இராதே

இராதே
eradevadassou
சந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

தமிழ் வாழ்த்து

 தமிழ் வாழ்த்து


ஏடேந்தும் வெண்பாக்கள்

   எழிலார்ந்த விருத்தங்கள்

      எல்லாமும் சூடிவரு வாள்

   இடையாடும் வஞ்சிப்பா

      இதழூறும் சிந்துப்பா

         இசைசேர ஆடிவரு வாள்


சூடேந்தும் கலிப்பாக்கள்

   சுவையேந்தும் ஆசிரியம்

         சுண்டிவிடும்

நொடியில்தரு வாள்

   சுவையான சந்தங்கள்

      சுகமேவும்

வண்ணங்கள்

         சுரம்பாடி தேடித்தரு வாள்


ஈடேறும் எண்ணங்கள்

   இயல்பான உணர்வோடு

      எனையாளும் மொழியின் உமையே !

   இதயத்தின் உள்ளூறும்

      இனிதான பாவாக்கி

         இமையத்தில் ஏற்றும் எமையே !


                     - இராதே

தமிழுணர்வு


 தமிழுணர்வு !


பாடிப்பாடி நம்மொழிப் பரவச்செய்தல் நம்பணி ;

ஓடிஓடி செம்மொழி ஒளிரச்செய்தல் நம்வழி ;

நாடிநாடி நம்தமிழ் நாளுமோங்க செய்வோமே ;

கோடிகோடி தமிழரின் கொள்கைகொள்கை கொள்கையே !


பேசுகின்றோம் பிறமொழி பேச்சிலில்லை தமிழ்மொழி ;

வீசுகின்ற சொல்லிலும் வியன்றமிழும் இல்லையே ;

பூசிப்பூசி மழுப்பியே பொற்றமிழை அழிக்கிறார் ;

கூசிக்கூசிக் கூனிகுறுகி கொள்கைவிடுதல் எங்ஙனம் ?


எழுத்திலில்லை எந்தமிழ் இளைஞர்நாவில் இல்லையே ;

பழுத்தமூத்த மொழியினைப் பாரிலழிக்க லாகுமோ ?

கொழுத்தபகை வர்வன்மத்தால் குன்றலாமோ எம்மொழி ?

அழுத்தங்கொடுத்தே மீண்டும்நாம் அன்னைத்தமிழை நாட்டுவோம் !


வழக்குரைக்கும் அறமன்ற வழக்கிலில்லை எம்தமிழ் ;

முழக்குகின்ற வெளியெல்லாம் முத்தமிழைக் காணோமே ;

சுழலுகின்ற புவியிலே சூழ்ச்சியின் பிடிக்குள்ளே

உழலச்செய்தே தமிழினை ஒழித்தழிக்கப் பார்க்கிறார் !


அன்னைத்தமிழ் வாழ்த்தினை அவமதித்தே அமர்கிறார் ;

அன்னைஆண்டாள் பெயரிலே அடாவடிகள் செய்கிறார் ;

மண்ணொழிந்த வடமொழி  மறுபிறவி எடுத்திட

எண்ணும்ஈனத் துறவியர் எழுச்சித்தமிழை மிதிக்கிறார் !


தாய்தடுத்தி டினும்விடோம்; தமிழழிப்போ ரைவிடோம் ;

ஏய்த்தவீணர் எவரையும் எளிதில்வாழ விட்டிடோம் ;

பொய்க்கவைத்தே சூதினைப் பொடிப்பொடிக ளாக்கியே

தாய்த்தமிழே வாழ்வுற தருவோமெங்கள் உயிரையே !


             - இராதே

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

 


என்னை எழுதும் எழுதும் என்றே
மாமழை குதிக்குதே !
எந்தன் அழகை வரைக என்றே
மாக்கடல் துடிக்குதே !
முன்னும் பின்னும் எழுலு ணர்த்தி
இயற்கைவட்டம் சுழலுதே !
முந்து கின்ற முகிலி னங்கள்
முகமினிட்டே உழலுதே !
மின்னும் மின்னல் இடிய னுப்பித்
தன்னைப்பாட அழைக்குதே !
மேனித் தீண்டுங் குளிரின் காற்று
தன்விளக்கம் நுழைக்குதே !
வண்ண நிலவு முகமி னுக்கி
வண்ணம்பாட கெஞ்சுதே !
வான வில்லோ வடிவங் காட்டி
உரைக்குமாறு கொஞ்சுதே !
- இராதே

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

 வினைத் திட்பம்


திண்செய லுற
திடமனங் கொளும்
சீர்வினைத் திட்பம் ! - நிதம்
எண்ணிய செயல்
எண்ணிய படி
எய்திடும் நுட்பம் !

உயர்நிலை யுற
உழைத்திடும் செய
லுறுதியில் ஆண்மை ! - ஆளும்
உயர்கருத் திடை
உளம்புகுந் ததில்
உயர்ந்திடும் மேன்மை !

செய்திடும் செயல்
திறத்தினை வாயும்
செப்புதல் எளிது ! - அதை
செய்திட வாய்
செப்பிய படி
செய்வதோ அரிது !

சிறுவுறு வென
சிலர்மனத் தினை
சிதைப்பது குற்றம் ! - முறை
திருத்தேர் செல
சிறுவச்ச துவே
சிறப்புறு சுற்றம் !

தொடரிடர் நிலை
துயரறும் படி
துடைத்திடல் நன்று ! - கடுந்
தொடரிடர் வரின்
துணிவுடன் அதை
துரத்துவோம் வென்று !

நற்செய லினை
நடத்திடும் வழி
நடப்பதில் உறுதி ! - இதை
விற்கணை யென
விரைவுடன் செய
வெல்லுதல் இறுதி !
- இராதே

திங்கள், 17 செப்டம்பர், 2018

ஊருக்கு நல்லது சொல்வோம் !

ஊருக்கு நல்லது சொல்வோம் !

என்னசொல்வ தென்னவென்றே
என்மனத்தை நாடினேன் ;
சொன்னசொற்கள் சோரமாக
சொல்லவார்த்தை தேடினேன் ;
கண்ணவிந்து போனபின்பு
காணஒவி யங்களோ ?
பின்னரென்ன பேசிப்பேசிப்
பிழைக்கவா புவியிலே ?

உண்ணுகின்ற வாய்த்திறந்தே
உண்மைகள் பிறக்குமா ?
தின்னுமிந்த வாய்விடுக்கும்
திணித்தெழுந்த பொய்யுரை ;
கன்னமிட்டுக் கருவறுக்கும்
கயவரெண்ணம் மேலெழும்
சொன்னசொல்லும் ஏற்குமா ?
சுமைசுமந்து நிற்குமா ?

தன்னலந்த ழைத்தெழுந்தே
தற்பெருமை மேவியே
தன்னைமுன் னிலைப்படுத்தித்
தமிழழித் தொழிக்கிறார் !
என்னவென்றே சொல்லுவேன்
எரியுமாண வத்தினை !
பின்னரென்ன சொல்லிச்சொல்லிப்
பிழைக்கவா புவியிலே ?

பொன்னுமணியும் பொருளும்புகழும்
பொற்பதக்க விருதுமே
எண்ணியெண்ணித் தமிழைவிற்றே
எடைக்கெடை ஈடேற்றுறார் !
இன்னல்செயும் இவரையெண்ணி
இன்னுமிங்குச் சிந்தனை
பின்னரென்ன கூறிக்கூறிப்
பிழைக்கவா புவியிலே ?

பெண்மைமேன்மை பேசிப்பேசிப்
பெருந்தகைபோல் நடிக்கிறார் ;
பெண்விளம்ப ரப்படுத்திப்
பெரியகாசும் பார்க்கிறார் ;
இன்பபோகப் பொருளுமாக்கி
இனியபோதை கொள்கிறார் ;
பின்னரென்ன பேசிப்பேசிப்
பிழைக்கவா புவியிலே ?

நண்பரென்றே புன்னகைத்தே
நாடகங்க ளாடுறார் ;
நண்பர்வீழ நஞ்சையூட்டி
நரித்தனத்தை வெல்கிறார் ;
பண்பிலார் பழக்கமெண்ணிப்
பாடியாடி என்பயன் ?
பின்னரென்ன பேசிப்பேசிப்
பிழைக்கவா புவியிலே ?

உண்மையான நன்மைதன்னை
ஊருக்கே உரைக்கனும் ;
உண்மைகண்டு வாயைமூடி
ஊமைபோல் விழிப்பதேன் ?
உண்மைசொல்லி உண்மைசொல்லி
ஊரின்நன்மை கொள்ளுங்கள் !
நன்மைநன்மை நன்மைநல்கி
நன்குவாழ்ந்து வெல்லுங்கள் !

                      -இராதே

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

இன்பம்

என்னவர் ! மன்னவர் ! வடி
          வெண்ணுவர் ! நண்ணுவர் ! நினை
          வேந்துவர் ! நீந்துவர்  நினைந்து !

சொன்னவர் ! அன்னவர் ! மனம்
          சுண்டுவர் ! அண்டுவர் ! நிதம்
          தூண்டுவர் ! தீண்டுவர்  பிணைந்து !


மெல்லின ! புல்லின ! உடை
          மேவின ! தூவின மலர்
          மீறின ! மாறின  இணைந்து !

துள்ளின ! அள்ளின ! விழி
          தோய்ந்தன ! தேய்ந்தன ! மெய்
          சோர்ந்தன ! சேர்ந்தன  அணைந்து !


தின்றன ! மென்றன ! இதழ்
          தீட்டின ! மீட்டின ! இசை
          சீண்டின ! வேண்டின  இணையை

அன்றென ! இன்றென ! மகிழ்ந்
          தாடின ! கூடின ! உயிர்
          அண்டின ! மண்டின  துணையை
                                                                              - இராதே

சனி, 6 பிப்ரவரி, 2016

வா மயிலே

கண்களினால்  கடத்தினாள்
     காதலாலே  படுத்தினாள்
          காமனுடை  உடுத்தினாள்
               கனவுகளில்  துரத்தினாள் !


வண்ணப் பா   கொலுசழகி
     வளைகொஞ்சும்  இசையழகி
          மணிமுத்துப்  பல்லழகி
               மறுதோன்றி   இடையழகி !


சின்னயிதழ்ச்  சுவையுண்டு
     சிணுங்கல்கள்  பலவுண்டு
          சிலுமிசங்கள்  துணைகொண்டு
               சேர்ந்தணைக்கும்  அழகுண்டு !


மன்மதவில்  புருவத்தாள்
     மயக்குமெழில்  உருவத்தாள்
          மனங்கிளறும்  பருவத்தாள்
               மாதுளம்பூ  நிறமொத்தாள் !


கெண்டைமீன்  கண்ணழகி
     கெம்பு நிற  இதழழகி
          கிள்ளைமொழிச்  சொல்லழகி
               கிறங்கவைக்கும்  மெய்யழகி !


சின்னவிழிப்  பார்வையிலே
     சிரிப்பழகுப்  போர்வையிலே
          செந்தமிழின்  சேர்க்கையிலே
               சேர்ந்துவாழ  வா மயிலே !
                                                                       -இராதே

வியாழன், 14 ஜனவரி, 2016

பொங்கல் விழா

வானில்  எழுங்கதிரை  - புவி
ஊனில்  விழுங்கதிரை
கூனி  லாப்புகழ்  போற்றி  மகிழ்ந்திட
வந்திடுமே  பொங்கல் - ஒளி
தந்திடுமே   பொங்கல் !


தேரில்   வருங்கதிரை - இப்
பாரில்   எழுங்கதிரை
ஊரி   னிலேவர   வேற்று   மகிழ்ந்திட
வந்திடுமே  பொங்கல் - சுடர்
தந்திடுமே   பொங்கல் !


ஓடி   வருங்குதிரை - அதில்
ஆடி   வருங்கதிரை
பாடிக்   குளிர்ந்திடக்   கோடிக்   குரல்ஒலி
தந்திடுமே  பொங்கல் - கதிர்
வந்திடுமே   பொங்கல் !


மேற்கில்   விழுங்கதிரை - நால்
திக்கில்   ஓளிர்கதிரை
நெற்களங்   கள்நிறை   பொற்குவி   யல்பெற
பொங்கிடுமே   பொங்கல் - பால்
பொங்கிடுமே   பொங்கல் !


வாடுந்   தமிழினத்தை - துயர்
சூடுந்    தமிழினத்தை
கேடும்   விட்டிட   பாடும்   பணியென
வந்திடுமே  பொங்கல் - சுவைத்
 தந்திடுமே   பொங்கல் !
                                                                                  -இராதே




போகி

கூடும்   குழந்தையர்
     கொட்டும்   பறையொலி
          கும்மி   குழைகிறது !


போடும்  குப்பைகள்
     புழங்கும்  பழமையைப்
          போகி  எரிக்கிறது !


மூடும்   கரும்புகை
     மூட்ட   முறும்புவி
          முக்கித்   தவிக்கிறது !


கேடும்   நிகழ்வதில்
     கேட்டை   நிறுத்தியே
          கேண்மை   புவிக்காப்போம் !
                                                                         -இராதே

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

நிலா

கொட்டுங்  கொட்டும்  பனி
     குளிர்  நிலா -புவி
ஒட்டி  ஒட்டிச்  சுழன்
     றோடும்  நிலா !

குட்டிக்  குட்டிப்  பிறை
     குறை  நிலா - முழு
வட்ட  மாகும்  எழில்
     மஞ்சள்  நிலா !

பட்டு  வெய்யோன்  ஒளிப்
     படர்  நிலா - மழை
முட்டும்  முட்டும்  முகில்
     மூடும்  நிலா !

விட்டே  ஈர்க்கும்  கடல்
     விசை  நிலா - அலை
எட்டித்  துள்ளச்  செயும்
     ஈர  நிலா !

பாட்டி  சுட்ட  வடை
     பகர்  நிலா - பலர்
கூட்டாஞ்  சோறு  பெறும்
    கூடல்  நிலா !

வாட்டுங்  கன்னி  நுதல்
     மலர்  நிலா - அது
காட்டும்  மன்ம  தனின்
     காதல்  நிலா !

தீட்டும்  கும்மி  ருட்டுத்
     திரை  நிலா - அவை
சூட்டுங்  கோள்கள்  நிழல்
     சூழும்  நிலா !

காட்டும்  வண்ண  எழில்
     கலை  நிலா - சுடர்
மீட்டி  இருள்  மாய
     மேவும்  நிலா !
                                                      -இராதே


ஞாயிறு, 29 ஜூலை, 2012

கண்ணாதாசன் பெருமை !


                                    கண்ணதாசன்  வாழ்க  !                          


உள்ளகத்தில்    ஊற்றெழுந்து    ஊறுகின்ற    வாய்வழித்
துள்ளுகின்ற    பாடலேற்றித்    தூய்மைசெய்    மனத்தினை
அள்ளகின்ற    அற்புதங்கள்     ஆயிரம்     மொழிந்தவன் ;‎
கள்ளவிழ்ந்து   தேன்சுமந்து    காவியம்   படைத்தவன்  !              ( 1 )


முத்தமி   ழெடுத்துவார்த்தை    மோகனம்   இசைத்தவன் ;
சத்துளக்    கவிதைகொண்டு      சந்தங்கள்     வடித்தவன் ;  
தத்துவ    மெருகையேற்றித்     தமிழினைப்   பொழிந்தவன் ;
எத்துறை   நுழைந்தபோதும்     ஏற்றமேற்றம்   ஏற்றமே !             ( 2 )
 

காதலூறும்   சாரமேற்றிக்    கானங்கள்    படித்தவன்  ;
சாதல்மீதும்  பற்றுவைக்கும்  தத்துவம்  உரைத்தவன் ;
மோதலாலே  முன்னும்பின்னும்  முரண்களை  உதிர்த்தவன் ;
வேதகீதம்    பாடிப்பாடி     வேள்விகள்    வளர்த்தவன்  !            ( 3 )


மெட்டினிற்கே  ஏற்றபாடல்  மேன்மையைத்   தொடுத்தவன் ;
கட்டளைக்  கிணங்கிவண்ணக்  கருத்துகள்   விதைத்தவன் ;
பட்டஇன்ப   துன்பமெல்லாம்   பாடலில்    புனைந்தவன் ;
கொட்டுகின்ற   அருவிபோலக்  கொடுத்தபாக்கள்  ஆயிரம் !        ( 4 )


மின்னிமின்னி  மேலெழும்பும்   மெய்சிலிர்க்கும்   வரிகளால்
எண்ணியெண்ணிச்   சீரமைந்த  எண்ணமென்னும்  விழிகளால்
உண்ணஉண்ணக்   கவிதைதந்த   உயர்ந்தவர்   வழியிலே
தன்னினைவில்   லாமலென்னைத்   தந்தவிட்டேன்   கவியிலே !     ( 5 )


கண்ணைமூடிக்   கற்பனைத்தேன்    கவிதைசொட்ட   தந்தவன் ;
விண்ணைமுட்டும்    புகழினுச்சில்    விழுமியம்   அடைந்தவன் ;
எண்ணிலாத    விருதுவெற்றி    இடைவிடாது   பெற்றவன் ;
கண்ணதாசன்    பெருமையென்றும்   கோடிகோடி   கோடியே !      ( 6 )
                                                                                         - இராதே



ஞாயிறு, 22 ஜூலை, 2012

கவிஞரேறு வாணிதாசன்

வானளந்திடும்    புனைத்திறன்     பல
               வடிவளந்திடும்     ''பா'' த்திறன்
தேனளந்திடும்     பொருட்சுவை     கடல்
               திரையளந்திடும்     சந்தங்கள்
தானளந்திடும்     பார்வையால்     கவி
               தனையளந்திடும்     ''வாணியார்''
கானளந்திடும்     வரிகளால்     மனங் 
               கரைபுரண்டிடச்     செய்கிறார்  !                                      ( 1 )


உள்ளரும்பிய     வார்த்தைகள்     வழி
               ஊடரம்பிய     அணிநலன்
கள்ளரும்பிய    தனிநடை     புதுக்
              கருத்தரும்பிய     பாவியம்
வெள்ளரும்புகள்     "கொடிமுல்லை"     மொழி
              விழியரும்புகள்     "தமிழச்சி"
சொல்லரும்பிய     வாணியின்     ஒளிச்
              சுடரரும்பிய     ஞாலமே  !                                                    ( 2 )



துள்ளுகின்றன     அழகியல்     பொழில்
               சூடிநின்றன     விருத்தங்கள்
அள்ளுகின்றன     சொற்சுவை     எழில்
               ஆட்சிசெய்திடும்     இயற்கையால்
கிள்ளுகின்றன     மனத்தினைப்     பெருங்
               கிளர்ச்சிசெய்திடும்     கவிதைகள்
தள்ளுகின்றன     கிறக்கித்தில்     வாணி
               தாசசிந்தனை     வேகமோ  ?                                              ( 3 )


ஏடுகொண்டன     பல்பொருள்     நனி
                எழுந்துக்கொண்டன     வண்ணங்கள்
பீடுகொண்டன     கவிநயம்    தவப்
                பெருமைகொண்டன     மொழிவளம்
நாடுகண்டது     நற்றழிழ்     புவி
                நன்மைகண்டது     ''வாணியால்''
ஈடுகொண்டநம்     கவிஞரை     புகழ்
                இனிமைகொண்டுநாம்     வாழ்த்துவோம்   !             ( 4 )

                                                                                                  -  இராதே

சனி, 14 ஜூலை, 2012

புதுவை - சந்தம்

வங்க          கடற்கரை          வானி          லெழுந்தொரு

                     வண்ணங்          குழைக்கு          மிடம்   -  ஒளிர்

தங்கக்        கதிரவன்            தேரில்         வலம்வரும்

                     சங்கதி                கூறு                    மிடம்   -  தனி

சங்கம்        ஒளிர்ந்திட         நாளும்        முழங்கிட

                     தண்ட                  மிழ்வாழு         மிடம்   -  தமிழ்

பொங்கி      நிறைந்துயர்     ஆட்சி           புரிந்திடும்

                      புதுவை               மாந                   கரம்  !






கூன               லிலாமலே            சாலை            அமைந்ததின்

                          கோலம்                 உரைக்கு            மிடம்   -  சொற்

தேனை         மொழிந்திடும்      மேலை          பிரஞ்சியர்

                           செம்மையை       செப்பு                 மிடம்   -  விண்

மீனை           நிகர்த்தொளிர்        பாரதி              தாசனின்

                          மேன்மையைக்   காட்டு                மிடம்   -  உயர்

வானைப்      போலொரு              அமைதி         தவழ்ந்திடும்

                            புதுவை                   மாந                  கரம்  !

                                                                                                  -  இராதே
                      

வெள்ளி, 13 ஜூலை, 2012

மீனவர்

நீலத்          திரையின்          பெருங்கடல்     -   சந்தத்

தாளத்       திரையைத்         தருங்கடல்  
 

            நிலவின்          ஒளியின்          துளிப்பட்டே     -   வாளை

           உலவும்             களிப்பில்         வெளிப்பட்டே


கோலப்          படகும்          அசைந்திட     -   வலை

 யாளப்           படகும்          இசைந்திட


          மீனம்          நிரம்பி          வழியவும்     -   மன

          வானம்       நிரம்ப           பொழியவும்


ஏலச்          சத்தமும்          விரையவே     -   கரை

நீளம்          நித்தமும்          இரையவே


          துள்ளிடும்          மீன்களைப்          பெற்றதும்     -   பணம்

          அள்ளிடும்          மீன்களை             விற்றதும்  


சால          உழைப்பின்          களைப்பிலும்     -   இரத்த

நாள          இழைப்பின்          திளைப்பிலும்


          உள்ளம்          நெகிழ்ச்சிக்          கொள்ளவே     -   மக்கள்

          வெள்ளம்        மகிழ்வில்           விள்ளுமே   !

                                                                                                 -இராதே

புதன், 11 ஜூலை, 2012

ஈழம் மலர . . . .

பதுங்கு   குழிதனில்   பெண்டிர்   மழலை

                                     பயந்து   நெளிந்தோட  !  - தினம்

ஒதுங்கத்   துரத்திடும்   வலியோர்   செயலில்

                                     உருண்டு   புரண்டோட  ! - விழி

பிதுங்கு    முகத்துடன்   மகளிர்   கண்ணீர்

                                     பிழிந்து   வழிந்தோட  ! - மனம்

ததும்ப   ஒழுகிடும்   உணர்வு   நினைந்தே

                                     ஒன்று   திரண்டிடுவோம்  !




                                                                         
                                               வனத்தில்   விலங்குகள்   பார்த்து   நடுங்கி

                                                                       மருண்டு   மிரண்டோட  ! - பல

                                               தினங்கள்   உணவுகள்   உடையு   மிழந்தே

                                                                       திகைத்துத்   தவித்தோட  ! -நடைப்

                                               பிணமாய்   உலவிடும்   நெஞ்சம்   திறந்தே

                                                                       பிளந்து   கனன்றாட  ! - உள

                                               உணர்வறு   மடையரின்   கொட்டம்   அடக்க

                                                                       ஒன்று   திரண்டிடுவோம்  1





நெஞ்சத்   துயரினில்   கண்ணீர்   பெருகி

                                  நிறைந்தே   உருண்டோட  ! - கொடும்

வஞ்சத்   தனத்தினில்   செந்நீர்   சுரந்தே

                                 வளைந்து   வளைந்தோட  ! - கடும்

பஞ்சம்   பிழைத்திடும்   துன்பம்   விளைந்து

                                  பதைத்துப்   பதைத்தோட  ! - அவர்

கெஞ்சல்   செவிதனில்   நொந்தே   உரைக்க

                                  ஒன்று   திரண்டிடுவோம்  !




                                                 கொத்து   வெடிகளில்   தமிழர்   மாய்ந்தே

                                                                     குலைந்து   குலைந்தோட  ! - இளம்

                                                   வித்து   கருகிட   தனிமக்   குண்டு

                                                                     விழுந்தே   எரிந்தாட  ! - நனி

                                                    சத்துத்   தமிழரின்   குருதி   பொங்கித்

                                                                      தகித்துக்   கொதித்தாட  ! - நமை

                                                     ஒத்து   விரட்டிடும்   அரக்கர்   அழிக்க

                                                                      ஒன்று   திரண்டிடுவோம்  !




கலங்கிப்   புலம்பிடச்   சிவந்து   சினந்தே

                                   சண்டை   அதிர்ந்தாட  ! - எம்

இலங்கைத்   தமிழரை   வெடிகள்   துரத்த

                                   எழுந்து   வெகுண்டோட  ! - தெரு

விலங்கிற்   கிணையென   நடத்தி    யொழிக்க

                                   விரைந்து   வினையாட  ! - கண்

கலங்கும்   விழிநீர்   துடைக்கத்   துணிந்தே

                                     ஒன்று   திரண்டிடுவோம்  !




                                                  வேரில்   அழிக்க   வெட்டும்   நிலையை

                                                                       விடுவாய்   என்றோத  ! - கடும்

                                                   போரில்   தமிழரை   மீட்க   முனைந்தே

                                                                       பொறுப்பாய்   நின்றோத  ! - பெரும்

                                                   பாரில்   பலகுரல்   ஓங்கி   ஒலித்தே

                                                                        பதமாய்   சென்றோத  ! - அவ்

                                                    ஊரில்   விரைவினில்   ஈழம்   மலர

                                                                        ஒன்று   திரண்டிடுவோம்  !

                                                                                                                     --இராதே