கோடங்கிப் பாட்டு
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் போகுது போகுது
சொல்லடி சொல்லடி தமிழ் மாகாளி
மெல்ல குறிசொல்லு மெய்யானத சொல்லு
தொல்லை தொலையாது துன்பம் துலங்குது
நல்லது போகுது வல்ல தமிழுக்கு
படிப்பும் வளரல தமிழும் செழிக்கல
படித்த தமிழர்க்கு வேலை கிடைக்கல
தமிழைப் படிச்சவர் ஆட்சி ஆளல
நல்ல காலம் கெட்டு கிடக்குது
தமிழை இழிப்பவன் தலைவன் ஆகுறான்
பொழுதைக் கடப்பவன் பூமியை ஆளுறான்
பள்ளியில் எல்லாம் தமிழே ஒழியுது
படிக்க இந்தியே முந்தி நுழையுது
துள்ளிய செந்தமிழ்த் தூக்குல ஆடுது
தூமொழி காப்போ தூரமா ஓடுது
தமிழை மாய்க்கும் ஆட்சி வருகுது
தமிழைச் சாய்க்கும் சூழ்ச்சி பெருகுது
தண்டமிழ் புலவர் தன்னலம் ஓங்குது
கண்டிடும் விருதுக்கு ஆட்சியைத் தாங்குது
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் போகுது போகுது
சொல்லடி சொல்லடி தமிழ் மாகாளி
மெல்ல குறிசொல்லு மெய்யானத சொல்லு
- இராதே
