப்பையா !



மார்க்சு  ஏங்கல்சு  கருத்துருவை
          மலரச்  செய்தவர்  சுப்பையா ;
கூர்மை  அறிவதன்  திறங்கொண்ட
          கொள்கைக்  கோமகன்  சுப்பையா ;
நேர்மைப்  போராளி  சுப்பையா ;
         நிகரில்  லாதவர்  சுப்பையா ;
தீர்க்க அறிந்திடும்  நுண்மதியால்
          தீர்வு  கண்டவர்  சுப்பையா !
                                                                         - இராதே

புதன், 10 பிப்ரவரி, 2016

வயிற்றுப் புண்

உண்ணுங்க !  தினம்  ஒழுங்கா  உண்ணாம
இருப்பதால்
வயிற்றில்  புண்ணுங்க !                                                 (உண்ணு )


ஆணோ ?  பெண்ணோ ?  காலங்கள்  கருதி
அளவுகள்
அறிந்தே  உண்ணுங்க ! - உலகில்
ஆணோ ?  பெண்ணோ ?  காலங்கள்  கருதி
அளவுகள்
அறிந்தே  உண்ணுங்க ! - இதை
அறியாமல்  உண்டு  அறியாமை  கொண்டு
புரியாமல்  போனா  மண்ணுங்க !                                      ( உண்ணு )


துன்ப   மே வராமல்  இன்பம்  காண
கொறிப்பதை  நிறுத்தியே  உண்ணுங்க ! - இதை
துணையாகக்  கொள்ளும்  மாந்தர்  வாழ்வில்
துயரெது  மில்லை  எண்ணுங்க !                                       ( உண்ணு )


போதைத்  தருகிற  மதுவினைத்  குடிப்பதால்  - அது
பொசுக்கியே  குடலைத்  தின்னுங்க ! - இந்தப்
பொறுப்பில்  லாச்செயல்  புழுத்துத்  தருவது

          இரைப்பைக்  குடலில்  புண்ணுங்க
          இரைப்பைக்  குடலில்  புண்ணுங்க                          ( உண்ணு )


செரித்திடும்  பச்சைக்  காய்கறி  உண்ணச்
செம்மையாக  உடல்  மின்னுங்க ! - நாளுங்
கார மசலா  பிரியாணி  தின்ன
கட்டாயம்  வயிற்றில்  புண்ணுங்க !                                  ( உண்ணு )
                                                                                                                                   -இராதே



 ( சிரிப்பு  இதன் சிறப்பை சீர்த் தூக்கி - மெட்டு )









செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

இன்பம்

என்னவர் ! மன்னவர் ! வடி
          வெண்ணுவர் ! நண்ணுவர் ! நினை
          வேந்துவர் ! நீந்துவர்  நினைந்து !

சொன்னவர் ! அன்னவர் ! மனம்
          சுண்டுவர் ! அண்டுவர் ! நிதம்
          தூண்டுவர் ! தீண்டுவர்  பிணைந்து !


மெல்லின ! புல்லின ! உடை
          மேவின ! தூவின மலர்
          மீறின ! மாறின  இணைந்து !

துள்ளின ! அள்ளின ! விழி
          தோய்ந்தன ! தேய்ந்தன ! மெய்
          சோர்ந்தன ! சேர்ந்தன  அணைந்து !


தின்றன ! மென்றன ! இதழ்
          தீட்டின ! மீட்டின ! இசை
          சீண்டின ! வேண்டின  இணையை

அன்றென ! இன்றென ! மகிழ்ந்
          தாடின ! கூடின ! உயிர்
          அண்டின ! மண்டின  துணையை
                                                                              - இராதே

திங்கள், 8 பிப்ரவரி, 2016

திருவள்ளுவர்

( தான  தனதன  தான  தனதன
   தான தனதன  தனத்தானா )

ஆதி  பகவனை  ஓதி  அறமதை
          ஆளு  முலகெழ          உரைத்தோனே
     ஐய  மறுபட  வைய  முழுமறை
          ஆழ  மொழிநடை          வகுத்தோனே


சேதி  நடைமுறை  கேடு  விடுபடும்
          சீல  முடனதை          வடித்தோனே
     தேடு  மொழிவளம்  மேவ  அருளிய
          தேறு  மறையினை          அளித்தோனே


மேதி  னியிலொரு  ஞான  முளைவிட
          வீறு  மறைதரு          எழுத்தோனே
     மேவு  ஒலியென  நீடு  குறளிசை
          மீள  எழிலுற          இசைத்தோனே


நீதி  எடுபட  மோன  முடைபட
          நீள  அறவுரை          விடுத்தோனே
     நேய  மனமிகு  ஞால  மொழியிடை
          நேதி  நிறுவிட          முனைந்தோனே

                                                                             -இராதே

         நேதி = முறை

சனி, 6 பிப்ரவரி, 2016

வா மயிலே

கண்களினால்  கடத்தினாள்
     காதலாலே  படுத்தினாள்
          காமனுடை  உடுத்தினாள்
               கனவுகளில்  துரத்தினாள் !


வண்ணப் பா   கொலுசழகி
     வளைகொஞ்சும்  இசையழகி
          மணிமுத்துப்  பல்லழகி
               மறுதோன்றி   இடையழகி !


சின்னயிதழ்ச்  சுவையுண்டு
     சிணுங்கல்கள்  பலவுண்டு
          சிலுமிசங்கள்  துணைகொண்டு
               சேர்ந்தணைக்கும்  அழகுண்டு !


மன்மதவில்  புருவத்தாள்
     மயக்குமெழில்  உருவத்தாள்
          மனங்கிளறும்  பருவத்தாள்
               மாதுளம்பூ  நிறமொத்தாள் !


கெண்டைமீன்  கண்ணழகி
     கெம்பு நிற  இதழழகி
          கிள்ளைமொழிச்  சொல்லழகி
               கிறங்கவைக்கும்  மெய்யழகி !


சின்னவிழிப்  பார்வையிலே
     சிரிப்பழகுப்  போர்வையிலே
          செந்தமிழின்  சேர்க்கையிலே
               சேர்ந்துவாழ  வா மயிலே !
                                                                       -இராதே