இராதே

இராதே
eradevadassou
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 ஜூலை, 2025

அவனைத் திருத்தாதே !

 அவனைத் திருத்தாதே !


அவனைத் திருத்தாதே

   அப்படியே விட்டுவிடும் ;

ஆழ்ந்த ஊழலிலே

   அமிழ்ந்தே உழலட்டும் ;

ஆசை பித்தனவன்

    அடங்காப் பெருமனத்தான் ;

காசைப் பார்ப்பதற்கே

    காசினியில் வாழ்கின்றான் ;

ஓசை யில்லாமல்

     உளமறியத் திருடுகிறான் !


என்ன இழிப்பிறப்போ !

    ஏழ்பிறப்பும் கள்மனமோ ?

கண்முன்னே களவாடிக்

    காசுபணம் ஈட்டுகிறான் ;

எண்ணிப் பார்க்கையிலே

     எல்லாமுந் தன்னலந்தான் ;

தன்னை உயர்த்திடவே

    தப்பாட்டம் ஆடுகிறான் !


கள்ளப் பணம்பெற்ற 

    காரணத்தால் மகிழுங்கால் 

பொல்லாச் சிறைவருமோ ?

    பொல்லாப்பு உடன்வருமோ ?

எல்லா வல்வினையும்

        எதிர்கொண்டு துரத்திடுமோ ?

தொல்லைத் தொடர்ந்திடுமோ ?

      துணைகள் விலகிடுமோ ?


எதையும் பாராமல்

     எண்ணியதே இலக்கென்றே

இதயம் இல்லாமல்

     இழிச்செயலில் உறவாடிப்

புதையும் மண்பதையில் 

     பொருளே உயர்வென்றே

கதையும் கதைக்கின்றான்

    களிப்பில் மிதக்கின்றான் !


கோடிக் கதிபதியாய்க்

    கோபுரமாய் வீடமைக்கக்

கூடிக் கொள்ளையிட்டுக்

      கொக்கரித்து திரிகின்றான் ;

நாடி வரும்நல்லோரை

     நயமாய் நஞ்சூட்டி

கேடில் விழாச்செய்தே

     கைக்கொட்டிச் சிரிக்கின்றான் !


நண்பர் இடித்தாலென்ன ?

     நல்லுரைகள் நவின்றாலென்ன ?

இன்பம் பணமென்றே

    எள்ளி நகையாடுகிறான் ;

உண்பது ஒருநாழி

    உடுப்பது ஒருமுழம்

என்ப தெல்லாமவனுக்கே

    ஏறா மதியுடைமை !


 அவனைத் திருத்தாதே

    அப்படியே விட்டுவிடும் !


              - இராதே


ஞாயிறு, 23 ஜனவரி, 2022

நீடு துயில் நீக்கவந்த ஞாயிறு !

 நீடு துயில் நீக்கவந்த ஞாயிறே ! 

 ( தமிழ்மாமணி 'ஆனந்தா' ந.கோவிந்தசாமி அவர்களின் 104 ஆவது பிறந்தநாள் 18.01.2022 )


தும்பை தோற்கும் தூய வெள்ளை 

 துலங்கும் சிரிப்பைத் தூவுகின்ற ராசரே ; 

அம்பை போல விரைந்துச் சென்று 

 அருமை தமிழை ஆதரித்தத் தீரரே ; 

வம்புப் பேசி வாழும் உலகில் 

 வாய்மை பேசிப் பேரெடுத்தத் தூயரே ; 

தெம்பு கொண்டு தேகப் பயிற்சி 

 தினமும் கண்டே ஆர்ப்பரித்தச் சூரரே ! 



 இளமை தொட்டே இலக்கி யத்தை 

 ஈர்த்துக் குடித்தே ஈன்றமழை மேகமே ; 

வளமை யான குரலின் வீச்சில் 

 வண்ணத் தமிழை ஒலித்துநின்ற கீதமே ; 

தலைமை யேற்றுத் தொண்டில் துயரைத் 

தடுக்கப் பாய்ந்தே ஓடிவந்த நேயரே ; 

நிலையில் நின்றே ஒழுக்கம் ஓம்பி 

 நீடு துயிலை நீக்கவந்த ஞாயிறே ! 



 கன்னித் தமிழைக் கம்பர் புகழைக் 

கண்ணின் இமையாய்க் காத்துநின்ற வீரரே ; 

அன்பர் சங்கர் தாசர் நினைவை 

 ஆண்டு தோறும் போற்றிவந்த சீலரே ; 

இன்பத் தமிழை அள்ளிப் பருகி 

 இளமை எழிலில் தோன்றிவந்த ஈசரே ; 

அன்பு வெள்ளம் புரண்டே ஓடி 

ஆனந் தஆறாய்ப் பாய்ந்தெழுந்த நேசரே ! 



 காலைத் தொட்டே காலன் ஓட 

கடுமை யான நடைபயில்கோ விந்தரே ; 

வேளை தோறும் உணவை அளவாய்த்

 தேடும் வேள்வி நிகழ்த்திவென்ற சித்தரே ! 

தாளை வணங்கி போற்றி நெகிழ்ந்தேன் 

தமிழின் இசையைக் கூட்டுகின்ற நாதரே ; 

நாளை உலகம் உந்தன் வாழ்வை 

நாளும் நாளும் வாழ்த்தியென்றும் பாடுமே !

                                                                    - இராதே

வியாழன், 26 ஜூலை, 2012

காற்று !

என்னைத்     தெரிகிறதா ?  -  நான்
யாரென         புரிகிறதா  ?
கண்ணில்     புலப்படா     திருந்திடுவேன் ;
கமக்கமாய்   நாசியில்       புகுந்திடுவேன் !                                 (என்னை)



மெல்ல          அறைக்குள்    நுழைந்திடுவேன் ;
மேனி             சிலிர்க்கக்      குளிர்ந்தெழுவேன் ;
மேசையில்   பொருட்கள்   கலைத்திடுவேன்  -ஒளிர்
மெழுகின்       சுடரை          அணைத்திடுவேன் !                         (என்னை)



அசையும்      கதவுகள்          என்னாலே ;
இசையும்       எழுந்திடும்     என்னாலே ;
விசையும்      இயங்கிடும்   என்னாலே  -அதில்
விளையும்     பயன்களும்   என்னாலே !                                      (என்னை)



வேலிகள்    ஏதுமே      எனக்கில்லை ;
போலிகள்   கூட            எனக்கில்லை ;
மாளிகை     குடில்கள்    சமமெனக்கு  -  பெருங்
கோலியாம்   புவியே    குடியெனக்கு !                                        (என்னை)



மலரின்       வாசமாய்       மணந்திருப்பேன் ;
உலர்மீன்   வாடையைச்    சுமந்திருப்பேன் ;
குளிரும்     வெப்பமும்          ஏற்றிருப்பேன்  -  ஆலை
அலறும்     சங்காய்           ஒலித்திருப்பேன் !                              (என்னை)



உதைபடும்        பந்தின்     உள்ளேநான் ;
ஊதிய          பலூனின்       உருவம்நான் ;
உருளும்      வண்டியின்   ''டயரு''ள்ளே  -  அதன்
உயிர்ப்பாய்   இருக்கும்  செயலும்நான் !                                   (என்னை)



என்னைத்    தெரியா    திருக்கின்றாய்
உன்னை   இயக்கும்   உட்பொருளாய்
முன்னே      பின்னே    மூக்கினுள்ளே  -தினம்
திண்ணமாய்   உலவும்    உயிர்நானே  !

                                                                        -இராதே

ஞாயிறு, 15 ஜூலை, 2012

தூசி

என்னைத்   தெரிகிறதா  ?

நான்   யாரெனப்   புரிகிறதா  ?

மண்ணில்   இருந்தெழுவேன் ;

விண்ணிலும்   நிறைந்திருப்பேன்  !



திண்ணைத்   தெருக்களில்

படிந்திருப்பேன் ;

தினம்வீசிடும்   காற்றிடைக்

கலந்திருப்பேன் ;

கண்ணைக்   கசக்கி

அழவைப்பேன் ;

கண்ணீரை   ஆறாய்

வரவழைப்பேன்  !



நாசிக்குள்   நாசுக்காய்

நுழைந்திடுவேன் ;

நுரை யீரலகத்தின்

தன்மைக்   கெடுப்பேன் ;

நாளெல்லாம்   குடைச்சல்

நின்று   தருவேன் ;

''நச்''   செனத்   தும்மலாய்

மாறிவருவேன்  !



சுதந்தரமாய்   நோய்களைப்

பரப்பிவிடுவேன் ;

சுகமின்றி   மக்களைச்

சுற்றவிடுவேன் ;

சூழ்ச்சியால்   சுற்றுச்சூழல்

நலனழிப்பேன் ;

சுத்தத்திற்கு   முன்னின்று

கதவடைப்பேன்  !



ஒவ்வோர்    இடந்தனிலும்

ஒளிந்து   புகுவேன் ;

ஓசையின்றி   மெதுவாய்

பதுங்கியிருப்பேன் ;

ஒருநாளும்   நன்மைதனைச்

செய்வதறியேன் ;

ஓலைத் துடைப்பம்   வத்தாலோ

ஓடிஒழிவேன்  !



தட்டிவிட்டால்   என்னைத்

தாவியெழுவேன் ;

தயங்காமல்   ஒவ்வாமை

உணர்ச்சித்   தருவேன் ;

தாளாத   இம்சைக்கு

வழிவகுப்பேன் ;

தண்ணீர்   கொண்டகற்றினால்

கரைந்து  மறைவேன்  !



சகதியும்   சேறும்தான்

என   பிறப்பிடம் ;

சாக்கடை   குப்பைகள்

தான்   உறைவிடம் ;

சட்டெனப்   பறப்பதால்

நான்   புழுதியானேன் ;

சகலரும்   வெறுக்கின்ற

அவதியானேன்  !

                                 -இராதே