நட்பெனும் சிதம்பர நாதம் !
நட்பெனும் சிதம்பர நாதம் ! - அதன்
நற்றமிழ் ஓதிடும் தத்துவ வேதம் !
சட்டென இசைத்திடும் கீதம் ! - நேய
சாரத்தை வகுத்திட நடந்திடும் பாதம் !
தித்திக்குந் தேன்சுவை பேச்சு ! - அதில்
தீந்தமிழ் சிறப்புற எழுந்திடும் மூச்சு !
எத்திக்கும் முழவிடும் வீச்சு ! - நமை
இயல்பிலே களிப்புற மயக்கிட லாச்சு !
அன்பிலே திளைத்திட செய்வான் ! - அவன்
ஆர்த்திடுந் தமிழாலே உள்ளத்தில் உய்வான் !
பண்பாலே நட்பினைக் கொய்வான் ! - ஆழப்
படித்ததைப் பாரினில் பயனுற பெய்வான் !
இன்பன் சிதம்பரம் வாழ்க ! - நங்கை
இணையோடே என்றென்றும் இன்பமே சூழ்க !
நன்றாய் மகிழ்வினில் மூழ்க ! - நாளும்
நன்மைகள் பெற்றேநீ நலங்களில் ஆழ்க !
- பொறிஞர் இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக