இடை பத்து
(வெண்பா)
நல்லிடைதான் என்றெனுக்கு நன்காய்ந்து - சொல்வாயோ
என்றிருந்தேன் இன்றுவரை இல்லை விடைஒன்றும்
தென்றலே ஏன்தயக்கம் செப்பு (1)
உரலோ ? துடியோ ? ஒளிமின்னல் கீற்றோ ?
சரம்வீழ் மணற்கடிகை தானோ ? - உரசிடுந்
தென்றல் உலவித் திரியும் கொடிநாணோ ?
என்னென்பேன் உந்தன் இடை (2)
இடைதான் இருக்கிறதா ? இங்கே , மலைத்து
விடைதான் காணா வினாக்கள் - மடைபோல்
பொழிந்திடும் பாற்குடங்கள் பொல்லா எடையின்
செழிப்பால் இடைஉடையும் செப்பு (3)
முந்தானை ஏனுனக்கு முன்கோபம் மூடுகிறாய் ?
நந்திபோல் மறைத்து நாணுகிறாய் ! - முந்திவருந்
தென்றல் தருமுத்தம் தீண்டாதோ ? ஏக்கத்தில்
எண்ணி சிலிர்க்கும் இடுப்பு (4)
தென்றல் நகர்ந்தூரும் சிற்றெறும்புச் சென்றூரும்
குன்றா அழகூரும் கூன்பிறை - என்றே
முறுக்கி வளைந்தூரும் மென்விரல்கள் ஆள
இறுக்க இடரும் இடை (5)
சடையின் அசைவில் சரியும் உடையில்
நடையின் ஒழுங்கில் நடன - அடைவில்
கடைக்கண் அகல கவரும் மடிப்பின்
இடையில் உலவும் எழில் (6)
சுற்றுங் கொடியில் சுவைக்கும் இளநீர்கள்
இற்று விழுமோ ? இடிபடுமோ ? - பற்றியே
நின்றுளம் பந்தடிக்கும் நேர்த்தியினை என்னவென்றே
சின்ன இடைநீ செப்பு (7)
மாலைவருந் தென்றல் மயங்கி நுழைந்திட
சேலைத் தலைப்போ சிணுங்கும் - வேளை,
மடிப்பின் துடிப்பில் மனமோ கசங்க
நடிக்கும் இடையின் நகை (8)
வளைவில் வளையா மனதும் வழுக்கும்
கிளைவிடும் இன்பந் துளைக்கத் - திளைக்க
மலைக்க மலைக்க மதியும் மருள
இளைத்தே இழுக்கும் இடை (9)
சிக்கெனப் பற்றினேன் சிக்கனச் சிற்றிடைச்
சொக்கும் பொடியிட சொக்கவே - வைக்கும்
அழகை இடைபத்தாய் ஆக்கினேன் வெண்பா
இழைத்தேன் வடித்தேன் இடை (10)
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக