இராதே

இராதே
eradevadassou
கண்ணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்ணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 ஜனவரி, 2025

கொடுமை முளைவிடு நெஞ்சர் !

 கொடுமை முளைவிடு நெஞ்சர் !


இந்தியப் பொன்னெழில் நன்னாடே ! - உம்மை

   ஏய்த்துப்பி ழைப்பவ ராரே டி ?

முந்திப் பெருபண மூட்டை கட்டு கின்ற

   முதலாளி வர்க்கத்தின்  எத்த ரடி !

ஒற்றுமை பேணிடும் பொன்னாடே ! - உம்மை

   ஓடேந்த வைப்பவ ராரே டி ?

கற்றுத்தெ ளிந்த கல்மன வஞ்சக

   கறுப்புப் பணப்பேய்ப் பித்த ரடி !

வற்றாதி ருக்கின்ற திண்ணாடே ! - உம்மை

   வறுமையில் தள்ளுவோ ராரே டி ?

பற்றியு றிஞ்சிடும் பன்னாட்டு வணிகத்தைப்

   பல்லாக்கில் தூக்கிடும் மனத்த ரடி !

வீரம்வி ளைகிற தொல்நாடே ! - உம்மை

   வீழ்த்த நினைப்பவ ராரே டி ?

கோரம தவாத கொட்ட மடிகின்ற

   கொடுமை முளைவிடு நெஞ்ச ரடி !

                                   -  இராதே

                                     10.02.2016


( தோழியர் உரையாடல் , தாழிசை )


ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

தோழா நேர்கொள் ! - கண்ணி

உள்ளத்தில்  கள்ளம்  வைத்தே
     உதட்டினில்  வெல்லம்  வைத்தே
     ஊர்கூட்ட  நினைப்பா  ரடா - தோழா
     உண்மைகள்  மறைப்பா  ரடா !


வள்ளுவன்  பெயரைச்  சொல்லி
     வாய்கூச  பொய்கள்  சொல்லி
     வலைகளை  விரிப்பா  ரடா - தோழா
     வஞ்சக  நெஞ்ச  ரடா !


கொள்கைமான்  காந்தி  யாரைக்
     கொன்றவன்  கோட்சே  வுக்குக்
    கொடிகட்டி  மகிழ்வா  ரடா - தோழா
    கொலைவெறிக்  கூட்ட  மடா !


முள்மன  வேலி  யிட்டு
     முடக்கிடும்  மடமை  பேணி
     முரண்பகை  வளர்ப்பா  ரடா - தோழா
     மூட்டித்தீக்  காய்வா  ரடா !


மக்களைத்  தூண்டி  விட்டு
     மதவாதம்  நாளும்  பேசி
     மகிழ்வினில்  திளைப்பா  ரடா - தோழா
     மதவெறி  அரக்க  ரடா !


வக்கனை  கூத்தும்  ஆடி
     வகைவகை  கதைகள்  கூறி
     வாக்குகள்  சேர்ப்பா  ரடா - தோழா
     வழிப்பறி  கும்ப  லடா !


முக்கண்ணன்   மாதோர்  பாகன்
     முழுக்கதை  குறைகள்  கூறி
     முடக்கினர்  எழுத்தை  யடா - தோழா
     மௌடிக  கூட்ட  மடா !


எக்காள  மிடுவோர்  தம்மை
     எதிர்த்திட  ஒன்றாய்க்  கூடி
     இயங்கிட  தோள்கொ  டடா - தோழா
     எதிரியை  நேர்கொள்  ளடா !
                                                                             -இராதே