இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 5 அக்டோபர், 2018

தலைமைப்பொறிஞர் சுபாசு சந்திரபோசு



மேனாள் தலைமைப்பொறிஞர் சுபாசு சந்திரபோசு

                               (காவடிச்சிந்து)


சிந்தைசெ றிவுடை அறிஞர் ! - தலைமைப்                                 
                                 பொறிஞர் ! - அறிவு
                                 வினைஞர் ! - நட்பு
     சிந்துத் தமிழ்பாடும் கவிஞர் ! - பண்புத்
          திறம்பாடிடும் உயர்வானவர்
          அறமேவியே நமையாள்பவர்
     செம்மன நற்புகழ் போசு ! - அவர்
     செயல்களின் வல்லாண்மை பேசு !


சொந்தங்கள் உள்ளத்தைத் தொடுவார் ! - உறவை
                                                           நடுவார் ! - இன்பம்
                                                          இடுவார் ! - அன்பு
     சுடராலே தவறுகள் சுடுவார் ! -
புசுபா
          துணையோடிவர் பலஆண்டுகள்
          மனைமேவியே நலமாமுயர்
     துலங்கிடும் பொன்வாழ்வு பெறுவார் ! - மணத்
     துணையோடு யாவர்க்கும் அருள்வார் !

தந்திடும் சீர்குண சீலர் ! - மண
                               வாளர் ! - நேர்மை
                               யாளர் ! - கொடை
     தந்திடும் அரிமாவின் வேலர் ! - தொண்டின்
          தடமாகியே பணிமேவிடும்
          இடமாகியே எளியோரெழ
     தன்னையே ஈந்திடும் மாரி ! - இவர்
     தரணியில் இன்னுமோர் பாரி !

சந்திர போசுஐயா  வெல்க ! - மேன்மை
                                  கொள்க ! - நன்மை
                                       மல்க ! - திறமை
     சந்தித்த வழியாவும் சொல்க ! - திண்மை
          சதிராடிடும் உலகாரொடும்
          மதிமேவிடும் உறவாரொடும்
     சந்தனப் பொன்வாழ்வு காண்க ! - பீடு
     சான்றாண்மை பட்டங்கள் பூண்க !

                                                                - இராதே

வியாழன், 4 அக்டோபர், 2018

நூலகம்



நூலள வாகும்நுண் ணறிவு ! - உயர்
     நூலகம் செல்லுதல் செறிவு ! - மட
          நுணலாகவே அறியாமையின்
          அணைநிற்பவர் இருள்நீக்கிடும்
               விளக்கு ! - மனத்
               துலக்கு !

காலநி கழ்வுகள் சொல்லும் ! - நிகழ்
     காலநி ரல்களும் துள்ளும் ! - செய்திக்
          களமாகிடும் நிலமாகியே
          வளமேவிடும் கருவூலமாய்
               கொள்ளும் ! - உளம்
               விள்ளும் !

சிந்தைவ ளம்பெற நாடு ! - குணந்
     தேறநன் நூலினைத் தேடு ! - மூளை
          தெளிவுற்றிட வடிவுற்றெழ
          ஒளிபெற்றிட அறிவுற்றெழக்
               கூடு ! - படி
               ஏடு !

விந்தையில் நல்லுணர் வேறும் ! - கல்வி
     வீரிய செல்வமாய் மாறும் ! - ஆற்றல்
          மெருகேரிட உருவாகிடும்
          அருமைநலன் மிகவேமதி
               ஊறும் ! - புகழ்க்
               கூறும் !

நுண்ணிய நூல்பல அறியும் ! - கலை
     நூல்களின் நுட்பங்கள் புரியும் ! - நுண்மை
          நுகர்வோரிடை உறவாடிட
          தகவோர்நிலை நிறைவாயுறத்
               தெரியும் ! - தேடல்
               விரியும் !

எண்ணமெ ழில்பெறுங் கிடங்கு ! - தரும்
     ஏடுப யன்பல மடங்கு ! - நாளும்
          இனிதாகவே அறிவேபெற
          நனிநூலகப் படியேறிடத்
               தொடங்கு ! - அகம்
               அடங்கு !

                                                 - இராதே

புதன், 3 அக்டோபர், 2018

கொசு


( காவடிச்சிந்து )

மாலையோடி ரவிலுமே
     மாந்தரின்கு ருதியையே
     மாந்திடப்ப றந்துவரும் துன்பமாம் ! - புவி
     மானிடர்க்கு ருதியதற் கின்பமாம் !

சோலையாம்பூ விதழ்களில்
     தோன்றிடும்பூந் தேனினையே
     சுவைத்துண்டே வாழுதே நுளம்புதாம் ! - நோய்த்
     தொற்றரக்கர் தூதராய் விளம்புதாம் !

ஊசியாம்கு ழல்கள்நீட்டி
     உடலினில்ம யக்கம்பாய்ச்சி
     உறிஞ்சும்கு ருதித்தேடல் வேட்டையாம் ! - தம்
     உறவைப்பெ ருக்குகின்ற சேட்டையாம் !

வீசிடும்இ றக்கைகொண்டு
     விரவும்ம ணங்கள்கொண்டு
     விதைக்குமே நோய்களைப்பெண் கொசுக்கள் ! - அவை
     விதியினை முடிக்கும்காலன் சிசுக்கள் !

பற்றுமாம் மூளைக்காய்ச்சல்
     பரவுமாம் டெங்குக்காய்ச்சல்
     பரிசாகக் கொசுத்தருங் கொடையாம் ! - இவை
     பாமரரை மாய்க்கும் கழி சடையாம் !

முற்றுமா னைக்கால்நோயுமே
     முணறும்ம லேரியாவுமே
     முத்தமிடும் கொசுக்கொடுக்கும் வினையாம் ! - நாம்
     முயன்றால் தடுக்கலாம்இ தனையாம் !

வீட்டினையும் தூய்மைசெய்து
     வீதியையும் தூய்மைசெய்து
     விரட்டியேது ரத்திக்கொசு ஓட்டுவோம் ! - இனம்
     வேரறுக்க பல்வழிகள் தீட்டுவோம் !

தீட்டியநம் சிந்தையாலும்
     தெளிந்தநல் லறிவாலும்
     திட்டமிட்டே கொசுவினை ஒழிப்போம் ! - என்றும்
     திரும்பாவ கைகள்கண்டே அழிப்போம் !

                      - இராதே