இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 29 டிசம்பர், 2015

அரங்க நடராச சீரர் !

செந்தமிழ்     இவரிடம்      கொஞ்சும் -பாடக்
                                                  கெஞ்சும் - மடி
                                                  துஞ்சும் - இவர்
சிந்தையில்     தமிழென்றும்     தஞ்சம் - உயர்
சிறப்பாகிய     கலைமாமணி     தமிழ்மாமணி     விருதாகிய
சிறப்புகள்     ஏந்திடும்     மன்னன் ! -  நிதம்
அறங்களைப்     பாடிடும்     தென்னன் !


சந்தத்தில்     இவர்பாடல்      துள்ளும் - நெஞ்சை
                                                      அள்ளும் - படி
                                                      கொள்ளும் - பல
தாளத்தில்     ஆடிட     உள்ளும் - மொழித்
தண்டாடிடும்     செந்தாமரை     தமிழாகவே     வருமெனச்
சரசத்தில்     மண்டிடும்    உள்ளம் !  - இன்பம்
உரசிட   கண்டிடும்     வெள்ளம் !


தன்னிக     ரில்லாப்பூந்      தோட்டம் - மலர்
                                                   நீட்டம் - அன்பின்
                                                   ஊட்டம் - நனி
தண்டமிழ்     இலக்கண     நாட்டம் - சிந்துத்
தனிப்பாடல்கள்     உருவாகவே    தவமேவிய     வரமாகிய
தமிழிசைப்     பாடிடும்     சூரர் ! - நற்
றமிழ்காக்க     போரிடும்    வீரர் !


அன்பினில்     இவர்க்கிணை       யேது - இல்லை
                                                              சூது - நட்பின்
                                                              தூது - தவ
அன்பிற்குச்     சிகரமென்     றோது - மன
அன்பாலய     பண்பாளரின்     பண்பாமிதை     பண்பாடிடும்
அரங்கங்கள்    நேசிக்கும்     தீரர் - தூ ய
அரங்க     நடராச     சீரர் !
                                                                                                                           -இராதே

வியாழன், 24 டிசம்பர், 2015

தோழர் நல்லகண்ணு பிள்ளைத்தமிழ் - சிறுத்தேர் பருவம்

பயிரின்  செழிப்போ  ஒருபுரட்சி
               பசுமை  புரட்சி  என்பார்கள் ;
     பாலின்  மிகையோ  ஒருபுரட்சி
               பால்வெண்  புரட்சி  என்பார்கள் ;


உயிரைக்  கொடுக்கும்  ஈகையினை
               ஓடுங்  குருதி  தன்னோடே
     ஓங்கும்  மக்கள்  நலன்காக்க
               உழைக்கும்  புரட்சி  மாபுரட்சி !


கயிற்றை  முறுக்கி  திரித்ததுபோல்
               களத்தில் இணைந்தே போராடிக்
     கண்ணாம்  மாந்தர்  உரிமையினைக்
               காணும்  புரட்சி  செம்புரட்சி !


உயிரை  ஈணும்  புரட்சியிலே
               உணர்வாய்ப்  பொதுமை  சிந்தையுடன்
     ஒழுகும்  ஒளியே !   நல்லகண்ணே !
              உருளத்  தடந்தேர்  உருட்டுகவே !

                                                                                     -இராதே

கத்தரிக்காய்

உண்ணச்  சுவைக்கும்  காய்தான் ;
     உருண்டு  திரண்ட  காய்தான் ;
எண்ணெய்க்  கொழுப்பை  நீக்கி
     இதயம்  காக்கும்  காய்தான் ;
மண்டைக்  கவசம்  போட்டு
     மலைக்க  வைக்கும்  காய்தான் ;
கொண்டைக்  காம்பை  நீட்டும்
    குண்டு  கத்தரிக்  காய்தான் !


நரம்பு  நோயைப்  போக்கும் ;
     நாளும்  இளமை  காக்கும் ;
வரம்பு  மீறும்  புற்றை
     வாகாய்த்  தீர்த்து  கட்டும் ;
சிரங்கும்  அரிப்பும்  தோன்றின்
    சீண்டிப்  பார்க்கும்  காய்தான் ;
அரசன்  வேடம்  பூணும்
     அழகு  கத்தரிக்  காய்தான் !

சனி, 12 டிசம்பர், 2015

பேய்மழை !

                    எடுப்பு

பேய்மழை  பெய்து  பெருவெள்ளம்  பாய்ந்தே
ஊரெல்லாம்  மிதக்கிறதே ! - துயர்
பொங்கிடும்  துன்பம்  மக்களின்  வாழ்க்கையில்
கண்ணீரைச்  சொரிகிறதே ! - அழும்
கண்ணீரைச்  சொரிகிறதே !                                                               (பேய் )                                                                                        
                    முடிப்பு

நின்றாடும்  மேகங்கள்  நிலையான  வானத்தில்
நீருற்றும்  களியாட்டமா ? - புவி
நெடுநாளில்  காணாத  நீங்காத  வரலாற்று
நிலைசொல்லும் சதுராட்டமா ?
வெள்ளம்  போதாது  பாரென்றே  ஊர்சூழ
பள்ளம்  இருக்கின்ற  இடமெல்லாம்  நீர்சூழ                                (பேய் )

