இராதே

இராதே
eradevadassou

புதன், 21 ஜனவரி, 2015

பூந்தோட்டம்

கொடிமுல்லை  காந்தள்பூ  குலுங்கிப்  பூக்கும் ;
          குண்டுமல்லி  சம்பங்கி  மணமாய்  வீசும் ;
செடிமுள்ளில்  சிரித்தழகு  சேர்க்கும்  ரோசா ;
          செம்பருத்திச்  செம்மலர்கள்  சிவப்பைக்  காட்டும் ;
வடிவழகு  சாமந்தி  வகைகள்  எல்லாம்
          வனப்பான  மஞ்சளதன்  ஒளியைக்  கூட்டும் ;
அடித்தீண்டி  படர்ந்திருக்கும்  பட்டு  ரோசா ;
          அசைந்தபடி  அழைக்கின்ற  சங்குப்  பூக்கள் !


ஒளிதேடி  திசைதிரியும்  பரிதிப்  பூக்கள் ;
          ஊதாப்பூ  கண்சிமிட்டி  ஓரங்  காட்டும் ;
களிக்கின்ற  மென்மலராம்  மகிழம்  கொட்டும் ;
          காட்டுமல்லி  வாடைவந்து  நாசி  தீண்டும் ;
பளிச்சென்றே  ஒளிர்கின்ற  கொன்றைப்  பூக்கள் ;
          பளபளக்கும்  இருவாட்சி  மலர்கள்  நாறும் ;
அளிக்கின்றேன்  அழகென்ற  சிரிப்பைக்  காட்டி
          அதிசயப்பூ  "டேரா"வோ  அன்பைச்  சாற்றும் !


பனிநாளில்  அரும்பிடுமே  டிசம்பர்  பூக்கள் ;
          படிகளிலே  பூசணிப்பூ  எழிலைத்  தூண்டும் ;
நனியழகு  நாகலிங்கப்  பூக்கள்  சிந்தும் ;
          நயமிக்க  செண்பகப்பூ  செழித்தே  வீழும் ;
தனிமையுடன்  அல்லிமலர்  முகத்தை  நீட்டும்
          தண்ணீரில்  தள்ளாடி  நிலவிற்  கேங்கும் ;
அனிச்சமலர்  அரளிப்பூ  எல்லாப்  பூவும்
          அடுக்கடுக்காய்ப்  பூக்குமெங்கள்  தோட்டம்  தானே !
                                                                                                                     - இராதே




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக