இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 19 ஜனவரி, 2018

வெறுமை

அடிவானத்தை
வருடியபடியே
மேல்நோக்கிப் படரும்
பார்வை
நிலவொளியின்
பொழிதலில்
மூழ்கித் தவிக்கும்
நினைவுகள்
உருண்டு வந்து
உலர்க்கோடுகளாய்க்
கண்ணீர்ப் பயணத்தின்
பாதை
உதடுகள் நனைத்த
கரித்த உவர்ப்புச்
சுவை
ஆரவாரமும்
அசைவுமின்றி
கவனித்தபடி
தன் இருத்தலைப்
பதிகிறது
வெறுமை
- இராதே

நாட்காட்டி

காற்றின் இருத்தலைத்
தாளின் அசைவுகளால்
உறுதிப்படுத்திக் கொண்டிருந்தது
ஒவ்வொரு நாள்
கிழிபடும்போது
365 முறை
உணர்த்தப்படுகின்ற
மரணங்கள்
கிழிவதினால்
தேய்கிறதா ? வளர்கிறதா ?
நுழைய வைக்கும்
பட்டிமன்றத் தலைப்பு
ஒவ்வொரு கிழிதலிலும்
ஒரு நாளை வளர்த்துதான்
போகிறது
ஒவ்வொரு தேய்தலிலும்
ஒரு பட்டறிவை
விட்டுத்தானே செல்கிறது
இளைத்து வந்தாலும்
நினைவுகளைத் தொகுத்துதானே
வருகிறது ?
சிலருக்கு அது படம்
சிலருக்கு அது பாடம்
கிழிபட்டு உதிர்ந்தாலும்
ஆண்டொன்றைப்
பெருமையோடுக்
காட்டி மாய்கிறது
நாட்காட்டி
- இராதே

சினம்

என்னைத் தெரிந்தவர்களுக்கு
நான் கோபக்காரன்
ஆனால் பாருங்கள்
யாரும் அச்சப்படுவதில்லை
என்னை அறிந்தவர்கள்
எப்போது கோபப்படுவேன்
என்ற தேர்வு வென்று
கைத்தேர்ந்தவர்களாகி
விட்டனர்
கோபந்தானே எனக்கு
பலமின்மை
அவர்களுக்கு
பலம்
இயலாமை புலப்படும்
கோபத்தைப் புரிந்த
தந்தரசாலிகள்
சாதிக்கின்றனர்
எப்போது அறுபடும்
இந்த கோபம் ?
உடன்பிறந்ததாயிற்றே
விடுமா உடனே ?
குணத்தையுமா
விடச் சொல்கிறீர் ?
குணம் வேண்டின்
கோபம் இருந்து விட்டுப்
போகட்டுமே
- இராதே

நியாத்தை யாரிடம் சொல்ல ?

உண்மையைச் சொன்னால் உதைப்பார்களே
பொய்யோடே பழகியவர்கள்
பூட்டிவைத்துப் பூட்டிவைத்துப்
புழுத்துபோன உண்மைகள்
நிகழ்காலத்தில் செல்லாதாகிக்
கடந்தகாலத்துப் பெருமைகளாய்
வலம் வருகின்றன
உயரே உயரே பறந்தாலும்
ஊர்க்குருவிதானே பொய்
உண்மைதானே பருந்து
மழை பொய்க்கிறது ஆனாலும் பெய்கிறது
ஆருடம் பொய்க்கிறது ஆனாலும் பலிக்கிறது
இவைகள் பொய் தரும் நம்பிக்கை
அடுத்தவன் உழைப்பைச் சுரண்டுவோம்
ஆனாலும் பொதுமை பேசுவோம்
அடுத்தவன் பணத்தில் குடிப்போம்
ஆனாலும் மதுவை ஒழிப்போம்
உண்மை தரும் நம்பிக்கையின்மை
போலிக்குப் போலியானதாய்
உண்மைக்கும் உண்மை உறைந்துகிடக்கிறது
நியாயத்தை யாரிடம் சொல்ல ?
- இராதே

ஒணான்

தென்னங்குச்சி
சுருக்கில் பிடிபட்டுத்
தொங்குகிறது
கல்லடிப் பட்டுத்
துடிதுடிக்கும்
ஓணான்
ஏசுவுக்கு
கொட்டாங்குச்சியில்
...நீர்க் கொடுத்ததாம்
அல்லாவை
தலையாட்டிக்
காட்டிக் கொடுத்ததாம்
மனத்தில்
சொல்லடிப் பட்டு
வளர்கிறது
மழலைப் பருவம்
                                   
- இராதே

புதன், 10 ஜனவரி, 2018

காக்கா முட்டை

மழையில்
அம்மணமாய்க் குளிக்கும்
மரங்கள்
காற்றின்
தலைத் துவட்டலில்
சிந்திச் சிதறும்
துளிகள்
கிளைத் தவழும்
கூட்டிலிருந்து
விழுமா முட்டை ?
கவலையில்
கரைகிறது
காகம்
- இராதே

கோலங்கள்

நீர்த் தெளித்துக்
கூட்டித் தள்ளி
அழகு ஊறக்
காத்திருந்து
புள்ளிகளால்
முத்தம் பெற்று
வளைந்து நெளிந்த
கோடுகளால்
வெட்கப்பட்டு
மார்கழி பூச்சூடும்
வாசலிலே
கால்பட்டு
அழிகின்றன
கோலங்கள்
                                       
- இராதே

சொல்

தேடிக் கொண்டிருந்தேன்
யாரோ இட்டது
எடுத்தேன்
சுற்றும் பார்த்தேன்
பயன்படுத்தினேன்
காக்கை இட்ட
எச்சந்தானே
நாம் உண்ணும்
பழங்கள்
விதை சொல்
எடுத்தாளுகையில்
கருத்தடிப் பட்டு
சாகாமலிருப்பின்
கவிதை

                                           -
இராதே

பரண்

சிலந்தி நெய்த கூரையில்
தூசிப் போர்வைக்குள்
துயின்றிருந்தன
சுவடிகள்
தும்மலுக்குக்
கம்பளம் விரிக்கும்
பழைமை நெடி
நாசி புகுதலில்
கிளர்ந்தெழும்
ஓசைகள்
எலி கொறித்த
பக்கங்களில்
தேடினேன்
காணவில்லை
கவிதை வரிகள்
                                             - இராதே

தொப்பை

இரைப்பும்
பெருமூச்சும்
ஏந்திச் சுமக்கும்
பெருஞ் சுமை
கடற்கரை
நடைபயிலலி்ல்
நகை படும்
காட்சிப் பொருள்
நித்தம் நித்தம்
உருட்டி மிரட்டிச்
சுரண்டியதில்
வாரிகட்டிக் கொண்ட
வயிற்றுப் பானை
யாருடைய உழைப்பில்
வளர்ந்திருக்கிறது
இந்த கொழுப்பு ?
கரையுமா
கண்ணீத் துளிகளுடன்
கனக்கிறது
தொப்பை ?

                                   
- இராதே

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

பைத்தியம்

கடலலைகளின் சிரிப்பு
கரைகளில் நுரைக்கிறது !
மழைத்துளிகளின் சிரிப்பு
தெறிப்பினில் சிலிர்க்கிறது !
மலைகளின் சிரிப்பு
அருவியில் வழிகிறது !
தென்றலின் சிரிப்பு
தழுவலில் மிளிர்கிறது !
மலர்களின் சிரிப்பு
மணங்களில் கமழ்கிறது !
தனிமையில் ...
கவிஞனின் சிரிப்பு
பைத்தியமாகிறது ?

மௌனம்

எப்படித் தான் வெளியே
செல்வது ?
ஒன்றோடு ஒன்றுக்கூடி
குழப்பத்தில்
முணுமுணுத்தன
சொற்கள்
ஏன் இப்படி
நடந்து கொள்ளகின்றன
உதடுகள் ?
திடீர்
வேலை நிறுத்தத்தால்
கூடுதல் பணிச்சுமை வருமே
கதிகலங்கிப் போயிருந்தன
விழிகள்
ஓசைகளும் அசைவுகளும்
சிக்கலுக்குத் தீர்வுக் காண
வாயிடம் முறையீடு
செய்து கொண்டிருந்தன
பேச்சற்றச் சூழலில்
இவற்றையெல்லாம்
பொறுமையாக
வேடிக்கை பார்த்தது
மௌனம்
- இராதே

சனி, 6 ஜனவரி, 2018

இரவு

சீக்கிரம் தூங்கேன்
கண்களிடம்
கெஞ்சிக் கொண்டிருந்தது
கனவு
புரண்டுப் புரண்டுப்
படுக்கைக்கு உடம்புப்
பிடித்து விட்டது
உடல்
போர்வையை விலக்கலும் அணிதலுமாய்ச்
செய்வித்தது
குளிர்
கவலைகள் மட்டும்
கொட்டக் கொட்ட
விழித்திருந்தன
கொட்டாவிச்
சத்தத்தைச ரசித்தபடி
இரவு
- இராதே

புழு

இலைகளைக் கடித்து
உண்டபடி
ஊர்ந்துகொண்டிருந்தது
பணமதிப்பிழப்பால்
வங்கி வாசலில்
தவங்கிடக்க வில்லை
GST வரி செலுத்த வேண்டுமெனப்
புலம்பிப் புலம்பி
அழவுமில்லை
மாட்டிறைச்சி உண்டால்
மரணிப்போம் என்ற
அச்சமுமில்லை
கருப்புப் பணபங்கு
வங்கிக் கணக்கில்
விழுமா ? விழாதா ?
கவலையுமில்லை
அமைதியாக
இலைகள் தேடி
ஊர்ந்துகொண்டே
பயணித்தது புழு
- இராதே

வெள்ளி, 5 ஜனவரி, 2018

துளிப்பா - 53

காலடி தீண்டியதில்
முணுமுணுக்கும்
சருகுகள்



வெற்றிபடி ஏற
கைப்பிடித்துசெல்கிறது
தோல்வி



முத்தத்தில்
முணுங்குகிறது
புல்லாங்குழல்



கல்லடிபடுகிறது குளம்
சில்லுசில்லாய்
நிலா



கிச்சுகிச்சு மூட்டும் தென்றல்
நெளிகிறது
கொடி


                                                                        - இராதே

கஜல் கவிதைகள் -3


நிலாப் பெண்ணே ! நீ கொஞ்சிப் பேசு
நிலமகள் இருளகல ஒளிவண்ணம் புசு

விண்பிளந்து மண்ணளக்க மின்னல்கொடி வீசு
மிதமிஞ்சும் சுடர்த்தெறிக்கும் ஒளிப்பலா மூசு

நீரலையின் புதுவரவு ! நுரைதாங்கும் தூசு
நித்தமொரு மின்சிரிப்பில் ஒலிக்கும் வெள்ளிக் காசு

ஆழ்மனத்தில் அகற்றிடுக துன்பந்தரும் மாசு
அன்போடு மொழிபகர் குறைந்திடும் ஆசு

                                                                                                 - இராதே

கஜல் கவிதைகள் - 2


ஆழ்மனக் கனவுகள் மெய்ப்பட வருமோ ?
வராதெனின் உறக்கந்தான் பொய்யெனத் தகுமோ ?

எந்நினைவு மனக்குகைக்குள் எவ்வழியில் புகுமோ ?
எந்நாளும் கருத்தெண்ணித் தத்தளிப்பில் விடுமோ ?

கருத்தில்லாக் கனவுகளே கற்பனையின் தொடக்கம்
விரிவான வெளிச்சங்கள் விடைதேடி முடக்கம்

குழப்பத்தில் கவலைகளின் குட்டிகள்தாம் திரியும்
குறைதீர மௌனங்கள் சான்றுகளாய் விரியும்

விண்மீன்கள் சுடர்விட்டு விளக்கொளியைப் பொழியும்
விடைபெறுமா இரவுகள்? விடைதருமா கனவுகள் ?


                                                                                                     - இராதே

கஜல் கவிதைகள் - 1

கூந்தலில் சொட்டின நீர்த்துளிகள்
ஏந்திடும் நம்காதலின் தேன்துளிகள்
****
கடித்துத் துப்பினாய் நகங்களோ பிறைநிலாக்கள்
துடிக்கும் காதலின் மிசைநுழை மனஉலாக்கள்
****
குதிகால் நடுவமாய்க் கட்டைவிரலில் வரைகிறாய்
புதியவரைகலை காதல் பிறைவிட்டம்
****
பறிக்கும் மலர்களோ உன்விரலால் கூச்சப்படுகிறது
பரவசக் காதலில் மோட்சம்பெறுகிறது
****
கசிந்துருகி கண்ணீர்மல்க மனமேறும் காதல்
பிசின்போல் ஒட்டி பிரிய மறுக்கிறது
****
சிமிட்டும் விழிகளில் சீறும் காதலலைகள்
சிட்டிகை நொடியில் மனநுழைந்து மௌனிக்கின்றன
****
கொலுசுகள் காதல்ஜதி சொல்லிக் களிக்கின்றன
இளசுகள் மனந்தவழ்ந்து துளிர்க்கின்றன
****
இடைஇடையே நெளிந்தாலும் காதல்
இடமறிந்து நழுவுகிறது பிரியாமலே
                                                                    
                                                                                                      - இராதே

துளிப்பா - 52

தவளை தாளத்தில்
ததிகினத்தோம் போடும்
மழை


ஈசல்கள்
எக்கச்சக்கமாய்
எண்ணெய்த் தாள்


தூக்குத் தண்டனை
தொங்குகிறது
மனித நேயம்


இன்னும் உறுத்துகிறது
நினைவல்ல
துரோகம்


ஒற்றைப் புல்லின் தலையில்
நீர்க்குடம்
பனித்துளி


                                                               - இராதே

துளிப்பா - 51

குளத்து கோப்பையில்
ஒருதுண்டு நிலாதொட்டு
பசியாறுகிறது இயற்கை


ஒரு குடம் தண்ணீர்
அதிலும் ஓட்டை
நத்தை


வெளியில் கூச்சமின்றி
உடை கழற்றுகிறது
பாம்பு


பார்வை பாய்ச்சலில்
களவாடப்படுகிறது
நூலிடை


சிக்கல்களில்
முக்கியப் புள்ளிகள்
சிக்குக் கோலம்


                                          - இராதே

வியாழன், 4 ஜனவரி, 2018

தனிமை

நிழல் குல்லா
மாட்டிவிடும்
மரங்கள்
பாதங்களுக்குப்
பனி உணர்த்தும்
புற்கள்
வண்ணங்களின்
வகை அறிவிக்கும்
மலர்கள்
கீச்சிடல்களால்
இருப்பைப் பதிவிடும்
பறவைகள்
இறந்த காலங்களைத்
தோண்டிப் பார்க்கும்
நினைவுகள்
இப்படியாக
தனி ஆவர்த்தனம்
வாசித்தபடி இருந்தது
தனிமை
- இராதே

பிணம்

புகழ் , பெருமை
பட்டம் , விருது
பதவி , பணமென
அடையாளங்களேந்தி
வானுக்கும் பூமிக்குமாய்க்
குதித்தபடி இருந்தது
மனம்
நீ யாரென்றேன் ?
ஒவ்வொன்றாய்
அடையாளங்களைக்
கழற்றி வீசியது
களைந்ததில் மிஞ்சியது
பிணம்
குதித்தபடி இருந்த
மனத்தினைத் தேடினேன்
காணவில்லை ?
- இராதே

பொழுது

யாருமற்ற வெளியில்
நான்
நேரங்கள் சிந்தனைகளால்
களவாடப்பட்டன
என்னை
ஏறஇறங்கப் பார்த்துத்
தலைகோதி சென்றது
காற்று
யாரடா இவன் ?
எரிச்சல் பார்வையில்
மௌனம் சாதித்த
மரங்கள்
கைகள் பிடுங்கியப்
புற்களில் பனிநீர்
அழுகை
அகல விரிந்த
விழிகளுக்குள்
கவிதை பிறந்த மகிழ்வில்
பொழுது விடிந்தது !
- இராதே

ஐயனார் கோவில் முட்டை

யாருமற்ற இரவில்
சுற்றும் முற்றும்
நோட்டம் விட்டபடி
அடியெடுத்து வைக்கிறான்
மஞ்சைப்பைத் துழாவியதில்
வெளிவந்த முட்டை
உதடுகளின் உச்சரிப்பில்
சிலநொடிகள்
உருவேற்றலின் பின்
ஐயனார் குதிரையின்
கால்களில் தஞ்சமடைகிறது
முட்டை வைத்தாகிவிட்டது
யாருக்கு வலிக்கிறதோ? இல்லையோ?
முட்டையிட்டக் கோழிக்கு
கண்டிப்பாய் வலித்திருக்கும் !
- இராதே

சருகுகள்

மெல்லஅடியெடுத்து
வைக்கும்போது
சர் என்றும்
வேகமாக ஓடும்போது
சரசர என்றும் ஒலியுணர்த்தலில்
வலியினைப் பரிமாறிக் கொள்கின்றன
கிளைகளிருந்தபோது
வருடிய காற்றில்
சலசலத்தும்,
சிலிர்த்தும்
புயல்காற்றில்
ஓவென்று கதறியும்
மழையில் நனைந்ததில்
கண்ணீராய்ச் சொட்டியதும்
இளமை கால நினைவுகள்
காய்ந்து உதிர்ந்து
காலடிகளில்
மெறிபட மெறிபட
பட்டறிவில் பிடிபடுகிறது
வாழ்க்கை !
- இராதே

நெசவு

சடசட சடவென
பஞ்சுமேகத்திலிருந்து
நூலெடுத்து
வானத்துக்கும் பூமிக்குமாய்
இழைகளை முடிச்சிட்டுக் கொண்டே
ஏரி , கிணறு , கண்மாயென
எண்ணற்ற அழகியத் தரைவிரிப்புகள்
மலைமகளுக்குத் தாவணியும் ,
துப்பட்டாவுமான அருவிகள்
சில இடங்களில் அலையும்
திரைச் சீலைகள்
இயற்கையின் பச்சைப்
போர்வைக்கு
வெள்ளை கரை வைத்த ஆறுகள்
சின்னச் சின்னத் துண்டுகள் ,
துப்பட்டாக்கள் , ரிப்பன்களென
வாய்க்கால்கள்
கொசுறாகக் குட்டையைக் கைக்குட்டை என வகைவகையாய்
நெய்தது மழை
தான்தோன்றியாக
அனைத்தையும் கிழித்து
கந்தல் துணியாக்கி
வீணடிக்கிறோம் நாம் !
- இராதே

காலை


பகல் முடிய
இரவென்னை இருளுக்கிழுக்க
ஊரடங்க "நள்" ஒலியின்
உளறும் நள்ளிரவில்
எங்கோ கேட்டபடி
நாய்க்குரைக்கும் ஓசை
செவியில் நுழைய
கொறட்டைகளின் போட்டியிலே
தூக்கந் தடுமாறப்
புரண்டு படுக்கையிலே
செருப்பின் சறுக்கல்கள்,
பேச்சுக்கள் முன்பின்செல்ல
குளிர்கால ஏகாதசி
நடுநிசிக் காட்சிகள்
நினைவைத் தூண்டக்
கண்ணிழுக்கும் வேலை
கன்னக்கோல் கள்வர்களின்
கைவரிசை நடப்பறிந்து
முன்னிருக்கும் கதவை
முட்டிப் பார்த்து
முடிந்தவரை தள்ளிவோய்ந்து
பின்னிருக்கும் படுக்கையிலே
மெல்லச் சாய
எதிர்வீட்டுச் சன்னலிலே
விளக்கெரிய வெளிச்சம்பாய
வெளியூர்ச் செல்ல
வாசலிலே சாணமிட்டுக்
கோலம் போட
சர்என்றுச் செய்தித்தாள்
கதவில் மோத
பின்தொடர பால்பைகள்
பொத்தென வீழ
சந்தடிகள் நடமாட்டம்
சகலமும் மேவ
சரி வாரேன் நானென்றுச்
சந்திரன் மறைய
சட்டென விடிந்ததே
காலைப் பொழுது
- இராதே