குருதி
( காவடிச்சிந்து )
செந்தே னிறமுடைய நீராம் ! - உட லோடிடும்
செந்நீ ரெனஅணையும் பேராம் ! -அது
சிந்திடவீ ழாமலுடல்
தன்னுடன்அன் றாடவலம்
சென்றிடும் மாண்பமையும் சாறாம் ! - தொடர் சுற்றிடும்
செய்கையின் னுயிர்வளர் சீராம் !
சந்தடி யில்லாமலுடல் ஊறும் ! - ஊட்டச் சத்தோடு
சகலமி டமும்நிதம் சேரும் ! - நின்று
சக்கையுறும் சேர்கழிவை
மிக்க அழ காய்விளையும்
தக்கவினை யினால்வெளி யேறும் ! - செஞ்சீர் அணுவின்
சாதனைஇ தையெடுத்துங் கூறும் !
நுண்ணிய அணுவுங்காக்கும் எல்லை ! - வரும் நோய்த்தொற்று
நுண்ணுயி ரழிக்கும்அணு வெள்ளை ! - உயர்
நுட்பமுடன் தட்டையணு
வெட்டுடலின் செங்குருதி
நொந்தெழச் செய்வதுவே இல்லை ! - அணு மூன்றினில்
நுண்செய லீர்க்கும்உள்ளங் கொள்ளை !
உந்துமே இதயநொடி தோறும் ! - உயிர்க் காற்றினை
யுறிஞ்சும் செங்குருதியும் சீறும் ! - எலும்
புள்வளரும் மஜ்ஜையினி
லுள்மலரும் நல்லணுவும்
உற்றபடி சுரந்துடம் பூறும் ! - சுழன் றோடிடும்
உதிரத் தில்உரமு மேறும் !
செய்திடுவோம் செங்குருதி ஈகை ! - உயிர் மீட்டிடும்
செயலிலுங் கிட்டும்புகழ் வாகை ! - ஆறு
திங்களென ஓர்முறையும்
தங்கமன எண்ணமுடன்
செய்யுங்கொடை மகிழ்ந்தாடும் தோகை ! - உயர்ந் தோரிடும்
செய்கையினால் மனம்பெறும் ஓகை !
மெய்யுணர்வை மீட்டிவிடும் சுருதி ! - இழப்போ மெனில்
மேவுமு யிர் அடைந்திடும் இறுதி ! - திகழ்
மெல்லுடலை நல்லபடி
செல்லுபடி யாகும்படி
மேனிநலங் காப்பதுதான் குருதி ! - உயி ராண்டிடும்
மென்குருதி காக்கயேற்போம் உறுதி !
- இராதே
ஓகை; உவகை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக