பூசணி புலம்பல்
( உருப்படி )
எடுப்பு
நான் என்ன தீமை செய்தேன் ? - மனிதா
நான் என்ன தீமை செய்தேன் (நான்)
தொடுப்பு
ஏன் என்னை எடுத்துத் தரையில் மோதி
மாளவே மண்ணில் மண்டை உடைத்தாய் ? (நான்)
முடிப்பு
பச்சை கறிகாயாய் உணவில் சேர்ந்ததா ?
பதமாய்ச் சுவைத்திடும் ' அல்வா'வாய் ஆனதா ?
மெச்சும் பூசணிப் பூவைத் தந்ததா ?
மேனிப் பயனுற சாறாய்ப் போனதா ? (நான்)
கண்ணேறுக் கழிக்க வாசலில் கட்டினாய் !
காக்கையை விரட்ட பொம்மையாய் நாட்டினாய் !
மண்புவி சாலையில் உடைத்தே கொட்டினாய் !
மனத்திடை நன்றியைச் சொல்லாமல் பூட்டினாய் ! (நான்)
வீணான மூளையின் மூடப் பழக்கத்தால்
வீதியில் எனைவீசி வழக்கிடச் செய்தாயே !
ஆனான இன்னுயிர் 'அம்போ'னு போகுதே !
ஆகாத செயலினை அடியோடு செய்யாதே ! (நான்)
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக