ஐயனார்
(காவடிச் சிந்து)
எல்லைதொறும் ஐயன்செயுங் காவல் - ஏழை
எளியோரைக் காப்பதில்பே ராவல் - ஊரின்
ஏரிக்கரை காடுகண்மாய்
நீர்நிலைகள் ஓடைவெளி
எங்கும் - புகழ்
தங்கும் !
தொல்லைகளை வேரறுக்கும் வீரம் - அஞ்சுந்
துன்பங்களை விரட்டிடுந் தீரம் - இரவில்
துள்ளு'சேமக் குதிரையேறி
விள்ளுபெருஞ் சேனையோடு
வேட்டை - அழியும்
சேட்டை ! (1)
உருமி யடிக்கும்மேள தாளம் - உணர்வை
உசுப்பிடுமே குலவை ஓலம் - நெடும்
ஊர்வலமாய் ஊர்முழுதும்
ஆர்வமுடன் கருப்பனோடு
வருவார் - துணிவு
தருவார் !
உருட்டும் மிரட்டும்வாளை யேந்தி - கெஞ்சி
ஒண்டும் அடியார்க்கருளும் சாந்தி - தந்தே
ஊட்டமுடன் ஓடித்தேடி
ஆட்டமுடன் தீமையினைக்
கொல்வார் - அறம்
வெல்வார் ! ( 2)
பூரண புட்கலையோ டிணைந்தே - வரம்
பொழிவதில் ஐயனாரும் முனைந்தே - இன்பம்
பூணுதலில் பேணுதலில்
வேண்டுபவர் வாழஅருள்
புரிவார் - வாழ்த்து
சொரிவார் !
பேரழகுக் 'குண்டலமும் குழையும்' - செவியில்
பீடுடனே ஊஞ்லாடிக் குழையும் - பெருமை
பேசுகிற கெடாமீசை
கூசுகிற ஜடாமுடி
காட்சி - காண
மாட்சி ! (3)
'சங்கன்', 'சின்னான்','சோணை',நடுக் காடன்' - வீரன்
'சமயன்','மூக்கன்','சுடலை மாடன்' - சீடர்
தாங்கிடவே தோள்கொடுத்தே
பாங்குடனே சுற்றும்'பரி
வாரம்' - பண்பின்
ஆரம் !
குங்கும திருநீரு சந்தனம் - பெற்றுக்
கொண்டோர் பெறுமனமோ நந்தனம் - நாட்டார்
குறைகளையும் பிணிகளையும்
முறையறிந்தே முற்றுங்களை
யெடுப்பார் - மகிழ்வு
கொடுப்பார் ! (4)
- பொறிஞர் இராதே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக