அன்புதான் இன்ப ஊற்று ;
அன்புதான் மூச்சுக் காற்று ;
அன்புதான் பண்பின் நாற்று ;
அன்புதான் அறிவின் கீற்று ;அன்பினால் நட்பை யேற்று ;
அன்பினதன் உண்மை சாற்று ;
அன்பாலே உலகை மாற்று ;
அன்பொன்றே அருளின் ஈற்று !
அன்பொன்றும் இல்லை யென்பார்
அளிக்காது பொருளைச் சேர்ப்பார் ;
அன்பூறும் உள்ளம் கொண்டோர்
ஆருயிரை உடலை ஈவார்;
அன்பதே இல்லை யென்றால்
அழகுத்தோல் போர்வை மட்டே;
அன்புடல் உயிர்க்குக் கூடு ;
அன்பிலார் எலும்புக் கூடு !
அன்பென்ற வெள்ளம் மீறின்
அடைபடும் தாழ்பாள் உண்டோ ?
அன்பெழக் கசியும் கண்கள்
அன்பதன் ஆழங் காட்டும் ;
அன்பினால் பூசல் ஓயும் ;
அன்பாலே துன்பம் மாயும் ;
அன்புசால் வாழ்க்கை வாழ்ந்தால்
அறம்போற்றும் மாந்தன் ஆவான் !
வாடிய பயிரைக் கண்டே
வள்ளலார் வதைந்த அன்பு ;
சூடிய மாலை தந்த
சுடர்க்கொடி கோதை அன்பு ;
பாடியே தமிழில் அவ்வை
பகர்ந்தது மொழியின் அன்பு ;
தேடியே திசைகள் தோறும்
தேனூறும் அன்பின் மாட்சி !
வான்மழை முகிலின் அன்பு ;
வளர்தென்றல் காற்றின் அன்பு ;
வானவில் நிறங்கள் ஏழில்
வழிந்திடும் ஒளியின் அன்பு ;
தேன்மலர் மொய்க்கும் வண்டு
தேனினை வழங்கும் அன்பு ;
மாண்புடைத் தமிழர் பண்பில்
மண்டிடும் அன்பு தானே !
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக