இராதே

இராதே
eradevadassou

திங்கள், 26 ஜனவரி, 2015

எங்கே தேடுவேன் ?

                              எடுப்பு

எங்கே  தேடுவேன் ?  - குளத்தை
எங்கே  தேடுவேன் ?                                                                              (எங்கே)                                                                                                                                  

                              தொடுப்பு

பாட்டன்  பூட்டன்  சேயனும்
வெட்டி  வைத்த  குளத்தை
பட்டித் தொட்டு   யெங்கிலும்
தட்டுப்  பட்டக்  குளத்தை                                                                     (எங்கே)

                              முடிப்பு

குப்பைகொட்  டிமூடியே  மறைத்துவிட்  டனரோ ?
கூளங்கூள  மாய்ஆலைக்  கழிவைக்கொட்  டினரோ ?
குடியிருக்க  வீட்டுமனை  பிரித்துவிற்  றனரோ ?
கோபுரமாய்க்  கட்டிடங்கள்  கட்டியேவைத்  தனரோ ?             (எங்கே)


மூடநம்பிக்  கைகொண்டே  மூடிவிட்  டனரோ ?
முழுமுதல்  பிள்ளையாரைப்  போட்டுநிரப்  பினரோ ?
முழுப்பூச  ணிக்காயைச்  சோற்றில்மறைத்  ததுபோல்
முழுவிளை   யாட்டுத்திட  லாகமாற்  றினரோ ?                         (எங்கே)


குளமே !  குளமே !  குளமே !  குளமே !- உன்னை
எங்கே  தேடுவேன் ?
                                                                                                                        -இராதே


ஞாயிறு, 25 ஜனவரி, 2015

புத்தக சாலை

அறியாமை  இருள்போக்கி
          அறிவதனை  விரிவாக்க
                    அன்றாடம்  பூக்கும்  சோலை ;
          அறிஞரெனப்  பொறிஞரென
                    ஆய்வுகள்  பலதொடர
                              அறிவுக்கண்  திறக்கும்  சோலை ;

செறிவுடைய  நூற்கற்க
          செழித்தெழும்  மூளையதன்
                    செயல்களைத்  தூண்டும்  சாலை ;
          செல்லுமிடம்  புகழ்காண
                    செம்மாந்த  நிலைக்காண
                              செய்தவம் நூற்கும்  சாலை ;

நெறியுடைய  கல்வியை
          நீள்கின்ற  வாசிப்பை
                    நித்தமும்  வழங்கும்  இடமே !
          நேசமிகும்  ஆசானாய்
                    நெருங்கிய  நண்பனாய்
                              நின்றறிவு  கூட்டும்  தடமே !


பொறிகளைத்  தட்டிடும்
          பொன்னேட்டுத்  தொகுப்புகள்
                    பொலிவோடு  காக்கும்  சாலை ;
          பொதுவறிவு  மேன்மேயுற
                    புலன்களின்  தேடலில்
                              புதியன  கிட்டும்  சாலை ;

குறிப்புகள்  மலையளவு
          கொண்டபல  நூல்களின்
                    குவியலில்  தொடுக்கும்  ஆரம் ;
          கூர்மையாய்  நினைவாற்றல்
                    கொண்டதொரு  சிந்தையைக்
                              கொடுத்திடும்  வேள்விச்  சாரம் ;

தெறிப்புறும்  வினாக்களைத்
          திகைப்புறும் விடைகளைத்
                    தேடிட  காணும்  இடமே !
          தெளிவுகள்  பிறந்திட
                    தேவைகள்  அறிந்திட
                              தேறுதல்  கூறும்  தடமே !


நூண்ணறிவு  துலங்கிட
          நுட்பங்கள  விளங்கிட
                    நூல்களின்  துணையைக்  கொள்வோம் ;
          நொடிதோறும்  பயின்றிட
                    நோக்கங்கள்  வென்றிட
                              நூற்றவம்  இயற்றி  வெல்வோம் ;

மண்டிடும்  நூலறிவு
          மாசற்ற  புரிதல்கள்
                    மனத்திலே  இருத்தி  வைப்போம் ;
          மாண்புறும்  நூற்கலை
                    மதிப்புடன் போற்றிட
                             மங்காமல்  ஒளிர்ந்து  நிற்போம் ;


கண்டிடும்  செல்வங்கள்
          கண்டிடும்  உயர்நிலை
                    கண்டிடும்  நாளும்  நலமே !
          கற்றிட  நூற்களைக்
                    கற்றிடும்  பழக்கத்தால்
                             கவலைகள்  ஓடும்  தலமே !
                                                                                      -இராதே

