இராதே

இராதே
eradevadassou

திங்கள், 31 அக்டோபர், 2016

துளிப்பா - 44

பிள்ளையார் தொப்புளில்
பிணத்தின் நெற்றியில்
ஒற்றை நாணயம்



குடைக்குள்
தவளை
காளான்



வானிலை
தோகை விரிக்கிறது
மயில்



குறுக்கே போகிறான்
குழப்பத்தில்
பூனை



பீட்சா , பர்கர்
காணாமல் போகுது
அடை , வடை

                                                    - இராதே

அழகுக் குட்டி பூனை

அழகுக்  குட்டி  பூனை

          ஆளை  மயக்கப்  பார்க்குது ;

துழவு  கைகள்  தூக்கி

          துடிப்பு  நடையைப்  போடுது ;

அழகு  வாலை  நீட்டி

          அன்பைக்  கண்ணில்  காட்டுது ;

பழகச்  சொல்லி  நம்மை

          பார்த்து  வணக்கம்  சொல்லுது !
                                                                           
                                                                                      -  இராதே

துளிப்பா - 43

ஆடு புலி
ஆட்டம்
கருப்புப்பணம்



பொது குடிமை சட்டம்
அரசியல்
சதுரங்கம்



முயல்
ஆமை
முயலாமை



குளத்தில்
விழும் நிலா
தெறிக்கவில்லை நீர்



சக்கர நாற்காலியில்
சுழல்கிறது
அரசியில்

                                                          -இராதே

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

துளிப்பா - 42

புட்டிப்
பழக்கம்
சுடுகாடு வரை



போதைப் பயணம்
பாதை முடிவு
இடுகாடு



விடுதலை வீரர்
அடைபடும் சிமிழ்
சாதி



எல்லாப் பூக்களும்
பூத்திருந்தன
பூக்கூடை



கொட்டைக்குள்
குடியிருப்பு
மாம்பழத்து வண்டு

                                                -இராதே

துளிப்பா - 41

வெட்டுண்ட மரம்
அழுகை
இரப்பர்



செல்பேசிப் பயணம்
வழியனுப்புகிறது
காலம்



எல்லைக் காக்கும் சாமி
உண்டியல்
கொள்ளை



கள்ளிப் பாலில்
கரைகிறது
பெண்மை



மூடிப் போட்ட
முழு நிலவு
பர்தா

                                                     - இராதே

துளிப்பா - 40

தொடங்குகிறது 
பருவ மழை
படகு ?



காகித கப்பல்
புரளுமா
மழை ?



தொலைதூரம்
பெயர்
தொடுவானம்



ஓடினவனுக்கு
ஒன்பதில் குரு
மல்லையா



மாட்டுக்காரனின் பொய்
தலைஆட்டுகிறது
பூம் பூம் மாடு

                                                     -  இராதே

எழிற்காட்சி

இறங்கும்  முகிலினங்கள்  படியெனவே
         
          இயங்கும்  பனிப்படர்வின்  மலைமுகட்டின்

உறங்கும்  பனியுறங்கும்  பனியுருகும்
         
          உரசுங்  குளிருரசும்  உடல்சிலிர்க்கும்

கிறங்கும்  மனஞ்சுவைக்கும்  கதகதப்பில்
         
          கிளரும்  எழிலுலவும்  விழிநடைமுன்

நிறங்கள்  ஒளிவீசி  மிளிர்ந்தோடி
         
          நிரலாய்  மணிப்பரலாய்  விழுமருவி




குருகும்  குயிலினங்கள்  முனகிடுமே

          குலாவும்  மயிலினங்கள்  அகவிடுமே

சருகும் நடையொலியில்  இசைசேர்க்கும்

          சரியும்  மணற்றுகலும்  சலசலக்கும்

பெருகும்  மலையருவி  முழவிடுமே

          பிசகா  இசைமழையைப்  பொழிந்திடுமே

இருகும்  மனநிலையும்  தளர்ந்திடுமே

          இசையின்  வளநலங்கள்  உளந்தொடுமே !

                                                                                                       - இராதே

ஆமை அசைவு

ஆளரவமற்ற 
தனிமை நீட்சியில்
இதய அமைதி
கிழிபடும்
நினைவுப் போராட்டக்
கண்ணீர்த் துளிகள்
கரையும்
சோகம் உணர்த்த
சுமை கூடி
நொடிப் பொழுதுகளில்
கழியும் பயணங்களில்
ஆமை அசைவாய்
நீள்கிறது
வாழ்வு
                                                  -இராதே

எருமை நகர்வு

சொர்ணையற்ற
தோலில்
கொத்தித் தின்னும்
பறவைகளுக்கு
இறைபடும் பூச்சிகள்
விரவி நெளியும்
சேற்றில் புரண்டு
புற்கள் மேயும்
எருமை
அசைபோடலுடன்
நகர்கிறது
வாழ்க்கை !
                                  - இராதே

வெறுமை

போலியான மகிழ்விலும்
புலம்பிடும் கண்ணீரிலும்
மரணிக்கும் மௌனங்கள்
கனக்க
சுமக்கும்
இதய துடிப்புகளில்
இயங்கும் வாழ்வியல்
அந்தாதி
நிறமற்ற
பட்டாம்பூச்சிகளாய்ப்
பறக்கும்
நினைவுகள் !
                                              -இராதே

துளிப்பா - 39

காகம் 
கரைகிறது
விருந்து



நகரும் முகில்
முகம் மறைக்கும்
நிலா



ஈசல்
பறக்கிறது
எண்ணெய்த் தாள்



புகை
நுழைவாயில்
புற்று



கார்பைட் கல்
பழுக்கிறது
நோய்

                                      - இராதே

துளிப்பா - 38

மடை திறந்த
பள்ளம்
மணல்



மணல்வீடு
கலையும் கனவு
அலை



கரையேறுகிறது
காதல் புயல்
தாடி



புதை சேறு
இழுக்கிறது
ஆசை



ஜிங் ஜக்
உயர்கிறது
பதவி

                                    - இராதே

சனி, 29 அக்டோபர், 2016

துளிப்பா - 37

புற்று
கலைமாமணி
கரையான்



அரிசியில் பெயர்
இழுத்துச் செல்கிறது
எறும்பு



சுருளும்
மரவட்டை
சங்குசக்கரம்



உளியின்
வலி
சிலை



மக்கள் மீது வரி
வரிகுதிரை
தோற்கிறது


                                            - இராதே

துளிப்பா - 36

சீனப் பட்டாசு
வெடிக்கிறது
சிவகாசி



சரவெடியில்
கேட்கிறது
கூலியின் அழுகை



மத்தாப்பு 
சிரிப்பில்
மழலையர் வறுமை



கம்பி மத்தாப்பில்
ஜொலிக்கிறது
கொத்தடிமை



தீபாவளி
புஸ்வானம்
வாக்குறுதிகள்

                                             -இராதே

செவ்வாய், 25 அக்டோபர், 2016

துளிப்பா - 35

கண் அசைவில்
கனக்கிறது
காதல்



பொரி தூவல்
மீன்கள்
படையெடுப்பு




டக்டக் டகடக
இசை யிழந்த
தந்தி





குடிநீர்க் குழாய்
நன்றாக வருகிறது
காற்று




அம்மாவின் அணைப்பு
ஆறுகிறது
பசி

                                                        -இராதே






திங்கள், 24 அக்டோபர், 2016

துளிப்பா - 34

ஊர்ந்தே
ஊரளக்கிறது
நத்தை



கலைமான் கொம்பு
கிளையில் சிக்கிய
வாழ்க்கை



ஆளுக்கேற்ப
முடிவுகள்
பச்சோந்தி



எருமை குளியல்
கரை தாவும்
தவளைகள்



தேய்ந்தும்
சுமக்கிறது
செருப்பு

                                   -இராதே






ஞாயிறு, 23 அக்டோபர், 2016

துளிப்பா - 33

அணில் அச்சம்
சீதையின் முதுகிலுமா 
கோடுகள் ?



வடைசுடும் ஆயா
படம் வரைந்த
நிலா



உழைக்க மனமில்லை
பத்து வீட்டுச் சோறு
சுவை



கடலின்
தும்மல்
சுனாமி



சாணியில்
பூசணிப் பூ
மார்கழி

                                              - இராதே








துளிப்பா - 32

தாளமிடும்
பற்கள்
வாடை



கல்மனம்
கசியுமா
காவிரி ?



கொசு வலையில்
மனிதன்
கொசு ?



பெருமாள் சுமை
கழுத்து வலிக்கிறது
கருடன்



புவி விடும்
பெருமூச்சு
நிலநடுக்கம்

                                             - இராதே









துளிப்பா - 31

இரவின்
திறவுகோல்
நிலா



தாலாட்டு
இசைக்கிறது
அலை



தகிக்கிறது
தங்கம்
விலை



கருமேகங்கங்கள்
கபடி ஆடுகிறது
கதிர்



கோவில் மணியோசை
குழைகிறது
நா
                                                - இராதே


வெள்ளி, 21 அக்டோபர், 2016

துளிப்பா - 30

நாணலில்
வளைகிறது
நதி



இழவு விழுந்து
எரிகிறது
வெட்டியான் அடுப்பு


வீணை
அழுகிறது
தலைவர் மறைவு ?




சொட்டும் மழைத்துளி
முகிழ்கிறது
நீர்க் குமிழி




எலிப்பொறி
கருவாடு
காமம்
                                                -இராதே








துளிப்பா - 29

குடைக்குள் 
சொட்டுகிறது
மழை



வீதி பொருட்கள்
வீட்டிற்குள் வீசுகிறது
பைத்தியம் ?



மணி கணக்கில்
மாதவம்
கொக்கு



பனி மேயும் 
காலை
கதிர்




இருளில்
இறக்கிறது
நிழல்

                                      - இராதே