இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 27 டிசம்பர், 2013

தோழர் நல்லகண்ணு - முத்தப் பருவம்

கூர்மை  மணக்கும்  அறிவெல்லாம் ;
               கொள்கை  மணக்கும்  நோக்கெல்லாம் ;
     குறிக்கோள்  மணக்கும்  செயலெல்லாம் ;
               கொடுத்தே  மணக்கும்  கைகளெல்லாம் ;


நேர்மை  மணக்கும்  பொதுவாழ்வில்
               நெகிழ்வு  மணக்கும்  தூய்மையெல்லாம் ;
     நெருக்கம்  மணக்கும்  நட்பெல்லாம் ;
                நீண்டே  மணக்கும்  ஈகையெல்லாம் ;


நீர்மை  மணக்கும்  பண்பெல்லாம் ;
               நிறமாய்  மணக்கும்  சிவப்பெல்லாம் ;
     நெறியாம்  மார்க்சின்    கருத்தெல்லாம் ;
               நின்றே  மணக்கும்  மனத்துள்ளே


சீர்மை  மணக்கும்  நல்லகண்ணே
               செல்வா  முத்தந்  தருகவே !
     தீந்தேன்  மணக்கும்  திருவாயில்
               தீரா  முத்தந்  தருகவே !
                                                                            -இராதே

வியாழன், 26 டிசம்பர், 2013

தோழர் நல்லகண்ணு - சிறுதேர் பருவம்

ஏங்கல்  மார்க்சின் தத்துவங்கள்
               எடுத்தாட்  கொண்ட  நுண்மானே !
     ஏழை  எளியோர்  குறைகேட்டே
               எழுந்த  புரட்சிப்  புதுப்புயலே !


தாங்கல்  கொண்ட  நீர்நிலைகள்
               தழைக்க  வேண்டி  தயங்காமல்
     தன்ன  லமின்றிக்  குரல்கொடுத்த
               தனியா  ஆர்வப்  பேரூற்றே !


நாங்கள்  இங்கே  இருக்கின்றோம்
               நடுங்க  வேண்டாம்  ஏழையரே
     நலமே  சொல்லும்  பொதுவுடைமை
               நண்ணும்  கட்சித்  தலைமகனே !


தேங்கல்  இல்லாத்  தெளிவுடனே
               தீயோர்  வன்மம்  ஒழித்தவரே !
     திடமே ! நேர்மை  நல்லகண்ணே
               துணையே ! சிறுதேர்  நடத்துகவே !
                                                                          -இராதே

புதன், 25 டிசம்பர், 2013

தோழர் நல்லகண்ணு - சிற்றில் பருவம்

கூழாங்  கற்கள்  உருண்டோடிக்
          குவிக்கும்  மணலை  நதிகரையில்
     கோணல்  மதியார்  நரித்தனத்தால்
          கொள்ளை  யடித்தார்  மணற்பரப்பை


பாழாய்  ஆக்கி  மண்வளத்தைப்
          பறிக்கும்  கும்பல்  வெறித்தனத்தைப்
     பரிதி  சுடராய்ச்  சுட்டெரித்த
          பகலே ! மாணிக்க  மணித்திரளே !


வீழாப்  பொருளே ! வெண்முத்தே !
          விடிவாய்ப்  பொழியும்  மாமழையே !
     விளையுங்  கதிரே ! அரிவாளே !
          விழையும்  ஏழைக்  கொருமருந்தே !


தோழா  தோழர்  பெருந்தகையே !
          தூயா  சிற்றில்  சிதையேலே !
     துள்ளும்  பொருநை  நதிகாத்தோய் !
         துறைவா  சிற்றில்  சிதையேலே !
                                                                           _ இராதே