இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 26 டிசம்பர், 2014

தோழர் நல்லகண்ணு பிள்ளைத்தமிழ் - சப்பாணிப் பருவம்

வேய்ந்த  ஓலைக்  கூரையுமே
               வேண்டு  மளவு  கிழிந்திருக்கும் ;
     வேகா  அடுப்பில்  பூனையுமே
               விரும்பி  யுறங்கிப்  படுத்திருக்கும் !



பாய்ந்த  வறுமை  செழித்திருக்கும் ;
               பருவ  மழையும்  பொய்த்திடவே
     பசுமை  யில்லாப்  பயிரிருக்கும் ;
               பட்டி  னிச் 'சா '  நிறைந்திருக்கும் !



காய்ந்த  தலையில்  பிசுக்கிருக்கும் ;
               கண்ணில்  குழியும்  விழுந்திருக்கும் ;
     கடனில்  வீடு  மிதந்திருக்கும் ;
               கருகும்  உழவர்  நிலையிதுவே !



தோய்ந்து  தொடர்ந்து  போராடித்
               துவண்ட  உழவர்  கடன்மீட்ட
     தோழர்  தோழா  நல்லகண்ணே
               தொடரக்  கொட்டுக  சப்பாணி !

                                                                                    -இராதே

வியாழன், 25 டிசம்பர், 2014

தோழர் நல்லகண்ணு -சிறுதேர் பருவம்

திங்கள்  பிறையே !  திருத்தேரே  !
               துவளு  முழவர்க்  காப்பகமே !
     தெருவி  லிறங்கிப்  போராடித்
               திருயே  ருழவர்  கடன்தீர்த்தாய் !



மங்கா  ஒளியே !  மரிக்கடலே !
               மதிப்பில்  மிளிர்ந்த  மணிமுத்தே !
     மயங்கா  மனமே !  அதிதீரா !
               மண்டும்  வைர  பேரொளியே !



சங்காய்  முழங்கித்  தொழிலாளர்த்
               தடைகள்  தகர்த்த  தனிவீரா !
     சகடம்  போலே  உழைக்கின்ற
               தன்னி  கரில்லா  பெருந்தலைவா !



எங்கு  மெழுச்சிப்  புயலாகி
               எளியோர்  வாழ்வைக்  காப்பவனே !
     எளிமை  குன்றே !  நல்லகண்ணே !
               எழுந்து  தடந்தேர்  உருட்டகவே !

                                                                                           -இராதே