இராதே

இராதே
eradevadassou

சனி, 23 ஜனவரி, 2016

வீட்டைக் கெடுக்கும் குடி

குடியை  அழிக்கும்  கெடுகுடி;
     குனிவைக்  கொடுக்கும்  நுகத்தடி;
அடிமை  போதை  சொற்படி;
     அறிவும்  இயங்கா  முறைப்படி;
அடிதடி  சண்டை  கெடுபிடி;
     அரங்கேற்  றிடுமே  மொடாக்குடி;
மடியும்  வீட்டின்  புகழ்க்கொடி;
     மதிப்பைக்  கெடுக்கும்  பெருங்குடி!


கடனில்  குடும்பம்  விழும்படி,
     கண்ணீர்  சிந்தி  அழும்படி
அடகுக்  கடையில்  தாலிக்கொடி,
     அண்டா  குண்டான்  உருப்படி
உடமை  அனைத்தும்  வைத்தபடி
    உழலும்  வீட்டில்  நெருக்கடி;
மடமை  நிறைந்த  இக்குடி
     மனித  உயிர்க்குக்  கன்னிவெடி!


தெருவில்  குடும்பம்  வரும்படி
     திசைமாற்  றிடுமே  மதுக்குடி;
துரும்பாய்  இளைத்துக்  கெடும்படி
    தொல்லை  அல்லல்  உறும்படி
உருவம்  குலைந்து  விடும்படி
     உண்டாக்  கிடுமே  நோய்நொடி;
மருகும்  குடியின்  செப்படி
     வருத்தி  யெடுக்கும்  மரணடி!


அன்பை  இழக்கும்  முதற்படி;
     அனைந்தத்  தீயின்  அடுப்படி;
பண்பை  முறிக்கும்  பிரம்படி;
     பழக்க  வழக்கக்  குளறுபடி;
துன்பம்  வீட்டைத்  தொடும்படி
     துரத்தும்  அரக்கன்  கைப்பிடி;
இன்பம்  வேண்டின்  இக்குடி
     இன்றி  நடப்பாய்  தினப்படி!


குடியால்  வருமே  கெட்டநெடி;
     குடியின்  வெறியில்  ஆட்டமடி;
குடியால்  குணங்கள்  தவிடுபொடி;
     குடியால்  கிடைக்கும்  செருப்படி;
குடியை  மறப்பாய்  நல்லபடி
     குடித்தால்  வாழ்வே  தள்ளுபடி;
குடியை  விட்ட  செயல்படி
    கூடின்  வாழ்வு  செல்லுபடி!


அழுக்குக்  கறையாம்  மதுக்குடி
     அறவே  இல்லை  எனும்படி
முழுக்கத்  திருந்தும் வகைப்படி
     முயன்றே  நிறுத்து  பெருங்குடி;
ஒழுக்கக்  கேட்டின்  எடுபிடி
     ஒழிய  வேண்டிக்  கொடிபிடி;
இழுக்க  வாழ்வு  மறுபடி
     இல்லை  என்றே  கடைப்பிடி!
                                                                       -இராதே
                                                                   

வியாழன், 14 ஜனவரி, 2016

பொங்கல்

வானில்  எழுங்கதிரை  - புவி
ஊனில்  விழுங்கதிரை
கூனி  லாப்புகழ்  போற்றி  மகிழ்ந்திட
வந்திடுமே  பொங்கல் - ஒளி
தந்திடுமே   பொங்கல் !


தேரில்   வருங்கதிரை - இப்
பாரில்   எழுங்கதிரை
ஊரி   னிலேவர   வேற்று   மகிழ்ந்திட
வந்திடுமே  பொங்கல் - சுடர்
தந்திடுமே   பொங்கல் !


ஓடி   வருங்குதிரை - அதில்
ஆடி   வருங்கதிரை
பாடிக்   குளிர்ந்திடக்   கோடிக்   குரல்ஒலி
தந்திடுமே  பொங்கல் - கதிர்
வந்திடுமே   பொங்கல் !


மேற்கில்   விழுங்கதிரை - நால்
திக்கில்   ஓளிர்கதிரை
நெற்களங்   கள்நிறை   பொற்குவி   யல்பெற
பொங்கிடுமே   பொங்கல் - பால்
பொங்கிடுமே   பொங்கல் !


வாடுந்   தமிழினத்தை - துயர்
சூடுந்    தமிழினத்தை
கேடும்   விட்டிட   பாடும்   பணியென
வந்திடுமே  பொங்கல் - சுவைத்
 தந்திடுமே   பொங்கல் !
                                                                                  -இராதே




போகி

கூடும்   குழந்தையர்
     கொட்டும்   பறையொலி
          கும்மி   குழைகிறது !


போடும்  குப்பைகள்
     புழங்கும்  பழமையைப்
          போகி  எரிக்கிறது !


மூடும்   கரும்புகை
     மூட்ட   முறும்புவி
          முக்கித்   தவிக்கிறது !


கேடும்   நிகழ்வதில்
     கேட்டை   நிறுத்தியே
          கேண்மை   புவிக்காப்போம் !
                                                                         -இராதே