இராதே

இராதே
eradevadassou

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

தமிழ்வழிக் கல்வி

மூளையின்   அணுக்க   ளெல்லாம்
          முனைப்புடன்   ஓடி   யாடி
காளைபோல்   சீறிப்   பாயும்
          கருத்துகள்   கூர்மை   யேறும் ;
கோளையும்   அளக்கும்   ஆற்றல்
          கொண்டதோர்   சிந்தை   தோன்றும் ;
நாளைய   இலக்கை   வெல்லும்
          நற்றமிழ்   மொழியில்   கற்போம் !


குறிப்புகள்   உணர்த்தி   ஈர்த்துக்
          குவித்திடும்   கல்வி   தன்னைச்
செறிவுடைத்   தமிழில்   கற்றால்
          செயல்களில்   செம்மை   காணும் ;
அறிபவை   எளிமை   யாகும் ;
          ஆழ்மனத்   துள்ளே   எட்டும் ;
அறிவினை   இளமை   யாக்கும்
          அருந்தமிழ்   மொழியில்   கற்போம் !


பலவகை   மொழிகற்   றாலும்
          பைந்தமிழ்   வழியில்   கற்றால்
புலப்படும்   தெளிவு   கிட்டும்
          பொங்கிடும்   சிந்தை   துள்ளும் ;
கலப்படச்   சொற்க   ளின்றிக்
          கருத்துகள்   ஊறும்   தேறும் ;
நலந்தரும்   தமிழில்   ஊன்றி
          நாளுமே   கற்போம்   நாமே !


தாய்மொழிக்   கல்வி   தானே
          தரமிகு   பண்பை   வார்க்கும் ;
தாய்மொழி   ஈனும்   நல்ல
          தகைமைசால்   சமச்சீர்   கல்வி ;
தாய்மொழி   புரிதல்   ஊட்டும் ;
          தரணியில்   வாழ்வை   ஏத்தும் ;
தாய்மொழி   கற்போம்!   கற்போம் !
          தமிழ்மொழி   காப்போம்!   காப்போம் !


தமிழ்மொழி   மறந்து   போனால்
          தனித்துவம்   இழந்து   நிற்போம் ;
தமிழ்வழிக்   கற்றல்   நின்றால்
          தமிழ்க்குடி   அற்றுப்   போகும் ;
தமிழ்மொழி   வெறுக்கும்   போக்கைத்
          தமிழரே   கொள்ள   லாமா?
தமிழரே   தமிழில்   கற்பீர் !
          தமிழ்மொழி   காக்க   வாரீர் !
                                                                         -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக