இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

                   கம்பன்

( காவடிச் சிந்து )

( கண்ணன் வருகின்ற நேரம் )

கம்பன் தருகின்ற பாடல் - சுவை
கூடல் - வண்ணங்
கண்டு மொழிந்திடும் ஆடல் - இசை
காற்றிக்கிடை ஊடுங்குழல்
ஊற்றுக்கண் ணூறும்படி
காணுந் தமிழ்த்திறம் பாரும் ! - மொழி
ஞானம் எல்லாம்மெல்ல சேரும் !



அம்பின் நளினமிட் டோடும் - கவி
பாடும் - அறம்
அண்டி அண்டிவிளை யாடும் - எழில்
அழகோவியம் சதிராடிட
மழைபோல்மனங் குளிராகிட
அள்ளி அள்ளிப்பாக்கள் சூடும் ! - சந்தம்
துள்ளித் துள்ளித்தாளம் போடும் !



கம்பன் கவிக்கிணை இல்லை - உண்டோ
எல்லை ? - என்று
கற்ற வருங்கேட்குஞ் சொல்லை - மக்கள்
கனவாயிது நினைவோயென
மனமீதினில் கருத்தூன்றிடக்
கண்டு மகிழ்ந்திடச் செய்வார் ! - புகழ்
கம்பன் இசையினில் உய்வார் !


தெம்பு தரும்நன்மை சேர்க்கும் - தீமை
தோற்கும் - இன்ப
செந்த மிழின்தேனை வார்க்கும் - ராமன்
சிறப்பூறிடும் பெருங்காதையில்
அறப்போரிடுந் தமிழ்மாக்கவி
தீந்த மிழ்த்தொண்டுகள் செய்தார் ! - நல்ல
சிந்த னைப்பாவியம் நெய்தார் !

- இராதே


 தமிழின முரசு

பராங்குசனார்

( காவடிச் சிந்து )


செந்தமிழ்த் தேனூறும் வண்டு - மலர்ச்
செண்டு - கற்
கண்டு - நாளுஞ்
செம்மொழிக் காற்றிடுந் தொண்டு - புதுவைச்
சிவனார்மகள் சீர்ப்பூங்கொடி
தவமேவிய தமிழ்மாமணி
செப்பிடுந் தேன்மண வாளர் ! - இவர்
எப்போதும் மொழியின்பற் றாளர் !


சொந்தங்கள் கொண்டாடும் இன்பர் - உயிர்
நண்பர் - உயர்
பண்பர் - வாகை
சூடியே வென்றாளும் அன்பர் - ஈகைச்
சுடரேந்திடும் கொடைமாமனம்
உடனேதர வளமேவிய
சுற்றங்கள் போற்றிடும் வாசர் ! - மொழி
வெற்றிக்கு வித்திடும் நேசர் !


முந்திக்க ளங்காணும் தீரர் - செயல்
வீரர் - வெல்லுஞ்
சூரர் - புகழ்
முன்னோடும் திருக்கனூர்ச் சீரர் - உரிமை
முழவோசைகள் ஒலியேயெழ
வழக்காடிடும் பெருமாள்மகன்
முத்தமிழ் மீட்டிடும் அரசு ! - தமிழ்
நித்தமும் கேட்டிடும் முரசு !


சிந்தில் பராங்குசம் பாட்டு - மகிழ்
சீட்டு - பா
ராட்டு - துயர்
செப்புந் தமிழ்ப்பகை ஓட்டு - பெயர்
திருகூடிட வளவாழ்வினை
அருளாய்வுற புவிமேவிட
சிறியோன் 'ராதே'வின் சிந்து ! - என்றும்
செறிவாய் நிற்கும்நி னைந்து !

- இராதே

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

 


என்னை எழுதும் எழுதும் என்றே
மாமழை குதிக்குதே !
எந்தன் அழகை வரைக என்றே
மாக்கடல் துடிக்குதே !
முன்னும் பின்னும் எழுலு ணர்த்தி
இயற்கைவட்டம் சுழலுதே !
முந்து கின்ற முகிலி னங்கள்
முகமினிட்டே உழலுதே !
மின்னும் மின்னல் இடிய னுப்பித்
தன்னைப்பாட அழைக்குதே !
மேனித் தீண்டுங் குளிரின் காற்று
தன்விளக்கம் நுழைக்குதே !
வண்ண நிலவு முகமி னுக்கி
வண்ணம்பாட கெஞ்சுதே !
வான வில்லோ வடிவங் காட்டி
உரைக்குமாறு கொஞ்சுதே !
- இராதே

வியாழன், 24 செப்டம்பர், 2020

 நல்வாழ்த்துகள்.



Image may contain: 6 people, people standing



           வாடிவதங்கும் வையம் !