புரண்டாடும்  வெள்ளத்தில்  திரண்டாடும்  இல்லங்கள்
மிரண்டாடும்  நிலைசொல்லவா ? - அவை
முரண்பட்ட  கொடியோரின்  முளைவிட்ட  பணத்தாசை
முகிழ்வித்த  கதையல்லவா ?
போதும்  மழையென்றே  ஊர்கூறும்  நிலைகொள்ள
வாழும்  நகரத்தின்  சிக்கல்கள்  தனைசொல்ல                           (பேய் )
                               

மண்ணாசை  பேராசை  மகிழ்கின்ற  திருநாட்டின்
புண்ணான  கதைகாணலாம் ! - இதைச்      
சொன்னாலும்  திருந்தாத  சென்மங்கள்  பலபேரின்
செருக்கான  திமிர்காணலாம் !
வருங்  காலங்கள்  சிறப்புற்றே  ஊர்வாழ
பெரும்  வருத்தங்கள்  மறைகின்ற  நாள்காண                            (பேய் )

                                                                                                                          -இராதே

வியாழன், 10 டிசம்பர், 2015

குடி

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         
                எடுப்பு

குடிக்கக்  கூடாது - மது
குடிக்கக்  கூடாது !

               தொடுப்பு

மடியைப்  பிடித்துக்  குடியைக்  கொடுத்து
முடியைப்  பிடித்து  அடியைக்  கொடுக்கும் !                                      (குடி)

               முடிப்பு

குடிக்கக்  குடிக்கப்  போதையேறித்  தவறுகள்  நடக்கும் ;
குடியும்  தெளிந்து  பார்க்க மானம்  குப்புறக்  கிடக்கும் ;
விடிய  விடியக்  குடிப்பதினால்  வேதனைப்  பெருகும் ;
விடிவில்  லாத  வெற்றுவாழ்க்கை  சோதனை  இருகும் !              (குடி)

கட்டின  தாலி  கடையிலேறி  வட்டிக்கு  விற்கும் ;
கட்டின  மனைவி  காதல்வாழ்வு  வீதியில்  நிற்கும் ;
பட்டெனப்  பேசி  சட்டெனமூளும்  சண்டைகள்  மொய்க்கும் ;
விட்டுவி  டாமல்  கிட்டின பழக்கம்  வீழ்ச்சிக்குள்  துய்க்கும் !    (குடி)

ஈரல்குலையும்  குடலும்வெந்து  இரைப்பையும்  அழுகும் ;
இறுதிநாட்கள்  அமைதியிழந்து  தொல்லையில்  முழுகும் ;
உறவும் ஊரும்  ஒன்றுசேர்ந்தே  ஒதுக்கியே  வைக்கும் ;
உறவின் பிரிவில்  உழலும் மனதில்  துன்பமே  தைக்கும் !              (குடி)
                                                                                                                                           -   இராதே

செவ்வாய், 8 டிசம்பர், 2015

ஊசிட்டேரி

வெள்ளம்பாயும்  ஊசிட்  டேரி !  வண்ண  வாரி !
அதில்  பயனுறுதாம்  புதுச்  சேரி ! - மின்னும்

விளக் காகியே  ஓளியே  சுடர்
விழிமேவிய  வணிதாவணி
வீசும்புகழ்  அலங்  காரி ! - ஊசி
விருப்பத்தில்  அமைத்திட்ட  ஏரி!

அலையுஞ்  சுழலுங்  கண்டு
வளையில்  நுழையும்  நண்டு
அருமைநடனங்  காணல்  ஈர்க்குமே ! - மீனும்
கரைத்  துள்ளும்  அழகினை  வார்க்குமே! - ஆசை
ஆட்டுமே !  ஓசை  கூட்டுமே !
எழிற்  ஊட்டுமே ! இசை  மீட்டுமே ! - நிதம்
மனதில்  உழலும்  துன்பம்  ஓட்டுமே ! - மக்கள்
மனதில்  மகிழும்  இன்பம்  பூட்டுமே !

கெண்டை  மீனும்  நாணும்
கண்டே  ஊடல்  காணும்
வண்டு  சேரும்  அல்லிக்  கூட்டமே ! - செயற்
கண்டு  மலர்த்தேன்  ஈட்டமே ! - தமிழ்ச்
சிந்து  பாடி  அலை  வந்துமோதிக்  கரை
கண்டு  ஆடும்மலர்த்  தோட்டமே ! - இந்த
விந்தைதான்  காணநல்  நாட்டமே !

இயற்கையின்  கொடையோ ? - இல்லை
செயற்கையின்  கொடையோ ? - இந்த
எழில்நீர்  நிலை
புவியின்  மிசை  வழியும்பொழில்
                                   அசையுங்  கடல்தானோ ?
ஏங்கும்  புட்  களமோ ? - மழை
தேங்கும்  நீர்  வளமோ ? - வாங்கும்
ஏரியின்  முந்தும்  மாதிரி - நீர்
சேர  தேடிட  ஓடிடக்
கூடுங்  கடலோ ? எழிற்நீரின்  கிடங்கோ ?
                                     எண்ணில்லாத  மடங்கோ ?
வான்தரு  பொன்னோ ?  மகிழும்  இயற்கை
                                                  நமக்குத்  தந்ததுவோ ?
                                                                                                                 -இராதே