உருப்படி
( வஞ்சி வந்தனளே - மலைகுற )
எடுப்பு
சிந்து பாடினனே !- மனமகிழ்
சிந்து பாடினனே ! ( சிந்து )
தொடுப்பு
சிந்தை நடமிடு முந்தை மனமொழி
விந்தை எழுமதி வந்து முழவிட
சிந்தும் எழிலிசை உந்துங் கனவினில்
சந்தம் அழகுற முந்தும் நினைவொடு ( சிந்து )
முடிப்பு
கொஞ்சுந் தமிழிசை மஞ்சம் புகுந்திட
பஞ்ச ணையினிடை ஊடவே
மஞ்சு மிதந்திடும் பஞ்சு மொழியவள்
கெஞ்சும் இளநகை சூடவே
தஞ்சம் அருளிடும் விஞ்சுந் தமிழ்மொழி
மிஞ்சும் சிறப்பினை நாடவே
துஞ்சுந் தமிழரின் நெஞ்சம் எழுந்திட
அஞ்சும் நிகழ்வுகள் மங்க மனமகிழ் ( சிந்து )
திங்கள் ஒளிமழை அங்கி யெனவிழ
வங்க நிறைகடல் பொங்கி அலையெழ
மங்கை இதழ்வழி முங்கி யெழும்பிடுந்
தெங்கின் சுவையுடன் சங்க வளர்த்தமிழ்
சங்கம் முழங்கிடும் துங்க இசையுற
எங்கள் மொழிதமிழ் சிங்க நடையுடன்
எங்கும் நடந்திடும் தொங்கல் ஒலியுடன்
தங்குந் தமிழ்மொழி தங்க மனமகிழ் ( சிந்து )
- இராதே
(அங்கி : உடை , துங்க : தூய்மை , தெங்கு : தித்திப்பு )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக