இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

நம்புடா

 நம்புடா !


பூமேனிப் பொன்பட்டே

      கண்ணுறங்கு !

புதுவானில் விடிவெள்ளி

      கண்ணுறங்கு !

தாலாட்டுப் பாடநான்

      தாயில்லையே ;

நீலாம்பரிப் பாடத்

      தெரியலையே !  

நீலாம்பரிப் பாடத்

      தெரியலையே !  

( பூமேனி )



பூங்காற்றும் உரசாதப்

      புல்லாங்குழல் ;

புதுமேகம் தூறிய

      மழையின்துளி ;

மங்காத ஒளிவீசும்

      மஞ்சள் நிலா ;

மாடத்துள் திகைக்கிற

      வெள்ளை புறா !   

மாடத்துள் திகைக்கிற

      வெள்ளை புறா     ( பூமேனி ) - 1



ஊருக்குள் யார்யாரோ

      புறம்பேசுவார் ;

உதவாதக் கதைக்கெல்லாம்

      உனையேசுவார் ;

பேருக்கே பொய்யான

      பாசம் வைப்பார் ;

பேசுறப் பேச்சாளே

      முள்ளாய்த் தைப்பார் ! 

பேசுறப் பேச்சாளே

      முள்ளாய்த் தைப்பார் ! 

   ( பூமேனி ) - 2



துயரந்தான் முன்வாசல்

      திறந்தே வரும் ;

தோதாகக் காதலும்

      பிறந்தே வரும் ;

துரோகங்கள் நண்பர்கள்

      தயவால் வரும் ;

தீராதத் தொல்லைகள்

      தானா வரும் ! 

தீராதத் தொல்லைகள்

      தானா வரும் ! 

   ( பூமேனி ) - 3



எல்லாமும் சந்திப்பாய்

      பின் நாளிலே  ;

இப்பவே சொல்றேன் நான்

       தெளிவாகனும் ;

வெல்வது எதிர்நின்று

      விடும் அம்புடா ;

வெற்றிதான் உனைசேரும்

      நீ நம்புடா !

 வெற்றிதான் உனைசேரும்

      நீ நம்புடா !  ( பூமேனி ) - 4



- பொறிஞர் இராதே


மாற்றம் !

 மாற்றம்


மாற்றமில்லை ஏதும் மாறவில்லை

     மாறுதலும் பேராறுதலும் தர

          யாருமில்லை - இனி

          யாருமில்லை !     ( மாற்றம் )




காற்றில் தூய்மை காணவில்லை ;

சுவாச நோயுக்குப் பஞ்சமில்லை ;

ஆற்றில் கழிவுகள் பெருந்தொல்லை ;

தொடர்ந்தால் நீரும் சோறுமில்லை !    ( மாற்றம் ) - 1



குப்பைக் கூளங்கள் வெளியில்விழும் ;

விழுகிற போதே சண்டையெழும் ;

சாக்கடை நாற்றத்தில் தெருக்கள்அழும் ;

சரிசரி யென்றே கொசுக்கள் தொழும் !    ( மாற்றம் ) - 2



தொற்றும் பிணிகள் நின்றாடும் ;

சூழலைக் கெடுத்துக் கொண்டாடும் ;

முற்றுஞ் சுத்தம் இல்லையெனில்

ஊரே எரிக்குஞ் சுடுகாடாம் !    ( மாற்றம் ) - 3



நூற்றுக்கு நூறு தன்னலந்தான் ;

நொறுங்கிப் புழுங்குதுப் பொதுநலந்தான் ;

ஏற்றுத் திருந்தவும் மனமில்லையே ;

ஏற்றால் உடல்நலக் கேடில்லையே !    ( மாற்றம் ) - 4


பொறிஞர் இராதே

காலம் !

 காலம் சுத்துற வேகம் பாரு

     கண்ணுக்கு முன்னாலே !

கடந்து வந்த பாதை பாரு

     சொல்லுக்கு பின்னாலே !    




உலகஞ் சுத்துறச் சுத்துல தானே

     உளறுந் தத்துவம் புரியும் ;

கலகம், குழப்பம் வந்தா தானே

     வாழும் வாழ்க்கைத் தெளியும் !    




சிங்கம், புலியும் சிரிச்சிப் பழகிக்

    கவிழ்த்து விடாது ;

பங்குக் கேட்டு நைசாப் பேசிக்

   கழட்டி விடாது ;

பொங்கும் பாசம் நேசம் ஊட்டித்

   தெருவில் விடாது ;

திங்குஞ் சோத்தில் விஷத்தை வைச்சித்

   தீர்த்துக் கட்டாது !    



காத்தும் மழையும் வெயிலும் அடிக்கக்

   காசுக் கேக்கலையே ;

காயும் பழமும் பயிரும் விளைய

  ' மாமூல்' கேக்கலையே ;

பூவு சிந்துந் தேனுக் கெங்க

   வட்டிக் கேக்குது ;

புரிஞ்சிக் கிட்டா மனுசன் தேறப்

   புத்தி கிடைக்குது !    



ஓடும் ஆறும் நீரும் பெருகி

   உசிரக் காக்குது ;

உறைஞ்சி போன மறுத்த மனசு

   ஊரைக் கெடுக்குது ;

பாடு படற எண்ணங் கூடப்

   பறந்து போனது ;

பார்த்த காலம் மனுசன் வாழ்வைப்

   புரட்டிப் போடுது !


கல்லாடன் கவியழகு

 தமிழ்மாமணி கல்லாடன் 84 ஆம் அகவைநாளில்  வாழ்த்தி மகிழ்ந்தோம்


கல்லாடன் கவியழகு!


கார்மேகம் ஈயுங்கொடை கருணைமழை பொய்த்திடினும்; சீர்மேவும் பூந்தென்றல் தீண்டாமல் நின்றிடினும்; தார்வாழைக் குலைத் தள்ளத் தாமாக மறந்திடினும்; பேர்போற்றும் கல்லாடன் பேசுங்கவி மறையாதே!


கறந்திட்டக் கறவைப்பால் கால்நடைகள் மடிபுகினும்; இறங்கிவீழும் காய்கனிகள் எழுந்துவந்தே கிளைபுகினும்; துறந்திட்டத் துறவியர்கள் துள்ளறத்தில் குடிபுகினும்; கரைந்திடாதே மண்ணுலகில் கல்லாடன் கவியழகே!


ஓயாதக் கடலலைகள் ஒருவேளை ஓய்ந்திடினும்; சாயாத இமயந்தான் சமயத்தில் சாய்ந்திடினும்; ஈயாதக் கருமிகள் ஈரமுடன் ஈந்திடினும்; காயாதே மண்ணுலகைக் கல்லாடன் கவியழகே!


மாறாத மாற்றத்தில் மாறுதலும் ஏற்படினும்; வாராதக் காவிரியும் வந்தே அணைத் தாண்டிடினும்; சோராதத் தேனீக்கள் சோர்வினிலே மண்டிடினும்; தீராதே தீந்தமிழ்த்தேன் கல்லாடன் கவியழகே!


– பொறிஞர் இராதே


மழை

 மழை !


மழையே மழையே - நீ எங்கே ? மறந்துப் போனாய் - வர இங்கே ?            (மழை)


கரையைச் சேரும் நுரையெங்கே ? நுரையில் பொங்கும் சுழலெங்கே ? சுழலில் துள்ளும் மீனெங்கே ? நீர்இருந் தால்தான் இவைஇங்கே !     ( மழை ) - 1


பச்சைப் பசுமை பயிரெங்கே ? பயிர்கள் தருகிற விளைச்சலெங்கே ? விளையா திருந்தால் உயிர்களெங்கே ? நீர்இருந் தால்தான் இவைஇங்கே !    ( மழை ) - 2


புலிகள் யானைகள் நீர்த்தேடும் ; குடிக்க வழியின்றி ஊர்த்தேடும் ; ஊரே மிரண்டு அரண்டோடும் ; நீர்இருந் தாலிவை மாறிவிடும் !     ( மழை ) - 3


மரங்கள் வெட்டியப் பெருங்கோபம் மனத்தில் ஆறாக் காயங்களா ? மறுபடி மரங்கள் நாட்டிடுவோம் மாறாக் காயம் ஆறாதா ?      ( மழை ) - 4


மழையே மழையே வா ! வா ! வா ! மண்ணுயிர்க் காக்க வா ! வா ! வா ! மறுத லிக்காமல் மனமிறங்கு மக்கள் வாழப் பொழிந்துவிடு !  ( மழை ) - 5


பொறிஞர் இராதே


கொதிக்கிற மீனும் வறுக்கிற மீனும்

 கொதிக்கிறமீனும் வறுக்கிற மீனும் !



கொதிக்கிற மீனும் வறுக்கிற மீனும்

ருசிக்கிற நாக்குக்குச் சொந்தமன்றோ ?


கொதிக்கிற மீனும் வறுக்கிற மீனும்

ருசிக்கிற நாக்குக்குச் சொந்தமன்றோ ?


கோலா காளான் கிழங்கானிருந்தா

யார்தான் வயித்துள்ளே தள்ளாதவரோ ?


கோலா காளான் கிழங்கானிருந்தா

யார்தான் வயித்துள்ளே தள்ளாதவரோ ?


கொதிக்கிற மீனும் வறுக்கிற மீனும்

ருசிக்கிற நாக்குக்குச் சொந்தமன்றோ ?


வவ்வா குழம்புடன் புட்டுசுறாவும்

வாட்டமா சோத்துக்குச் சேராதா ?


வவ்வா குழம்புடன் புட்டுசுறாவும்

வாட்டமா சோத்துக்குச் சேராதா ?


கொதிக்கிற மீனும் வறுக்கிற மீனும்

ருசிக்கிற நாக்குக்குச் சொந்தமன்றோ ?


வாலையிலே கருவாடுசுட்டா

மனமே துள்ளளில் ஆடாதா ?


வாலையிலே கருவாடுசுட்டா

மனமே துள்ளளில் ஆடாதா ?


கொதிக்கிற மீனும் வறுக்கிற மீனும்

ருசிக்கிற நாக்குக்குச் சொந்தமன்றோ ?



நண்டினிலே செய்த குருமாநினைத்தால்

நாக்கினில் எச்சில் ஊறாதா ?


நண்டினிலே செய்த குருமாநினைத்தால்

நாக்கினில் எச்சில் ஊறாதா ?


இறாலில் தொக்குத் தூக்கலாச் சமைச்சா

யார்தான் சோத்துக்கு மயங்காதவரோ ?


கொதிக்கிற மீனும் வறுக்கிற மீனும்

ருசிக்கிற நாக்குக்குச் சொந்தமன்றோ ?


புறப்படு தோழா !

 புறப்படு தோழா !



புறப்படு ! புறப்படு என்தோழா !