எங்கள் தோட்டம்

கொடுயேறிப்  பந்தலிலே  படர்ந்தே  தொங்கிக்
               கொத்துகிற  நாகமென  புடலங்  காய்கள்
பொடிக்கல்லைக்  கட்டிவிட்டு  நீட்ட  மாக
               புவியினையே  தொடும்படியாய்  வளர்தல்  செய்வர் ;
பிடியற்றுக்  கொடிபடரும்  பரங்கிக்  காய்கள் ,
               பெரும்பானைப்  பூசுணைக்காய்,  சுரையின்  காய்கள் ,
மடிநிறைய  காய்க்கின்ற  அவரைக்  காய்கள் ,
               மரங்குலுங்குக்  காய்க்கின்ற  முருங்கைக்  காய்கள் !


வெண்டைக்காய்  கத்தரிக்காய்  செடியின் காய்கள் ,
               விரும்புசுவைக்  கூட்டுகிற  பீர்க்கங்  காய்கள் ,
சுண்டைக்காய்  வாழைக்காய்  புளிமாங்  காய்கள் ,
               சுவையூட்டும்  தக்காளி வகைகள்  காய்க்கும் ;
தொண்டைவரைக்  கசப்பிருக்கும்  பாகற்  காய்கள் ,
               துவர்ப்போடே  புளிக்கின்ற  நெல்லிக்  காய்கள் ,
கண்டபடி  விளைந்திங்கே  மகசூல்  காணும்
               காய்கறிகள்  வளர்தோட்டம்  எங்கள் தோட்டம் !
                                                                                                                      -இராதே

வெள்ளி, 23 ஜனவரி, 2015

காரறிவு

கறுத்த  அறிவே  காரறிவு ;
          களவுகள்  ஆளும்  சிற்றறிவு ;
அறுத்துத்  தாலிக்  கொடிபறிக்கும் ;
          அடுத்தோர்  வாழ்வில்  குழிப்பறிக்கும் ;
உறுத்தல்  இன்றி  ஊறுசெய்யும் ;
          உழைப்பை  விடுத்துத் திருடச்செய்யும் ;
சிறுத்த  பண்பின்  வெளிப்பாடே
         சிந்தை  யில்லாக்  காரறிவு !


காற்றில்  ஒளிரும்  அலைக்கற்றை
          கரவில் ஊழல்  பலபுரிந்தவர்,
ஆற்று  மணலைக்  கனிமத்தை
          அகழ்ந்து  திருடி  மகிழ்தலென
சேற்றை  வாரி  இறைக்கின்ற
          செயலாம்  இந்தக்  காரறிவு ;
ஊற்றாய்ப்  பெருகும்  காரறிவால்
          உழலும் ஊழல்  ஒழிப்பீரே !


அடுத்தோர்  பொருளை  உள்ளத்தால்
          அடைய  நினைத்தல்  காரறிவு ;
எடுக்கும்  வாய்ப்புக்  கிடைத்திடினும்
          எடுக்கா  திருத்தல்  பேரறிவாம் ;
கொடுத்த  பொறுப்பில்  திருடாமல்
          கொள்கைக்  குன்றாய்  வாழுதலே
எடுத்துக்  காட்டாய்  நின்றுவிடும் ;
          இயங்கும்  உலகை  வென்றுவிடும் !


பறித்து  வாழும்  செயலினையே
          பழக்க  மாக்கும்  காரறிவு ;
குறித்த  வாழ்க்கை  வாழ்பவரின்
          குணத்தில்  இல்லை  காரறிவு ;
அறிந்த ஐயன் வள்ளுவனார்
          அறைந்தார்  குறளில் இச்செய்தி
பொறிப்பீர்  கருத்தை  நெஞ்சினிலே
          புவியில்  திருட்டை  ஒழிப்பீரே !
                                                                           - இராதே

புதன், 21 ஜனவரி, 2015

பூந்தோட்டம்

கொடிமுல்லை  காந்தள்பூ  குலுங்கிப்  பூக்கும் ;
          குண்டுமல்லி  சம்பங்கி  மணமாய்  வீசும் ;
செடிமுள்ளில்  சிரித்தழகு  சேர்க்கும்  ரோசா ;
          செம்பருத்திச்  செம்மலர்கள்  சிவப்பைக்  காட்டும் ;
வடிவழகு  சாமந்தி  வகைகள்  எல்லாம்
          வனப்பான  மஞ்சளதன்  ஒளியைக்  கூட்டும் ;
அடித்தீண்டி  படர்ந்திருக்கும்  பட்டு  ரோசா ;
          அசைந்தபடி  அழைக்கின்ற  சங்குப்  பூக்கள் !


ஒளிதேடி  திசைதிரியும்  பரிதிப்  பூக்கள் ;
          ஊதாப்பூ  கண்சிமிட்டி  ஓரங்  காட்டும் ;
களிக்கின்ற  மென்மலராம்  மகிழம்  கொட்டும் ;
          காட்டுமல்லி  வாடைவந்து  நாசி  தீண்டும் ;
பளிச்சென்றே  ஒளிர்கின்ற  கொன்றைப்  பூக்கள் ;
          பளபளக்கும்  இருவாட்சி  மலர்கள்  நாறும் ;
அளிக்கின்றேன்  அழகென்ற  சிரிப்பைக்  காட்டி
          அதிசயப்பூ  "டேரா"வோ  அன்பைச்  சாற்றும் !


பனிநாளில்  அரும்பிடுமே  டிசம்பர்  பூக்கள் ;
          படிகளிலே  பூசணிப்பூ  எழிலைத்  தூண்டும் ;
நனியழகு  நாகலிங்கப்  பூக்கள்  சிந்தும் ;
          நயமிக்க  செண்பகப்பூ  செழித்தே  வீழும் ;
தனிமையுடன்  அல்லிமலர்  முகத்தை  நீட்டும்
          தண்ணீரில்  தள்ளாடி  நிலவிற்  கேங்கும் ;
அனிச்சமலர்  அரளிப்பூ  எல்லாப்  பூவும்
          அடுக்கடுக்காய்ப்  பூக்குமெங்கள்  தோட்டம்  தானே !
                                                                                                                     - இராதே




வெள்ளி, 16 ஜனவரி, 2015

அன்பு

                                           
அன்புதான்  இன்ப  ஊற்று ;
      அன்புதான்  மூச்சுக்  காற்று ;
அன்புதான்  பண்பின்  நாற்று ;
     அன்புதான்  அறிவின்  கீற்று ;
அன்பினால்  நட்பை  யேற்று ;
     அன்பினதன்  உண்மை  சாற்று ;
அன்பாலே  உலகை  மாற்று ;
     அன்பொன்றே  அருளின்  ஈற்று !

அன்பொன்றும்  இல்லை   யென்பார்
     அளிக்காது  பொருளைச்  சேர்ப்பார் ;
அன்பூறும்  உள்ளம்  கொண்டோர்
     ஆருயிரை  உடலை  ஈவார்;
அன்பதே  இல்லை  யென்றால்
     அழகுத்தோல்  போர்வை  மட்டே;
அன்புடல்  உயிர்க்குக்  கூடு ;
     அன்பிலார்  எலும்புக்  கூடு !

அன்பென்ற  வெள்ளம்  மீறின்
     அடைபடும்  தாழ்பாள்  உண்டோ ?
அன்பெழக்  கசியும்  கண்கள்
     அன்பதன்  ஆழங்  காட்டும் ;
அன்பினால்  பூசல்  ஓயும் ;
     அன்பாலே  துன்பம்  மாயும் ;
அன்புசால்  வாழ்க்கை  வாழ்ந்தால்
     அறம்போற்றும்  மாந்தன் ஆவான் !

வாடிய  பயிரைக்  கண்டே
     வள்ளலார்  வதைந்த  அன்பு ;
சூடிய  மாலை  தந்த
     சுடர்க்கொடி  கோதை  அன்பு ;
பாடியே  தமிழில்  அவ்வை
     பகர்ந்தது  மொழியின்  அன்பு ;
தேடியே  திசைகள்  தோறும்
     தேனூறும்  அன்பின்  மாட்சி !

வான்மழை  முகிலின்  அன்பு ;
     வளர்தென்றல்  காற்றின்  அன்பு ;
வானவில்  நிறங்கள்  ஏழில்
     வழிந்திடும்  ஒளியின்  அன்பு ;
தேன்மலர்  மொய்க்கும்  வண்டு
     தேனினை  வழங்கும்  அன்பு ;
மாண்புடைத்  தமிழர்  பண்பில்
     மண்டிடும்  அன்பு  தானே !
                                                        -இராதே