எடுப்பு

வாடி வதங்குது வையக மே - அதன்
வனப்பும் குறையுது நித்தமு மே ( வாடி )


தொடுப்பு

ஊடிப் பாய்ந்திடும் கதிர்களி னால் - வெப்பம்
ஊடே பரவிடும் கரிமத்தி னால் ( வாடி )


முடிப்பு

ஏரி குளங்களில் நீரிறங் கும் - அதில்
எப்படி ஊற்றுக்கண் உயித்தெழும் பும் ?
மாரி பொழிவது தவறிவி டும் - இனி
மாறியே பருவங்கள் உயிரெடுக் கும் ! ( வாடி )



வாரி திரையெலாம் மேலெழும் பும் - பெரும்
வளிகொண்ட அழுத்தத்தில் புவிநடுங் கும்
ஏறி கரையினைக் 'காலி' செய் யும் - ஊர்
எங்கிலும் துயரினைப் பதிவுசெய் யும் ! ( வாடி )


- இராதே
No photo description available.

புதன், 23 செப்டம்பர், 2020

                          தாய்மொழி

எடுப்பு

இன்பத் தமிழ் மொழி எங்கே ?
ஏன் மறந்தார் கற்க இங்கே ? ( இன்ப )


தொடுப்பு

கன்னல்மொழி ஏனோ காணாமல் மறையுது ;
கன்னித்தமிழ் பேசும் ஆளுமே குறையுது ! ( இன்ப )


முடிப்பு

கன்னித் தமிழ்க்குரல் 'மம்மி' என்றது ;
காதடைத் தேஉள்ளம் அதிர்ச்சியில் நின்றது ;
தண்டமிழ் நடையோ ' வாக்கிங்கில் ' சென்றது ;
தன்னல ஆங்கில மோகமே வென்றது ! ( இன்ப )



தாய்மொழி பள்ளியில் தழைக்கா தழியுது ;
தடுக்காத அரசினால் தமிழுமே ஒழியுது ;
வாய்வழி செந்தமிழ் யாரிங்கே பொழிவது ?
மயக்கம் அறுத்திட யார்முன் மொழிவது ? ( இன்ப )



நல்ல தமிழ்பேச நாமே வெறுப்பதா ?
நாணப்பட் டேதமிழ் நவில மறுப்பதா ?
மெல்ல தமிழ்மொழி மேன்மை சிறுப்பதா ?
மேவிய ஆங்கிலம் கழுத்தை அறுப்பதா ? ( இன்ப )



நற்றமிழ் காத்திட நம்மை அளிப்போம் !
நாளுந் தமிழ்ப்பேசி நன்கே களிப்போம் !
உற்றவர் மற்றவர் ஊர்போற்றத் துளிர்ப்போம் !
ஒண்டமிழ் வாழ்க! வாழ்கவென் றொலிப்போம் ! ( இன்ப )


- இராதே
Image may contain: text that says 'தமிழ்மொழி இது ஒரு மந்திர தந்திர 中 மொழி'
You, Sugumaran Govindarasu, பக்கிரிசாமி தியாகராஜன் and 14 others
5 Comments
Like
Comment
Share

சனி, 19 செப்டம்பர், 2020

                     இனமானம்

சிரிப்பார் ; களிப்பார் ; குதித்திடுவார் ;
திணிக்கத் திணிக்கப் பிறமொழியை
விரிப்பார் ; மொழிவார் ; பிணைந்திடுவார் ;
விளம்பும் தமிழர் புகழ்மறப்பார் ;
நெரிப்பார் ; முறிப்பார் ; குரலடைப்பார் ;
நெறிசேர் தமிழின் விரலுடைப்பார் ;
வரிந்தே எழுந்தே முழுங்கிடுவார் ;
மானம் மதித்து மரிப்பாரோ ?




நடிப்பார் ; மறைப்பார் ; நரித்தனத்தால்
நலமாய் விளங்க நயந்திடுவார் ;
துடிப்பார் ; அழுவார் ; தொழுதிடுவார் ;
துரத்திப் பதத்தைத் துதித்திடவே
பிடிப்பார் ; விழுவார் ; வணங்கிடுவார் ;
பிறப்புக் குறித்து மதிப்பிழப்பார் ;
இடிப்பார் எவரும் திருத்திடினும்
இனமா னத்தை மறப்பாரே !




பெரியார் உரையால் முரசறைந்தார் ;
பெருமை படவே இனவுணர்வைத்
தெரியார் ; தெளியார் தெரிந்திடவே
திறமாம் உழைப்பை அளித்தனரே ;
சரியாய்ப் புரிந்து செயல்படுவோம் !
சரிவைத் தடுக்கத் திரண்டிடுவோம் !
உரிமை உயிர்க்கும் இனமான
உணர்வைப் பெருக்க முயன்றிடுவோம் !


- இராதே
Image may contain: Tk Kalapria, beard, text that says 'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு தந்தை பெரியார்'
You, Hema Nambi, வேணு. ஞானமூர்த்தி and 7 others
1 Comment
1 Share
Like
Comment
Share