    புயலாய்ப் புறப்படு என்தோழா !

விரைவாய் வாடா என் தோழா !

    வேலைகள் கிடக்கு என் தோழா !


    புறப்படு ! புறப்படு !

    புறப்படு ! புறப்படு !    ( புறப்படு)




சுரண்டல் கும்பல் சூழ்ந்து வரும் ;

சூழ்ச்சிகள் செய்யப் புகுந்து வரும் ;

அரசியல் ஆட்டம் ஆடி வரும் ;

ஆணவத் திமிரில் ஆண்டு வரும் !   ( புறப்படு ) - 1



சொடுக்குஞ் சாட்டையைக் கையிலெடு ;

கெடுக்குங் சேட்டையை அடக்கிவிடு ;

மதவெறி முகத்திரைக் கிழித்துவிடு !

அமைதியின் பகைவரை விரட்டிவிடு !    ( புறப்படு ) - 2



சாதிக் கயவர்கள் தலையினிலே

சமரச மின்றியே கொள்ளியிடு ;

மடியும்  உரிமைக்குக் குரலைக்கொடு ;

மலரும் எழுச்சிக்கு ஆலமெடு ! ( புறப்படு ) - 3



புரட்சிக் கலப்பையால் உழுதுவிடு !

புலரும் பொதுமையின் விதைகளிடு ;

விளையுங் கதிர்களை அறுத்துஎடு ;

விடியும் இரவுக்குச் சொல்லிவிடு !   ( புறப்படு ) - 4



புடைக்குந் தோள்கள் தினவெடுக்கும் ;

புதுமைகள் திரண்டு வடிவெடுக்கும் ;

புரட்டரைத் துரத்த முடிவெடுக்கும் ;

புரட்சித் தலைமுறை தலையெடுக்கும் ! (புறப்படு ) - 5


 - பொறிஞர் இராதே


உத்தமன்

 உத்தமன்


உத்தமனா நடிப்பான் ;

ஊரைக் 'காக்கா' பிடிப்பான் ;

உள்ளுக் குள்ளே திட்டம்

       போட்டுக் கெடுப்பான் !    ( உத்தம )




மேடை யேறி மெத்தப் பேசிக்

   கொள்கையிலே புத்தனாட்டம்

     கூட்டத்திலே நீலிக் கண்ணீர் வடிப்பான் !

     கூட்டத்திலே நீலிக் கண்ணீர் வடிப்பான் ! 

பாடையிலே போகும் போதும் 

   பந்தலிலே புகழும் போதும் 

     மாலை மரியாதை வேண்டித் துடிப்பான் !

    மாலை மரியாதை வேண்டித் துடிப்பான் !     ( உத்தம ) - 1



மாடிமேலே மாடிக் கட்டி

   வீட்டி னுள்ளே 'காரை'விட்டே

     ஊழலிலே ஊற்றெடுத்துத் திளைப்பான் !

     ஊழலிலே ஊற்றெடுத்துத் திளைப்பான் !  

ஏழைப் பாழை எல்லாத்தையும்

   ஏய்ச்சி மேய்ச்சி ஏமாத்தியே

     நம்ப வைச்சிக் கழுத்தைதான் அறுப்பான் !

     நம்ப வைச்சிக் கழுத்தைதான் அறுப்பான் !    ( உத்தம ) - 2



ஊர்முழுக்க ' போஸ்ட்டர் ' ஒட்டி

வானுயர ' பேனர் ' கட்டி

     ஆனந்தமாய்க் கையைக் கொட்டி ரசிப்பான் !

     ஆனந்தமாய்க் கையைக் கொட்டி ரசிப்பான் !

கத்தை கத்தை யாகப் பணம்

   கொட்டிக் கொட்டி 'ஓட்டு' வாங்கி

     மக்களுக்கு நாமம் போட்டுச் சிரிப்பான் !

     மக்களுக்கு நாமம் போட்டுச் சிரிப்பா !   ( உத்தம ) - 3


பொறிஞர் இராதே


மனமா இது மனமா ?

 மனமா இது மனமா ?


மனமா இது ? மனமா இது ?

     இது மனமா ?

மாறி மாறி அழவதில் தான்

      தனி சுகமா ?    ( மனமா )




மௌனப் பாயை விரிச்சுப் போட்டும்

          தூக்கம் காணலையே !

மாயக் கடலில் நீந்தி நீந்திக்

          கரையச் சேரலையே !    ( மனமா )




ஆசை சூறைக் காத்து வீசி

          மனசைக் கலைப்பதும் ;

ஆடி ஆட்டம் போட்ட உடம்பும்

          அடங்கிக் கிடப்பதும் ;

ஓசை  யின்றி ஒன்னு ஒன்னா

          ஒதுங்கிப் பிரிவதும் ;

உரசிப் பார்க்கும் காலம் செய்யும்

          கோலந் தானிது !    ( மனமா ) - 1



பணமும் சொத்தும் நாளும் நம்மை

          சேர விடாது ;

பாச வலையில் துள்ளும் மீன்கள் 

          விடிவு பெறாது ;

இணக்க மில்லாப் பிணக்கு வாழ்வில்

          சோகந் தீராது ;

இறக்கும் முன்னே எத்தனை தான்

          மாய ஜாலமோ ?     ( மனமா ) - 2



உடலுக் குள்ளே இருக்கும் உயிரு

          பறக்க நினைப்பதும் ;

உருகும் சொந்த பந்தம் இன்னும்

          இழுத்துப் பிடிப்பதும் ;

முறுக்குத் திமிரு பற்று விலக

          மறுக்கும் முயல்வதும் ;

முடிய போகும் கதையின் உச்சக்

          காட்சி அல்லவா ?    ( மனமா ) - 3


 - பொறிஞர் இராதே


உதிர்ந்த பூக்கள்

 உதிர்ந்த பூக்கள் !


உதிரும் உதிரும் பூக்களே ;

உண்மை உதிர்க்கும் பூக்களே !

எதிரும் புதிரும் வினைகளாகி

எடுத்து காட்டும் பூக்களே !   ( உதிரும் )





புதிய வரவு துள்ளுமே ;

பழைய செலவு செல்லுமே ;

விதிகள் கோட்டைத் தாண்டலாம் ;

விடியல் வாழ்வைத் தூண்டலாம் !   ( உதிரும் )




விரிவு நாடும் உறவுகள் ;

விலகச் சொல்லும் பிரிவுகள் ;

விரல்கள் தொடுக்கும் மாலையில்

விரைந்து வீழும் பூக்களே !   ( உதிரும் ) - 1



மலரும் வேளை காலைதான் ;

மடிந்து போவாய் மாலைதான் ;

மறந்த மெய்மை உணர்த்தியே

மண்ணில் வீழும் பூக்களே !   ( உதிரும் ) - 2



சாய்ந்த பின்னும் சாதிகள்

சடங்குப் பார்க்கும் மனிதர்க்குச்

சரிந்து நிலைமை விளக்கிடும்

சாயுங் காலப் பூக்களே !  ( உதிரும் ) - 3



உயர்த்திப் பிடிக்கும் மதங்களை

உதற மறுக்கும் பிறவிகள்

உந்தன் பாடம் மறந்தனர்

உதிர்ந்து வீழும் பூக்களே !   ( உதிரும் ) - 4


 - பொறிஞர் இராதே


சொல்லு ! சொல்லு !


 சொல்லு ! சொல்லு !


சொல்லு ! சொல்லு !

    சொல்லு ! சொல்லு !

      உண்மையைச் சொல்லு !

      உண்மையைச் சொல்லு !     ( சொல்லு )


சொல்லுறது வலிக்குமா ?

      சோகத்தைத்தான் திணிக்குமா ?

நல்லதையும் கெட்டதையும்

      நாடறிந்த மொத்தத்தையும்    ( சொல்லு )


புத்தனா ? இல்லை சித்தனா ?

முத்திப்போன பித்தனா ?

எத்தனையோ கதையிருக்கே

எந்த கதையைச் சொல்லுறது !   ( சொல்லு ) - 1


பூவுக் குள்ளே தேனிருக்கும்

பூநாகம் மறைஞ்சிருக்கும்

நாவுக் குள்ளே சொல்லிருக்கும்

நஞ்சுந் தேனும் கலந்திருக்கும் !   ( சொல்லு ) - 2


கண்ணுக் குள்ளே பெண்ணிருக்கும்

பெண்ணு மேலே கண்ணிருக்கும்

ஒன்னுக் குள்ளே ஒன்னிருக்கும்

உரசிப் பாரு பொய்யிருக்கும் !  ( சொல்லு ) - 3


பாம்பைப் போலே சீறுறான் 

பணத்தைப் பார்த்து மாறுறான்

பல்லிளிச்சி வால் பிடிச்சுப்

பதவி சுகங் காணுறான் !    ( சொல்லு ) - 4


பானைக் குள்ளே யானையா ?

பதுங்கி நிக்கும் பூனையா ?

உள்ளக்  குள்ளே ஞானமா ?

ஓங்கி நிக்கும் ஊனமா ?    ( சொல்லு ) - 5


 - பொறிஞர் இராதே

ஞாயிறு, 19 ஜூலை, 2026

காதலாறு

 காதலாறு !


https://suno.com/s/l36OFyMaLjrvafdY


வந்து வந்து வந்து வந்து

நெஞ்சுக் குள்ளே நின்னுக் கிட்டே

அஞ்சி அஞ்சி எட்டிப் பார்த்தே

என்ன பண்ணுறே ! - நீ

என்ன பண்ணுறே !



சிந்தும் முந்தும் செவ்வி தழ்கள்

சேதிச் சொல்ல முன்னே நின்னுக்

கொஞ்சிக் கெஞ்சி ஆடு மாறு

தொல்லைப் பண்ணுறேன் ! - நான்

தொல்லைப் பண்ணுறேன் !



மண்ணுக் குள்ளே வேரைப் போலே

கண்ணுக் குள்ளே என்ன வைச்சி

காத லாறு பாயு மாறு

கணக்குப் பண்ணுற ! - நீ

கணக்குப் பண்ணுற !



வேர்உ றிஞ்சும் நீரைப் போலே

நானு றிஞ்சி உன்னி னைப்ப

வேத னையில் பங்கு வைக்க

வேலைப் பண்ணுறேன் ! - நான்

வேலைப் பண்ணுறேன் !



காத்தி லாடுங் கிளையைப் போலே

சேத்தி லாடும் நாத்துப் போலே

சேர்ந்தே உள்ளம் ஊஞ்ச லாட

ஆசை வைக்கிறே - நீ

ஆசை வைக்கிறே !



கண்கள் இரண்டால் கொக்கிப் போட்டேன்

சிக்கிக் கொண்ட மீனைப் போலே

திக்தித் திக்தித் துள்ள வைக்கப்

பூசை வைக்கிறேன் - நான்

பூசை வைக்கிறேன் !



சொல்லுக் குள்ளே சொல்ல வைச்சி

சொக்க வைக்கும் முள்ளத் தைச்சி

அள்ளி அள்ளிக் குத்தஞ் சொல்லிப்

பழி போடுறே ! - நீ

பழி போடுறே !



பத்தப் பத்தச் சுட்டெ ரிக்கும்

பார்வை யாலே பத்த வைச்சி

வேர்த்து வேர்த்துக் கொட்ட வைக்க

வழி தேடுறேன் ! - நான்

வழி தேடுறேன் !


 - பொறிஞர் இராதே


நல்லதைச் சொன்னேன்!


 நல்லதைச் சொன்னேன் !


ஊருக்குநான் நல்லதைச் சொன்னேன்

   உள்ளதைநான் உரக்கச் சொன்னேன் ;

பேருக்குத்தான் கேட்டு வைச்சாங்க;

   பேசும்வாயைப் பூட்டி வைச்சாங்க !      ( ஊருக்கு)


ஊருக்குள்ளே கேட்கணுமாம்

   உண்மைதனைச் சொல்வதற்கு ?

யாரையெண்ணிப் பார்க்கணுமாம்

    உள்ளக்கதை சொல்வதற்கு ?    ( ஊருக்கு )


நெல்லுக் குள்ளே சோறிருக்கும்

நெஞ்சிக் குள்ளே நஞ்சுமிருக்கும்

வஞ்சத்தைத் தான் மறைச்சி வைச்சா

வாழ்வில் லென்ன மிஞ்சியிருக்கும் ?   ( ஊருக்கு ) 1


ஆணுக் குள்ளே பெண்ணிருக்கா

பெண்ணுக் குள்ளே ஆணிருக்கான்

பூத்தாடும் உறவுக் குள்ளே 

பூடகமாய்ப் பகையிருக்கே ?   ( ஊருக்கு ) 2 


நட்புக் குள்ளே கற்பிருக்கே

கற்பு யெனும் நெருப்பிருக்கே

உறவாடி அதை அணைச்சா

உள்ளுக் குள்ளே வலியிருக்கே ?   ( ஊருக்கு ) 3


கண்ணுக் குள்ளே நீருரிக்கே

கட்டி அழ யாரிருக்கா ?

மண்ணுக் குள்ளே போகுமுன்னே

மானஞ் சொல்லும் வாழ்விருக்கே !   ( ஊருக்கு ) 4


உனக்குள்ளே மானமிருக்கே

உணர்ந்தெழ ஞானமிருக்கே

நடந்த தெண்ணி வருந்திக்கணும்

நாளும் நம்மைத் திருத்திக்கணும் !   ( ஊருக்கு ) 5


 - பொறிஞர் இராதே

வெள்ளி, 17 ஜூலை, 2026

மௌனம் வெல்லும் !

 மௌனம் வெல்லும் !


அந்திவரும் செவ்வானில் அரைத்தமஞ்சள் ஆரம்

உந்திவரும் விழியசைவில் ஒளிர்க்காதல் வீரம்

முந்திவரும் முகத்தழகில் முத்திதழின் ஓரம்

சிந்திவரும் சந்தமெலாம் செந்தமிழின் சாரம்



பாலழகு மேனியிலே பருவமழை கண்டு

மேலழகு மூச்சுயெழ விம்முவதும் உண்டு

நூலளவே இடையளவு நொடிவதிலே விண்டு

காலழகுப் பாடாத கவிஞனில்நான் மண்டு



முத்தமழை முகில்வரவில் மோகமயி லாடும்

வித்தையெழ விழிதிரைகள் மின்னலென மூடும்

தத்தைமனந் தாவிவர ' தந்தனத்தோம் ' போடும்

பத்துவிரல் தொட்டணைக்கப் பஞ்சணையில் தேடும்



பார்வையது பட்டவுடல் பரவசத்தில் துள்ளும்

வேர்வையது பொங்கியெழ வேதனையைத் தள்ளும்

தேர்ந்தசுகம் கண்டதிலே சேர்ந்தகதை சொல்லும்

வார்த்தைவழித் தேடுதலில் மௌனநிலை வெல்லும் 


 - பொறிஞர் இராதே


இறால்


 இறால் !


முறுக்கு மீசை இறாலின்

    முன்னே நீளும் முள்ளுண்டே ;

குறுக்கும் நடக்கும் அசைந்திட

    கூர்ந்த கொம்பும் உணர்த்துமே ;

துறுத்தும் கூட்டுக் கண்களால்

    துழவித் துருவி நகருமே ;

சறுக்கி நீந்தித் திரிந்துமே

    தரையில் நடக்கக் காலுண்டே !



கூடும் கெட்டக் கொழுப்பினைக்

    கெடுத்தும் இதயம் காக்கவும்

வாடும் மூளை சுறுசுறுப்பை

    வழங்கும் புரதம் , எதிர்ப்பாற்றல்

தேடும் பார்வை சிக்கல்கள்

    தீர்த்தே கண்கள் மேம்படவும்

ஈடு கொடுக்கும் சத்துகள்

    ஈனும் உயிரி இறாலே !



நஞ்சு நரம்பு நீக்கியே

    நன்கு சமைத்து சுவைக்கலாம் ;

கொஞ்சம் அளவே தின்பதால் 

    கொழுப்பும் அரிப்பும் அண்டாதே ;

அஞ்சி டாமல் உண்ணுங்கள்

    அழகாய் உடலைப் பேணுங்கள் ;

வஞ்ச மில்லாக் கடலுணவை

    வாரி கொடுக்கும் இறாலே !


 - பொறிஞர் இராதே

காயும் நிலா !

 காயும் நிலா !


எடுப்பு


காயும்நிலாப் பாயும்ஒளி

      தங்க மாங்கனி !

தோயும்இதழ் தேயும்மொழி

      சொல்ல வாஇனி !      ( காயும்)


தொடுப்பு 



சாயும்மனம் போயும்விழும்

      அள்ளும் மோகினி !

மேயும்உயிர்த் தீயும்எழும்

      இன்ப வாகினி !       ( காயும் )


முடிப்பு



அலைமோதுதா ? விளையாடுதா ?

   உளந்தாவித் தாவித்திண் டாடுதே !

நிலைமீறுதா ? மகிழ்வாகுதா ?

   களமாடி ஆடிக்கொண் டாடுதே !  ( காயும் ) - 1



விழிபேசுமா ? மொழிகூசுமா ?

   மலர்த்தேடித் தேடிவண் டூடுதே !

வழிதூரமா ? இதழூறுமா ?

   இளந்தென்ற லூடிமன் றாடுதே !  ( காயும்) - 2



இதுபோதுமா ? இனும்வேண்டுமா ?

   நினைவாகி ஏகிமெய் வாடுதே ?

இதுமோதலா ? தருங்காதலா ?

   எனைமீட்டி மீட்டிபண் பாடுதே !  ( காயும் ) - 3


      - பொறிஞர் இராதே


ஞாயிறு, 12 ஜூலை, 2026

முட்டை


 முட்டை

முட்டை முட்டை முட்டைதான்
    முந்தும் சத்தில் முதன்மைதான் ;
முட்டை மஞ்சள் கருவிலே
    முறையாய்ப் புரதம் ஒமேகாவும்
கொட்டிப் பிணைந்து கிடக்குதாம் ,
    கொழுப்பை அடக்க உந்துதாம் ;
முட்டை இதய நோயினை
    முன்னே நின்று காக்குதாம் !


கெட்ட கண்கள் பார்வையைக்
    கேடு நீக்க செய்வதும் 
கெட்ட கொழுப்பின் தீமையைக்
    கெடுத லின்றி மாய்ப்பதும் 
கட்டுக் கடங்கா நீரிழிவைக்
    கட்டுக் குள்ளே வைப்பதும்
முட்டை முட்டை முட்டையே
    முழுதும் நம்பி உண்ணுங்கள் !


பெட்டை கோழி இடுவது
   பெரிதும் நலங்கள் பயப்பது
வட்ட நீள கோளமாய்
    வடிவில் கண்ணைப் பறிப்பது
கொட்டும் உயிர்ப்பு சத்துகள்
    குவிந்து செழிக்கும் முட்டையை
விட்டு விடாமல் தின்னுங்கள்
    விளையும் நன்மை கொள்ளுங்கள் !

                   - பொறிஞர் இராதே

கவி முடித்தேன்


 https://suno.com/s/SG2iJHQAeCJNtQ7m


கவி முடித்தேன் !


பாயாத விழிஅம்பு பார்த்தே நின்றான் ;

    பணித்தஇமை அழைத்துமே அருகே சென்றான் ;

ஓயாத முத்தமழை பெய்யா இதழா ?

    உறவாடும் உதடுகளை விழியால் மென்றான் ;

மேயாத மானுண்டா புல்லைக் கண்டு ?

    மேவிய மெல்லிதழால்  மேன்மை வென்றான் ;

தேயாத ஆசைவளர்க் காதல் கொண்டே

    தேனிதழில் தித்திக்கும் அமுதம் உண்டான் !


பாயாக அவள்விரிந்தாள் ! படுத்து கொண்டான்

    பட்டெரியும் மோகத்தீ அணையா தென்றாள் ;

தீயாகக் கனன்றாலும் குளிர்ந்தாள், வேர்த்தாள்

    தீந்தமிழின் தேனனைய சுவையால் ஈர்த்தாள் !

மாயாத அகனமர்க் காதல் நீள

    மான்விழியாள் பெற்றின்பம் திருப்பித் தந்தாள் ;

சேயாக அவன்மார்பில் தலையைச் சாய்த்தாள்

    சேர்ந்தின்பம் துய்த்தகதை கண்ணில் பூத்தாள் !


வெண்ணிலவு இக்காட்சி முகிலுள் சொல்ல

    வெண்முகில்கள் ஒன்றொன்றை மோதித் தள்ள

வண்ணமழை கோடையிலும் தூறித் துள்ள

    வனமயிலோ தன்சிறகை விரித்துச் செல்ல

எண்ணிலாப் பயிரசைவு அழகை அள்ள

    எழுந்தென்றல் களிநடனம் புரிந்தே வெல்ல

பெண்ணவளோ தலைகவிழ்ந்து நாணங் கொள்ள

    பெருந்தகைமை யோடுகவி முடித்தேன் மெல்ல


  - பொறிஞர் இராதே

வெள்ளி, 10 ஜூலை, 2026

கபடதாரி


 கபடதாரி !


