இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 4 நவம்பர், 2016

துளிப்பா - 50

கூண்டு கிளி
சீட்டெடுப்பில்
எதிர்காலம் ?



காதுவரை கம்பளி
களைகட்டுகிறது
குளிர்



அறுவடைநாள்
அடகுக் கடையில்
அரிவாள்



ஒவ்வொரு துளியிலும்
உணவு
மழை



போட்டித் தீ
வளர்கிறது
பொறாமை

                                      -  இராதே

துளிப்பா - 49

படம்
பிடிக்கிறது  வானம்
மின்னல்



எரியும்கோதும்
அடிவாங்குகிறது
பிணம்



பிடி சாம்பலுக்குள்
பிடிவாதங்கள்
வாழ்க்கை



தூண்டில் புழு
துடிக்கிறது
சுவையான மீன்



சலசலப்பில்
இருப்பை உரைக்கும்
சருகுகள்

                                             - இராதே

துளிப்பா - 48

அறை நிரம்பும்
மெழுகு ஒளி
இருள் துறப்பு



கதவுத் திறப்பில்
வெளியேறுகிறது
மௌனம்



வீடு வீடாய்
நகர்கிறது
குப்பைத் தொட்டி


மலையின்
நெத்திச் சுட்டி
அருவி



பிரேம ஆனந்தம்
நித்ய ஆனந்தம்
சிறை ஆனந்தம்

                                         - இராதே

புதன், 2 நவம்பர், 2016

துளிப்பா - 47

கிழிந்த வானம் 
தைக்கிறது
மின்னல்



காது குத்தல்
கதறுகிறது
ஆட்டுக் கடா



மலர்த் தாவும்
வண்டுகள்
மகரந்த கடத்தல்



மனத்தில் ஆடுகிறது
மாற்றான் தோட்டத்து
மாங்கனி



கடை ஏறுகிறது
தாலிக்கொடி
வறுமை

                                             -இராதே

செவ்வாய், 1 நவம்பர், 2016

துளிப்பா - 46

கீழ்வெண்மணி
இன்னும் வழிகிறது
கண்ணீர்



மரணவோலை
வாசிக்கிறது
மது



குடி
மூழ்கும்
குடி



மரணம்
விரைகிறது
விரைவு உணவு



கதறக் கதற வெளியிடுகின்றன
ஊடகங்கள்
கற்பழிப்பு

                                                                -இராதே

துளிப்பா - 45

ஒற்றைத் துளியில்
ஒளிந்திருக்கிறது
நீர்



மழை நின்றதே
கண்ணீர் சொட்டுகிறது
கூரை



அலையும்
முந்தானை
அருவி



இடி தரும்
தந்தி
மின்னல்



ஊசலாடும்
மனசு
பாசம்

                                              - இராதே

பசு

கால்மடக்கித்
தரை சாய்ந்து
உடல் பரப்பி
வைக்கோல் பிடுங்கி
அரைத்து அசைபோடலில்
மணிகுலுங்க தலையாட்டி
வால் சுழட்டிக்
காதசைத்தலில்
அண்டாமல் பறக்கின்றன
கொசுக்களும் , ஈக்களும்
தங்கள் மேய்ச்சலை
இழக்கும் போராட்டத்தில்
மீண்டும் மீண்டும்
மணியோசைக்கு
வழி வகுத்தபடி


மழை சகதியில்
கலந்து கரைந்து
சாணமும் கோமியமும்
மூக்கைத் துளைக்கும்
மணமெழுப்ப
மாட்டுக் கொட்டகை
சிந்தைனை மூளையில்
முளைவிட


அடிவயிற்றெழு
அம்மா . . .
கதறலில்
துயில் களைய
போர்வை நழுவ
கூந்தலைக்  கொண்டையாக்கிச்
சேலை திருத்தி
அரிக்கன் விளக்கொளியில்
தாழ்த்திறந்து
சாக்கு மழையாடை
உடுத்தி
கொட்டகையில்
நுழைகையில்
மெல்ல கால்சுற்றி
முட்டி உரசி
நாவால் வருடி
வாலைக் குழைக்கிறது
கன்றோடு பசு

                                                           - இராதே