இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 26 மே, 2013

ஆசைகள்

தெளிந்த நீரோடையாய்
பயணப்படும் எண்ணங்களில்
நிரம்பி வழிகின்றன
அணையிடும்
ஆசைகள் !

கனவுகளால்
காயப்பட்டே
ஆசைகளோடு
சலனப்பட்டுக்கிடக்கிறது
மனசு !

எச்சில் ஊறும்
இனிப்பகள்
மறக்கடிக்கப்பட்ட
நாக்கு !

காரங்களுக்கும்
புளிப்புகளுக்கும்
கடிவாளம் இடும்
வாய் !

உப்பில்லாப் பண்டங்கள்
உட்செல்லும்
குப்பைத்தொட்டி
வயிறு !

காணக்கிடைக்கும்
தின்பண்டங்களைத்
தின்பதற்கில்லா
ஏக்கத்தில்
வயசு !

மருத்துவத்தில் வாழ்வு
நடத்த செபிக்கும்
மூளை !

உப்புச் சப்பில்லா
உயிரைப் பிடித்து
வைத்து கொள்ளும்
போராட்டத்தில்
ஆசைகளால்
களவாடப்படுகிறது
வாழ்க்கை !
                                            -இராதே

சனி, 25 மே, 2013

இன்னும் நீ . . .

                                                        

   

மறந்து விடாதே
மானிடனே !

எச்சங்களை
ருசித்துக்கொண்டு
உச்சங்களை
அடையாமல்
மிச்சத்தில் தான்
இன்னும் நீ ...

மூச்சுத் திணறலில்
மூழ்கடிக்க வைக்கும்
முற்றிய  சாதிமையிருட்டால்
மூடிய அறையில் தான்
இன்னும் நீ ...

மதமாச்சர்யங்கள்
மூட்டியிருக்கும்
மூட்ட இருக்கத்தில் தான்
இன்னும் நீ ...

சாதி சாக்கடையில்
சல்லாபிக்கும்
புழுக்களாய்
புழுத்து கிடக்கிறாய்
இன்னும் நீ ...

வாய் கிழிய
சத்தமிடும்
வறட்டு தவளையாய்
கிணற்றுள் கிடக்கிறாய்
இன்னும் நீ ...
                                                    -இராதே