குள்ளமும் குறுக்கு வஞ்ச

     குதர்க்கமும் பரத்தைப் பார்வை

வெள்ளமும் சிரிப்பும் நஞ்சும்

     வெட்கமும் இல்லாப் பொய்யும்

தள்ளினும் அழுது காலைத்

     தஞ்சமாய்ப் பற்றி சாய்க்கப்

பள்ளமும் வெட்டி நட்பைப்

     பகடையாய் உருட்டும் கள்ளன் !


திடமிக்க ஊழல் குற்றம்

     திசைதிருப்பி வழக்கை மாற்றி

படபடப்பு , பதட்டம் இன்றி

     பணத்திலே குறியாய் நின்றே

உடனுறை வேலை யாளின்

     உயிரினைப் பணயம் வைத்து

வடம்பிடித்து வாழும் கேடு

     வாழ்வதன் மிச்ச எச்சம் !


பார்ப்போரைப் புகழ்ந்து வேசி

     பணிவிடைகள் குழைந்தே ஆற்றி

ஆர்ப்பரிக்க காலை நக்கி

     அடிமைபோல் ஏவல் செய்தே

சேர்ந்தாரை நம்ப வைத்தே

     செருவாளால் கழுத்தை அறுத்தே

வேர்ப்பிடித்து விரியும் ஆசை

     வேட்கையை வெல்லும் கபடன் !


                  - பொறிஞர் இராதே

வியாழன், 18 ஜூன், 2026

பைரவி

 பைரவி !



படைப்பாளி பைரவி பாக்கள் பசுந்தேன் !

கொடையாக சிந்துகிற கொம்புத்தேன் ! - ஓடை

நடையென நடனமிடு நற்றமிழ்த் தேரின்

கடையாணி பைரவி காண்



ஈடில்லாப் பைரவி ஈயும்நல் பாக்களெல்லாம்

கேடில்லாக் கேண்மை வளர்க்குமே ! - பாடி

உறவுகள் நேயம் உணர்த்திடும் பைரவி 

குறைவற்ற நட்பின் குறி



' ஓலைச் சுவடிகள் ' , ' ஒப்பாரி ' , ' தண்டோரா '

சோலைநனி நூல்கள் சுவைக்குமே ! - பாலையெரி

' தீப்பொறிகள் ' சூடேற்ற ' கல்வெட்டு ' வெட்டியே

பாப்புனையும் பைரவி பார்



முற்போக்கு முன்னெடுக்கும் மூத்த முகவரி

பிற்போக்குக் காணா பிறைநிலா ! - கற்றோர்கள்

போற்றுகிற பாப்புயல் ! பொல்லா மனிதர்க்குக்

கூற்றுவன் பைரவி கூறு



நடுக்கடல் 'நங்கூரம்' நட்பின் சிகரம்

கொடுக்கும் கொடையாளி பைரவி - கெடுத்திடும் 

பொய்யரைக் கொன்று புதைக்கும் ' புதைகுழி'

மெய்யதே பைரவி மெய்



           - பொறிஞர் இராதே


ஞாயிறு, 24 மே, 2026

தும்பி

 தும்பி


ஊடாடி விளையாடி

      ஊருணியில் ஊர்ந்தாடி

         ஓசையுடன் பறந்தா டுமே ;

      உரசியிலை, மலராடி

         ஊசியுடல் இறக்கையுடன்

            ஓடோடிச் சுழன்றா டுமே !



காடாடிக் கதிராடிக்

      கண்டயிடம் சதிராடிக்

         கார்முகிலைக் கொண்டா டுமே ;

      கண்களிணைக் கூட்டாகிக்

         கண்கவரும் காட்சியொளிக்

            கலைநுட்ப முகத்தோற் றமே !



கோடான கம்பியுரு

      குழலுருளை வடிவமாய்க் 

         கொசுக்களை உணும்  எம்பியே !

      கூடுக ளின்றியே

         குளநீரில் முட்டையிடக்


            குஞ்சுபொரி வளர்த் தும்பியே !


                       -  இராதே

புதன், 13 மே, 2026

சின்ன கண்ணன்

 சின்ன கண்ணன்

( காவடிச் சிந்து )

( நண்பன் பொறிஞர் இரா.கண்ணன்  60 ஆவது அகவைத் தொடக்க நாள் 14.05 2026 ஒட்டி எழுதிய காவடிச் சிந்து)


சின்ன கண்ணன் தூயநட்பை நாடுவான் - அன்பில்

                                                              கூடுவான் - மகிழ்வு

                                                              தேடுவான் - பண்பின்

    திளைப்போடே கேண்மைநோக்கி ஓடுவான் - பழகும்

        தெளிவூறியே பலவேளைகள்

        களிப்பூறிட களமாடிடும்

      சீரழகு மீனா மணாளன் ! - நனிப்

      பேரழுகுச் சூடுங் குணாளன் !                                                (1)



சின்ன கண்ணன் குறும்புசெயும் மாயங்கள் - புரளுந்

                                                                    தாயங்கள் - மாறுஞ்

                                                                    சாயங்கள் - பணிவு

    செழிப்புறவே மனமாற்றும் காயங்கள் - அறிவு

        திறமேவிட வளமாகியே

        அறமேதவழ் சிறப்பேறிய

      செப்பமுடை நண்பர்தமை ஆளுவான் ! - புகழ்த்

       தெப்பத்திலே மயங்கிடாமல் மீளுவான்!                          (2)



இன்னல்தரு மாந்தருக்குக் கூற்றிவன் - புதிய

                                                       மாற்றிவன் - அரிய

                                                       நாற்றிவன் - நாளும்

    இனிமைமிகப் பழகுதற்கு ஊற்றிவன் - துயர்

        இடர்மாய்ந்திடுஞ்  சுடரேயென

        படர்ந்தாடிடும் விளக்காகியே

     ஏற்றமிகுக் கட்டுங்கலைப் பொறிஞன் ! - தனி

      ஆற்றலுடை நுட்பம்வளர் அறிஞன் !                                  (3)



எண்ணங்களில் தூயசிந்தைத் தேனவன் - துள்ளும்

                                                                 மானவன் - ஒளிரும்

                                                                 வானவன் - நேயம்

    இன்பஞ்சூழும்


உறவுமுறை ஆனவன் - என்றும்

        ஈகையோடே இதயம்புக

        வாகையோடே வலமும்வர

      தப்பாமல் புன்சிரிப்பில் ஆழ்த்துவோம் ! - நாம்

       எப்பவுமே பிறந்தநாளில் வாழ்த்துவோம் !                  (4)

                                                                                       - இராதே

செவ்வாய், 12 மே, 2026

கோடங்கிப் பாட்டு

 கோடங்கிப் பாட்டு


குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு

நல்ல காலம் போகுது போகுது

சொல்லடி சொல்லடி தமிழ் மாகாளி

மெல்ல குறிசொல்லு மெய்யானத சொல்லு


தொல்லை தொலையாது துன்பம் துலங்குது

நல்லது போகுது வல்ல தமிழுக்கு

படிப்பும் வளரல தமிழும் செழிக்கல 

படித்த தமிழர்க்கு வேலை கிடைக்கல


தமிழைப் படிச்சவர் ஆட்சி ஆளல

நல்ல காலம் கெட்டு கிடக்குது

தமிழை இழிப்பவன் தலைவன் ஆகுறான்

பொழுதைக் கடப்பவன் பூமியை ஆளுறான்


பள்ளியில் எல்லாம் தமிழே ஒழியுது

படிக்க இந்தியே முந்தி நுழையுது

துள்ளிய செந்தமிழ்த் தூக்குல ஆடுது

தூமொழி காப்போ தூரமா ஓடுது


தமிழை மாய்க்கும் ஆட்சி வருகுது

தமிழைச் சாய்க்கும் சூழ்ச்சி பெருகுது

தண்டமிழ் புலவர் தன்னலம் ஓங்குது

கண்டிடும் விருதுக்கு ஆட்சியைத் தாங்குது


குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு

நல்ல காலம் போகுது போகுது

சொல்லடி சொல்லடி தமிழ் மாகாளி

மெல்ல குறிசொல்லு மெய்யானத சொல்லு


                           - இராதே


திங்கள், 27 ஏப்ரல், 2026

ஐயனார்

 ஐயனார்


(காவடிச் சிந்து)


எல்லைதொறும் ஐயன்செயுங் காவல் - ஏழை

    எளியோரைக் காப்பதில்பே ராவல் - ஊரின்

      ஏரிக்கரை காடுகண்மாய்

      நீர்நிலைகள் ஓடைவெளி

          எங்கும் - புகழ்

          தங்கும் !



தொல்லைகளை வேரறுக்கும் வீரம் - அஞ்சுந்

    துன்பங்களை விரட்டிடுந் தீரம் - இரவில்

      துள்ளு'சேமக் குதிரையேறி

      விள்ளுபெருஞ் சேனையோடு

          வேட்டை - அழியும்

          சேட்டை !              (1)



உருமி யடிக்கும்மேள தாளம் - உணர்வை

    உசுப்பிடுமே குலவை ஓலம் - நெடும்

      ஊர்வலமாய் ஊர்முழுதும்

      ஆர்வமுடன் கருப்பனோடு

          வருவார் - துணிவு

          தருவார் !


உருட்டும் மிரட்டும்வாளை யேந்தி - கெஞ்சி

    ஒண்டும் அடியார்க்கருளும் சாந்தி - தந்தே

      ஊட்டமுடன் ஓடித்தேடி

      ஆட்டமுடன் தீமையினைக்

          கொல்வார் - அறம்

          வெல்வார் !       ( 2)




பூரண புட்கலையோ டிணைந்தே - வரம்

    பொழிவதில் ஐயனாரும் முனைந்தே - இன்பம்

      பூணுதலில் பேணுதலில்

      வேண்டுபவர் வாழஅருள்

          புரிவார் - வாழ்த்து

          சொரிவார் !


பேரழகுக் 'குண்டலமும் குழையும்' - செவியில்

    பீடுடனே ஊஞ்லாடிக் குழையும் - பெருமை

      பேசுகிற கெடாமீசை

      கூசுகிற ஜடாமுடி

          காட்சி - காண

          மாட்சி !               (3)



'சங்கன்', 'சின்னான்','சோணை',நடுக் காடன்' - வீரன்

    'சமயன்','மூக்கன்','சுடலை மாடன்' - சீடர்

      தாங்கிடவே தோள்கொடுத்தே

      பாங்குடனே சுற்றும்'பரி

          வாரம்' - பண்பின்

          ஆரம் !


குங்கும திருநீரு சந்தனம் - பெற்றுக்

    கொண்டோர் பெறுமனமோ நந்தனம் - நாட்டார்

      குறைகளையும் பிணிகளையும்

      முறையறிந்தே முற்றுங்களை

          யெடுப்பார் - மகிழ்வு

          கொடுப்பார் !        (4)


                   - பொறிஞர் இராதே