இராதே

இராதே
eradevadassou

சனி, 24 ஆகஸ்ட், 2013

வருமுன் காப்போம் ! ( பஃறொடை வெண்பா )

அருவியின்   துள்ளல்   அழகும் ;  பறக்கும்
குருவியின்   கொஞ்சிக்   குலாவலின்   இன்பும்
உருகிடும்   நெஞ்சினில்   ஊற்றாய்   மகிழ்வு
தருமாம் !  புவியைத்   தரிசாக்கும்   செய்கை
அருளிலார்   செய்வார்கள்   அவ்வளவும்   பல்கிப்
பெருகும்   விளைவாலே   பேருலகு   மங்கும் !
விரும்பும்   இயற்கை   விழிகளின்   மூடல்
அருகும்   புவியின்   அழிவைக்   குறிக்கும் !
எரியும்   விளக்கெல்லாம்   ஏகமாய்க்   கக்கும்
கரியின்   புகையது   காற்றில்   கலக்க
விரியும்   ஓசோன்   விழுந்திடுமே   ஓட்டை
சொரியுமே   உள்ளே   சுடரும்   கதிர்கள்
பொரிந்திடும்   வெப்பம்   பொசுக்கிடும்   ஊதா
அரித்திடும்   யாக்கையை   ஆறாத  சூட்டால்
மரிக்கும்   இயற்கை   வளங்களுமே   மெல்லச்
சரியும்   பனிச்சூழ்   தளரா   மலைகள் !
புரிந்தும்   இமைமூடிப்   பூனைபோல்   பூசை
புரியும்   புவியீர் !  புறவுலகைக்   காக்க
வருக !  வளமான   வையகம்   வளர
வருமுன்   கெடுதல்   வரவைத்   தடுக்கத்
திருவுலங்   கொண்டுடன்   தீமைகள்   விடுத்தே
அரும்பிடும்   பூமி   அழகுடன்   மிளிரச்
சுருங்கும்   புறங்களின்   சூழல்   துளிர்க்க
நெருங்கும்   அழிவை   நிறுத்து !
                                                                                               -இராதே

1 கருத்து: