இராதே

இராதே
eradevadassou
கஜல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கஜல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 டிசம்பர், 2024

கஜல் - 8

 கஜல் - 8


நான்பூந் தென்றல் ! கதவுகள் ஏனோ அடைக்கிறாய் ?

நான்குளிர் வாடை ! கம்பளிக்குள் ஏன் நுழைகிறாய் ?


நான்விழி வெண்படலம் ! கண்களை ஏனோ மூடுகிறாய் ?

நான்குருதிப் புனல் ! சினத்தில் ஏன்தான் முறைக்கிறாய் ?


நான்உன் உள்ளே ! வெளியே துரத்த முடியாது !

நான்உயிர்த் துடிப்பு ! மூச்சை நிறுத்த முடியாது !


நான்உன் உணர்வு ! நினைவைத் துறக்க முடியாது !

நான்உன் உலகம் ! காதல் நெகிழ்வுகள் மடியாது !


                  - இராதே

கஜல் - 7

 கஜல் - 7


'துறுதுறு' கண்களால் துழாவி நிற்பாயே !

துடிக்கும் நெஞ்சை மிரட்டவா ? உருட்டவா ?


'விறுவிறு' பார்வையை விலக்கி வைப்பாயே !

விஞ்சிடுங் காதலை மறைக்கவா ? மறக்கவா ?


கனவுகள் உண்ணும் கண்களில் வாளேன் ?

காதல் உணர்வை நறுக்கவா ? திறக்கவா ?


நினைவுகள் தூண்டும் நீண்டிடும் நாளேன் ?

நின்னுணர் ஏந்த மறுக்கவா ? சுமக்கவா ?


               - இராதே

வெள்ளி, 20 டிசம்பர், 2024

கஜல் - 6

 

மயக்கத்தில் நானிருந்தேன் மல்லிகையாய் மணக்கின்றாய் !

தயக்கத்தில் நானிருந்தேன் தள்ளிநின்றுச் சிரிக்கின்றாய் !


வியப்புடனே நானிருந்தேன் வீதியோடி மறைகின்றாய் !

விளங்காமல் நானிருந்தேன் விடைகாண அழைக்கின்றாய் !


மழுங்கா உணர்வெடுத்து மஞ்சத்தில் சேர்த்துவிடு !

விழுங்கும் கடைபார்வை வித்தைகற்றுத் தந்துவிடு !


புழுங்கும் மனக்கதவைப் பூட்டாமல் திறந்துவிடு !

புரையோடும் மனப்புண்ணை புணுகாலே எழுதிவிடு !


                           - இராதே

கஜல் - 5

 

காதலுறு நினைவுகளே கவிபுனைய வருவாயா ?

கட்டித்தேன் முத்தமதைக் கசிந்துருக தருவாயா ?


நினைவலைகள் நெஞ்சணையக் காதல்கரை தொடுவாயா ?

நிலாவிடுங் குளிர்க்கணையை எதிர்நின்றுத் தடுப்பாயா ?


வெண்பனியை விரல்கொண்டு வெய்யோனை மறைப்பாயா ? தனிமைநிலைப் பேணலிலே வெம்மைத்தீ அணைப்பாயா ?


விழியெழுதும் பார்வைமடல் விடுத்தகதை அறிவாயா ?

விழுந்தமனம் எழுந்துலவ வினைப்பயன் புரிவாயா ?


                        -  இராதே

கஜல் - 4

 

பனிப்பந்து துருவங்கள் கரைந்தால் என்ன ?

பவழத்தின் பாறைகள் தேய்ந்தால் என்ன ?


கனிகொத்துங் கிளிக்கூட்டம் குறைந்தால் என்ன ?

கவனருவி மாமலைகள் காய்ந்தால் என்ன ?


தேன்சிந்தும் உனதழகுச் சிரிப்போ மோதும்

தேவதையின் சிற்றிடையின் சிலிர்ப்பே போதும்


தேர்ந்தெழுந்த தேன்காதல் உணர்வே ஓதும்

தேயாத உள்ளூறும் நினைவே கோதும்


                           - இராதே

வெள்ளி, 5 ஜனவரி, 2018

கஜல் கவிதைகள் -3


நிலாப் பெண்ணே ! நீ கொஞ்சிப் பேசு
நிலமகள் இருளகல ஒளிவண்ணம் புசு

விண்பிளந்து மண்ணளக்க மின்னல்கொடி வீசு
மிதமிஞ்சும் சுடர்த்தெறிக்கும் ஒளிப்பலா மூசு

நீரலையின் புதுவரவு ! நுரைதாங்கும் தூசு
நித்தமொரு மின்சிரிப்பில் ஒலிக்கும் வெள்ளிக் காசு

ஆழ்மனத்தில் அகற்றிடுக துன்பந்தரும் மாசு
அன்போடு மொழிபகர் குறைந்திடும் ஆசு

                                                                                                 - இராதே

கஜல் கவிதைகள் - 2


ஆழ்மனக் கனவுகள் மெய்ப்பட வருமோ ?
வராதெனின் உறக்கந்தான் பொய்யெனத் தகுமோ ?

எந்நினைவு மனக்குகைக்குள் எவ்வழியில் புகுமோ ?
எந்நாளும் கருத்தெண்ணித் தத்தளிப்பில் விடுமோ ?

கருத்தில்லாக் கனவுகளே கற்பனையின் தொடக்கம்
விரிவான வெளிச்சங்கள் விடைதேடி முடக்கம்

குழப்பத்தில் கவலைகளின் குட்டிகள்தாம் திரியும்
குறைதீர மௌனங்கள் சான்றுகளாய் விரியும்

விண்மீன்கள் சுடர்விட்டு விளக்கொளியைப் பொழியும்
விடைபெறுமா இரவுகள்? விடைதருமா கனவுகள் ?


                                                                                                     - இராதே

கஜல் கவிதைகள் - 1

கூந்தலில் சொட்டின நீர்த்துளிகள்
ஏந்திடும் நம்காதலின் தேன்துளிகள்
****
கடித்துத் துப்பினாய் நகங்களோ பிறைநிலாக்கள்
துடிக்கும் காதலின் மிசைநுழை மனஉலாக்கள்
****
குதிகால் நடுவமாய்க் கட்டைவிரலில் வரைகிறாய்
புதியவரைகலை காதல் பிறைவிட்டம்
****
பறிக்கும் மலர்களோ உன்விரலால் கூச்சப்படுகிறது
பரவசக் காதலில் மோட்சம்பெறுகிறது
****
கசிந்துருகி கண்ணீர்மல்க மனமேறும் காதல்
பிசின்போல் ஒட்டி பிரிய மறுக்கிறது
****
சிமிட்டும் விழிகளில் சீறும் காதலலைகள்
சிட்டிகை நொடியில் மனநுழைந்து மௌனிக்கின்றன
****
கொலுசுகள் காதல்ஜதி சொல்லிக் களிக்கின்றன
இளசுகள் மனந்தவழ்ந்து துளிர்க்கின்றன
****
இடைஇடையே நெளிந்தாலும் காதல்
இடமறிந்து நழுவுகிறது பிரியாமலே
                                                                    
                                                                                                      - இராதே