தங்கத்தைத் தகரம் என்பார் ;
தறுதலையைத் தலைவன் என்பார் ;
வெங்காயம் உருளை என்பார் ;
வேரினை விழுதே என்பார் ;
திங்களைப் பரிதி என்பார் ;
தீம்பழம் கசப்பே என்பார் ;
இங்கிவர் சொல்வ தெல்லாம்
இயங்கிடா அறிவி னாலே ! ( 1 )
பொங்குமா அறிவு வேண்டின்
புதையலாம் கருத்துச் செல்வம்
தங்கிய சரித்தி ரத்தைத்
தரணியில் படிக்க வேண்டும் ;
எங்கெலாம் கலைகள் உண்டோ
எதனையும் விட்டி டாமல்
அங்கெலாம் அலைந்து சென்றே
அதனையும் கொணர்ந்து சேர்ப்போம் ! ( 2 )
பெரிதினும் பெரிது கேட்போம்
பெருமையே வாழ்கை யாக
அரிதினும் அரிய கல்வி
அன்பினில் இணைந்து கேட்போம்
விரிகதிர் போல ஞானம்
வியன்கடல் போல பண்பு
தரித்திட நிலத்தில் நாமே
சரித்திரத் தேர்ச்சி கொள்வோம் ! ( 3 )
கற்றலின் தெளிவு காணும் ;
கற்பனைத் திறமும் மேவும் ;
பற்றது புரிந்து போகும் ;
படிப்பது விரிந்து நீளும் ;
எற்றிடும் குணங்கள் மாறும் ;
எஃகுபோல் வலிமை சேரும் ;
நற்றவ உலகில் நாமும்
நல்லதோர் இடத்தில் நிற்போம் ! ( 4 )
வாழ்ந்தவர் சுவடு தானே
வரலாற்றுப் பதிவாய் மாறும் ;
ஆழ்ந்த்தைத் தெரிந்து கொண்டால்
அறிவியல் புரிதல் கூடும் ;
சூழ்ந்திடும் துன்பம் நீக்கித்
துரத்திடத் தீர்வு தோன்றும் ;
பாழ்படும் நாட்டின் போக்கைப்
பக்குவ வழியில் மாற்றும் ! ( 5 )
ஆதலால் கற்பீர் நன்றாய்
அகிலத்தின் சரித்தி ரத்தைக்
காதலாய் உருகிக் கற்றுக்
காப்பீரே குவல யத்தை !
மாதரார் உயர்வு கல்வி
மதிப்பையும் கொடுக்கும் இந்த
ஓதலை ஒழுங்காய்ப் பெற்றே
உயருக புவியில் நீரே ! ( 6 )
தூரத்தில் ரஷ்ய நாட்டில்
துளிர்த்தெழு புரட்சி தன்னை
நேரத்தில் பாக்க ளாக்கி
நேர்த்தியாய்ப் படையல் தந்தான் ;
தாரணி குறித்து நமக்குச்
சரித்திர கதைகள் சொன்னான் ;
பாரதி கருத்து வோட்டப்
பாதையில் நடந்து வெல்வோம் ! ( 7 )
பாரதிர் புரட்சி சொன்ன
பைந்தமிழ்த் தேனீ எங்கள்
பாரதி கூறும் நல்ல
பண்பினை வளர்த்து கொள்வோம் !
சாரதி அவனின் கூற்றாம்
சரித்திரம் தேர்ந்தே கொள்கைத்
தேரதில் பவனி வந்து
தேசத்தை மீட்போம் ! காப்போம் ! ( 8 )
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக