இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

சொற்கேட்டல் இனிது

 சொற்கேட்டல் இனிது


படுக்கையில் கால்கை ஆட்டிப்

   படிகளில் தவழ்ந்தே யேறித்

தடுக்கியே விழுந்து வாறித்

   தத்தியே நடக்கக் கற்று

அடுப்படி நுழைந்து சுற்றி

   ஆக்கிய சோற்றைக் கொட்டிக்

கொடுக்குகள் அடிக்கும் கொட்டம்

   குளிருதாம் மனத்தில் இன்பம் !



அடுக்கிய உடைகள் பொம்மை

   அனைத்தையும் அள்ளி வீசி

இடுக்கிலே புகுந்து வந்தே

   எட்டியே குறும்பாய்ப் பார்த்துத்

துடுக்காக ஓடி யாடித்

   துள்ளிய துள்ள லோடே

சொடுக்கிடும் நொடிக்குள் ளாக

   சுழன்றிடும் மழலை இன்பம் !



சுண்ணாம்புச் சுவற்றி லெல்லாம்

   சுரண்டியே கிறுக்கி வைத்துக்

கண்ணாடிக் கதவைத் தட்டிக்

   கற்கண்டாய்ச் சிதற விட்டுப்

பின்னாடி ஒளிந்து நின்று

   பிறைபோல எட்டிப் பார்த்து

முன்னாடிக் குழையும் பிஞ்சின்

   முகத்தாடல் கொள்ளை இன்பம் !



அன்னைமுன் தானை பற்றி

   அடிக்கடி காலைச் சுற்றிக்

கண்ணாக வளர்க்குந் தந்தை

  கைகளில் பிடித்துத் தொங்கி

வண்ணமாய்க் குழைந்து  கொஞ்சி

   வாயார முத்த மிட்டே

எண்ணத்தை ஆளும் செல்வ

   இளம்மழலைச் சொற்கள் இன்பம் !



தன்மக்கள் தீண்டல் இன்பம்

   தரத்தாலே உயர்ந்த தென்பார்

வெண்சங்கும் குழலும் யாழும்

   வெற்றிசைதான் மக்கள் முன்பே

இன்சொல்லாய் மழலைச் சொற்கள்

   இனிக்கின்ற சொற்கள் தாமே

இன்பமுறு மக்கள் பேறே

   இனிக்கின்ற தென்பான் ஐயன் !



இன்னிசையில் உலகம் நோக்கி

   இயம்புகிற சொற்கள் யாவும்

மண்ணசைக்கும் மழலை முன்னர்

   மண்டியிடும் சொற்க ளாமே

விண்ணுயர நின்ற ஐயன்

   விருப்புடன் மக்கள் பற்றிக்

இன்சொல்லை செவிக்குள் அந்த

    இனிதான குறள்தந் தானே !

                                                          -  இராதே

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக