மழை
( காவடிச் சிந்து)
பல்கும்நீர் அலைவுற முகில்தர
பாய்வுற வான்பொழி மாமழையே !
பஞ்சம்தான் இனியிலை எனும்நிலையே !
பரவவுந் தூவிடும் நீரிழையே !
பருவதண் ணீர்தரு நீர்த்துளியே !
அருகும்நீர் பொங்கிட வா வெளியே !
பங்கின்பொருந் தும்புனல்தங்
குஞ்சிறுகண் ணும்இனமும்
பந்தி விருந்திடும் வருவாயே !
அல்லல்தீர் வுஉருபெ றநீர்வழி
ஆறுகள் நிறைவுற பெய்திடுவாய் !
ஆழ்ஏரி மதகுகள் நீரேறி
அருவுறும் வறுமையை மாய்த்திடுவாய் !
அரங்கணி நீர்வளம் தேங்கிடுமே !
மரமொளிர் பசுமையும் ஓங்கிடுமே !
அன்னங்களும் வண்டினமும்
கண்கவரும் இன்பமென்றுன்
அன்பி னழைப்பொடு வருவாயே !
விண்ணில்பே ரிடியுமு டன்அலை
மின்ன லெழுதிடும் தூரிகையாம் !
விஞ்சும்பே ரழகுடன் நடம்புரி
வேகமுகி லாலணையும் காரிகையாம் !
விளைபயிர் உயிர்பெற வீழுமூற்றே !
மிகமிகும் அறுவடை ஈணும்சாற்றே !
விண்ணுதிரும் பொன்விளையும்
கண்டுவிருந் துண்ணுதல்முன்
விந்தை அறத்தினள் வெளிவாராய் !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக