இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

அலைகடல்





                    எடுப்பு
அலைக டலாடிட வேண்டும் - வெள்
          ளலையொ டெங்கணு மாயினும் நீந்தியே               ( அலை )

                    தொடுப்பு

அலையின்வ ளைவில்நெளி வில்மகிழ உடனே
          ஆடிடும் பால்நுரை யுடன்நாம் எழவே                       ( அலை )

                     முடிப்பு

நீரில்ந னைந்தவுடன் நெஞ்சம்நெ கிழவுபெறும்
          நேரம திலும்தூர பாதைப்ப யணத்திலும்
வீரரும் முழுகும் நீரரங் குகளிலும்
          வீசல்க ளிலும்மிசை பாய்ச்சல் களிலும்பொங்கும் ( அலை }


                                                                                                          -இராதே

சனி, 22 செப்டம்பர், 2018

குட்டித் தவளை

குட்டிக் குட்டித் தவளை
எட்டி எட்டிப் பார்க்கும் ;
குளத்துத் தண்ணிக் குள்ளே
குட்டிக் கரணம் போடும் ;
சத்தம் போட்டு மழையில்
சரள மாகப் பாடும் ;
கொத்தும் பாம்பின் இரையாய்க்
குரலால் மாட்டிக் கொள்ளும் !
- இராதே

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

கார் காலம் ( காவடிச் சிந்து )

விண்ணிருந்  துமண்ணில்  தூவுதே !
                                                  பருவமழை
                                                  பயிர்வளர்செய்
     விந்தை  யுடன்வயல்  மேவுதே  ! - வெல்லும்
                         மின்னொலிமலர்  வண்ணமேசுடர்
                         சொன்னமேயென  முன்னமேவளர்
     மென்விளை  வைஈனும்  மழையே  !
                                                 பெருவிளைச்சல்
                                                 தனைவிளைக்க
     வில்லையெ  னில்பெரும்  பிழையே !




மன்மதன்  கைக்கணை  சரமாம் !
                                                  அதிவிரைவில்
                                                  பரவிவிழ
     மண்வளத்  தைப்பேணும்  வரமாம்  ! - பொங்கி
                         வந்தநீர்நிலை  நின்றுமேலெழ
                         உந்துசேர்வழி  அண்டிசேர்ந்துழ
     வயல்வழி  யநீரின்  வரவே !
                                                  நனையநிலம்
                                                  முளைபயிர்கள்
     வளர்வது  வும்இயற்கை  உறவே  !



தண்ணீரோ  டவாய்க்கால்  காணுதே !
                                                 வழிநெடுக்க
                                                 தனைமறைத்தும்
     தங்குமி  டம்நாடி  பூணுதே  ! - தூர்ந்த
                         தன்நிலைவழி  மண்ணெடுத்திட
                         சென்றுசேர்கையில்  உண்டநீர்நிலை
     தன்னிறை  வில்பாடல்  பாடுதே !
                                                 அலையெழும்பிக்
                                                 கரைபுரள
     'தந்தனத்  தோம்'தாளம்  போடுதே  !



புன்னகையாய்  வெள்ளம்  பாயுதே  !
                                                  மனமகிழ்வில்
                                                  தினநெகிழ
     பூரிப்பி  லேஉள்ளம்  சாயுதே  ! - வந்த
                         பெண்ணிணைகுயில்  வண்ணமாமயில்
                         மண்ணிலேவிழும்  சின்னப்பூவிதழ்
     பூப்படைந்  தேநெஞ்சம்  மீட்டுதே  !
                                                  மழைப்பருவம்
                                                 மயங்கித்தொழப்
     புத்துணர்  வில்இன்பங்  கூட்டுதே  !


                                                                       - இராதே




                                                  

வியாழன், 20 செப்டம்பர், 2018

சாலை விதிகள் ( காவடிச் சிந்து )


சாலைத் தெருக்களில் நள்ளியே - நல்ல
          சட்டம் மதியாமல் எள்ளியே - சீறும்
          சாலச் சறுக்களில் துள்ளியே - வண்டித்
                    தடுமாறிட அடங்காமலே
                    நடுவீதியில் இடந்தாவியே
          சட்டென இடிபடத் தள்ளியே - மக்கள்
          சாவவே வைக்கிறாய்க் கொள்ளியே !

மாலை மயக்கத்தை நீட்டியே - மது
          மதியதன் பேச்சினைக் கேட்டியே - மன
          மகிழ்வினில் முடுக்கங்கள் கூட்டியே -விதி
                    மதிப்போரையும் நடப்போரையும்
                    மதிமாறியே தடம்மாறிட
          மரணத்தின் ஓலையைத் தீட்டியே - மாந்தன்
          மண்டையைப் பிளக்கிறாய் ஓட்டியே !

தொங்கியே பேரூந்தில் செல்லாதே - படி
          தொற்றிக் கொண்டுநீ நில்லாதே - பெருந்
          துன்பத்தை நொடியினில் புல்லாதே - சாலை
                    விதிமீறியே தடுமாறிட
                    சதிவேலையில் கொடுமையுறு
          தொல்லைகள் தரும்வழி கல்லாதே - வாழ்வின்
          தொடக்கத்தில் இன்பங்கள் கொல்லாதே !

பாங்குடன் வாழ்வதே சுகவாசி - தெரு
          பயணத்தில் ஏன்தானோ செல்பேசி - சவ
          பாடையை நாடவா அலைபேசி - நாளும்
                    பலர்கூடிடும் தெருகூடலில்
                    நிலைமீறிடும் விழிமூடியப்
          பயணங்கள் மாய்த்திடும் அதைவாசி - இதன்
          பக்குவம் அறிந்திட நீயோசி !

                                                                       - இராதே

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

பார் ! பார் ! நல்லா பார் !




கூடு கட்டும் குருவி பார் !
     கூடி வாழும் காகம் பார் !
ஆடு கின்ற மயிலைப் பார் !
     அழகாம் அணிலின் ஓட்டம் பார் !
பேடு கொஞ்சும் குயில்கள் பார் !
     பேசு கின்ற கிளிகள் பார் !
தேடு கின்ற கண்கள் பார் !
     தெரியும் இயற்கைக் காட்சி பார் !

வலையைப் பின்னும் சிலந்தி பார் !
     வாலைக் குழைக்கும் நாயைப் பார் !
தலையை ஆட்டும் ஓணான் பார் !
     தாவி ஆடும் குரங்கைப் பார் !
அலையுங் கொடியில் அரணை பார் !
     அமைதி காக்கும் கொக்கு பார் !
நிலையி லாத உலகைப் பார் !
     நீளும் இயற்கைக் காட்சி பார் !

ஆட்டம் போடும் அருவி பார் !
     அலைந்து திரியும் ஆற்றைப் பார் !
கூட்டம் கூடும் மீன்கள் பார் !
     கொத்திக் கவ்வும் கழுகு பார் !
நோட்டம் பார்க்கும் கருடன் பார் !
     நுங்கு தொங்கும் பனையைப் பார் !
காட்டும் புவியின் எழிலைப் பார் !
     களித்துச் சுவைத்து நல்லா பார் !

                                                                -இராதே

தாய்மொழிக் கல்வி - காவடிச் சிந்து

ஆங்கில மேமொழி ஆளுமை யாமென
          ஆவலில் சிக்குவ தோ ? - செந்தேன்
     அன்னைத்த மிழ்மொழி தன்னைய றியாமல்
          அச்சத்தில் விக்குவ தோ ?

ஓங்கிய வாணிகம் மேம்படும் மாமொழி
          ஊடாக வீண்பேச் சு ! - தமிழ்
     ஒட்டார மாகவே விட்டுப்ப டிக்காத
          ஊக்கம்எங் கேபோச் சு !

தாய்மொழிக் கல்வியைத் தள்ளுகி றாய்நனி
          தப்பெனத் தோணலை யோ ? - மொழி
     தண்டமிழ் நாட்டிலே தன்னுணர் வில்லாமல்
          சாலவே பேணலை யோ ?

வாய்மொழி ஆங்கிலம் மாபெரும் தேனென
          மண்ணதி லெண்ணுவ தேன் ? - வளம்
     மண்டிய தாய்மொழிக் கல்வியைக் கற்காமல்
          மாயத்தில் மின்னுவ தேன் ?

சர்க்கரைக் கட்டியாம் தண்டமிழ்ச் செம்மொழி
          தாய்த்தமிழ் எள்ளுவ தோ ? - மொழி
     சந்தையில் சிந்திடும் ஆங்கில வன்மொழி
          தாளத்தில் துள்ளுவ தோ ?

அக்கரைக் காரர்கள் ஆண்டதே அம்மொழி
          அத்தோடே போயாச் சே ! - அதை
     அப்படி யேநாளும் ஆறத்த ழுவுதல்
          ஆணவப் பேய்மூச் சே !

நம்புவி மேலுறும் நற்றமிழ் மீதினில்
          நம்பிக்கை ஏனிலை யோ ? - ஆண்ட
     நம்மவர் தென்மொழி நாளுமே வாழ்ந்திட
          நற்செயல் தானிலை யோ !

அம்புவி மேவிடும் அன்பரே நண்பரே
          ஆதித்த மிழ்மீட் போம் ! - மாளும்
     அன்னைத்த மிழ்ஆள எல்லோரும் ஒன்றாகி
          ஆண்டத்த மிழ்க்காப் போம் !


                                                                         - இராதே

நத்தை ! வித்தை ! தத்தை !


நத்தை நத்தை நத்தை
     நகர்ந்தே ஊறும் பூச்சி நத்தை !
மெத்தை மெத்தை மெத்தை
     மேனி மெல்ல தாங்கும் மெத்தை !
சொத்தை சொத்தை சொத்தை
     சொல்லும் பல்லைத் துளைக்கும் சொத்தை !
பத்தை பத்தை பத்தை
    பழத்தை அறிந்து பிரித்தால் பத்தை !


வித்தை வித்தை வித்தை
    விரும்பும் கலைகள் கற்றல் வித்தை !
அத்தை அத்தை அத்தை
    அம்மான் மனைவி அவளே அத்தை !
கத்தை கத்தை கத்தை
    கட்டுக் கட்டாய் பணமோ கத்தை !
ஒத்தை ஒத்தை ஒத்தை
    ஒன்றே ஒன்றாய் இருத்தல் ஒத்தை !


செத்தை செத்தை செத்தை
    சேரும் குப்பைக் கூளஞ் செத்தை !
மொத்தை மொத்தை மொத்தை
    மொழுகும் தூவல் முள்ளால் மொத்தை !
பொத்தை பொத்தை பொத்தை
    பூசணிப் போல உடம்பே பொத்தை !
தத்தை தத்தை தத்தை
    தாவித் திரியும் கிளியே தத்தை !

                                                                   - இராதே

திங்கள், 17 செப்டம்பர், 2018

ஊருக்கு நல்லது சொல்வோம் !

ஊருக்கு நல்லது சொல்வோம் !

என்னசொல்வ தென்னவென்றே
என்மனத்தை நாடினேன் ;
சொன்னசொற்கள் சோரமாக
சொல்லவார்த்தை தேடினேன் ;
கண்ணவிந்து போனபின்பு
காணஒவி யங்களோ ?
பின்னரென்ன பேசிப்பேசிப்
பிழைக்கவா புவியிலே ?

உண்ணுகின்ற வாய்த்திறந்தே
உண்மைகள் பிறக்குமா ?
தின்னுமிந்த வாய்விடுக்கும்
திணித்தெழுந்த பொய்யுரை ;
கன்னமிட்டுக் கருவறுக்கும்
கயவரெண்ணம் மேலெழும்
சொன்னசொல்லும் ஏற்குமா ?
சுமைசுமந்து நிற்குமா ?

தன்னலந்த ழைத்தெழுந்தே
தற்பெருமை மேவியே
தன்னைமுன் னிலைப்படுத்தித்
தமிழழித் தொழிக்கிறார் !
என்னவென்றே சொல்லுவேன்
எரியுமாண வத்தினை !
பின்னரென்ன சொல்லிச்சொல்லிப்
பிழைக்கவா புவியிலே ?

பொன்னுமணியும் பொருளும்புகழும்
பொற்பதக்க விருதுமே
எண்ணியெண்ணித் தமிழைவிற்றே
எடைக்கெடை ஈடேற்றுறார் !
இன்னல்செயும் இவரையெண்ணி
இன்னுமிங்குச் சிந்தனை
பின்னரென்ன கூறிக்கூறிப்
பிழைக்கவா புவியிலே ?

பெண்மைமேன்மை பேசிப்பேசிப்
பெருந்தகைபோல் நடிக்கிறார் ;
பெண்விளம்ப ரப்படுத்திப்
பெரியகாசும் பார்க்கிறார் ;
இன்பபோகப் பொருளுமாக்கி
இனியபோதை கொள்கிறார் ;
பின்னரென்ன பேசிப்பேசிப்
பிழைக்கவா புவியிலே ?

நண்பரென்றே புன்னகைத்தே
நாடகங்க ளாடுறார் ;
நண்பர்வீழ நஞ்சையூட்டி
நரித்தனத்தை வெல்கிறார் ;
பண்பிலார் பழக்கமெண்ணிப்
பாடியாடி என்பயன் ?
பின்னரென்ன பேசிப்பேசிப்
பிழைக்கவா புவியிலே ?

உண்மையான நன்மைதன்னை
ஊருக்கே உரைக்கனும் ;
உண்மைகண்டு வாயைமூடி
ஊமைபோல் விழிப்பதேன் ?
உண்மைசொல்லி உண்மைசொல்லி
ஊரின்நன்மை கொள்ளுங்கள் !
நன்மைநன்மை நன்மைநல்கி
நன்குவாழ்ந்து வெல்லுங்கள் !

                      -இராதே

சனி, 15 செப்டம்பர், 2018

பென்குயின்



அப்பிவாய் அழகுக் குள்ளன் ;
     ஆடியே அசைந்துச் செல்வான் ;
செப்பிடும் துள்ளல் ஓசை ;
     செல்வதைக் காண ஆசை ;
வெப்பத்தை உடலில் ஏற்பான் ;
     வெண்பனி குளிரில் துய்ப்பான் ;
உப்பிய சிறகி னுள்ளே
     உலாவிடும் காற்றால் மிதப்பான் !

தன்னின முட்டை அவையம்
     தயங்காது தானே காப்பான் ;
நன்னீரைக் குடிக்க மாட்டான் ;
     நன்னீரில் வாழ மாட்டான் ;
தன்னிணைச் சேர வேண்டித்
     தனியிசைப் பாடி அழைப்பான் ;
பென்குயின் குறும்பு நடையான் ;
     பெரும்பனித் துருவம் வாழ்வோன் !

மீன்களை உணவாய்க் கொள்வான் ;
     வெகுநாட்கள் நீந்தி மகிழ்வான் ;
வான்தாவிப் பறக்க மாட்டான்
     வகைமையோ பறவை இனந்தான் ;
நாண்விடும் அம்பு போல
     நடுகடல் துள்ளி மீள்வான் ;
கூன்வளை நீண்ட அலகால்
     குதித்தோடும் மீன்கள் தின்பான் !

செவித்திறன் சிறப்பி னாலே
     செம்மையாய்க் களங்கள் காண்பான் ;
குவிந்திடும் கீழப் பார்வை
     கூர்மையால் இரைகள் கொள்வான் ;
புவிதொடும் வயிறோ வெண்மை ;
     புறமுதுகு முழுதும் கறுமை ;
அவிழ்ந்தோடும் முட்டை போல
     அடிவயிற்றால் வழுக்கிச் செல்வான் !

                                                                   
- இராதே

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

மரவட்டை




வட்ட வட்ட வளையங்கள்
     வனைந்த உருளை மரவட்டை ;
தொட்ட உடனே சுருண்டிடும்
     துப்பும் பீச்சும் நச்சினை ;
நெட்டை உணர்வுக் கொம்புகள்
     நிலைமை அறிய உதவிடும் !

பத்து நூறு கால்களில்
     பதமாய் ஊறும் மரவட்டை ;
மெத்து மெத்தாம் இலைகளை
     மென்றுத் தின்னும் மரவட்டை ;
சத்து சத்தாய் உரங்களைச்
     சால தருமே மரவட்டை ;
கத்தை கூரை விழலிலே
     காணப் படுமே மரவட்டை !

ஈர மான சூழலில்
     இயங்கும் உயிரி மரவட்டை ;
ஆர மாக சுருளுமே
     ' அழுக லுண்ணி' மரவட்டை ;
சாரை சாரை யாகவும்
     சந்து பொந்தில் ஊர்ந்திடும் ;
கூரை சன்னல் தரைகளில்
     கூடி வாழும் மரவட்டை !
                                                      - இராதே

வவ்வால்


வானம் பார்த்துத் தலைக்கீழாய்
     வசமாய்த் தொங்கிப் பகல்போக்கும்;
காணும் பார்வை குறைவினால்
     கடக்கக் கேளா மீயொலியைப்
பேணும் நுட்பம் கைக்கொண்டே
     பேரு லகெங்கும் சுற்றிவரும் ;
ஊணும் கொள்ளும் வாய்வழியே
     உரமாய் மாற்றி தரும்வெளியே !

பறவை இனத்தில் 'பாலூட்டி'
     பழங்கள் உண்ணும் 'பழந்தின்னி'
நிறத்தில் சிவப்பு பழுப்புண்டு ;
     நெடிய இரவின் 'கைச்சிறகி'
உறவாம் குட்டியை அரவணைக்கும் ;
     உறிஞ்சி மலர்த்தேன் குடித்துய்யும் ;
பறந்து பயிர்கள் மேய்வதினால்
     பாரில் வேளாண் எதிரியிது !

மருந்து செய்ய இவ்வினத்தை
     மாய்த்தே பணத்தைப் பார்க்கின்றார் ;
விருந்து படைக்க வாவலினை
     வேட்டை யாடி அழிக்கின்றார் ;
இருந்து வாழும் வசிப்பிடங்கள்
     இல்லா நிலைகள் தொடர்வதினால்
திரும்ப வவ்வால் கிடைத்திடுமோ ?
     திண்டா டிடுமே இவ்வுலகம் !

சுற்றுச் சூழல் காக்கவிதை
     துப்பும் வாவல் வழியெங்கும் ;
பற்றும் மலரின் மகரந்தப்
     பரல்கள் கடத்தி வனம்வளர
முற்றும் உதவும் வவ்வால்கள்
     முகமோ நரிபோல் குவிந்திருக்கும் ;
இற்றே வவ்வால் வீழாமல்
     இனத்தை மீட்போம் வாருங்கள் !

                                                               - இராதே

வியாழன், 13 செப்டம்பர், 2018

தட்டு


தட்டு வெள்ளி தட்டு
தட்டு வடிவம் வட்டு
தட்டில் தாளம் இட்டு
தட்ட வருமே மெட்டு
கிட்டு கையில் தட்டு
தட்டு நிறைய புட்டு
நாக்கில் சப்புக் கொட்டு
இட்டம் போல வெட்டு
-இராதே

சட்டை


கட்டம் போட்ட சட்டை
கறுப்புப் புள்ளிச் சட்டை
பட்டுத் துணியில் சட்டை
பருத்தித் துணியில் சட்டை
பொட்டுச் சிவப்பு சட்டை
புதிய நீலச் சட்டை
எட்டுச் சோடி சட்டை
எனக்கு நிறைய சட்டை
- இராதே

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

நாவற்பழம்



பள்ளிக் கூட வாயிலில்
     பசுமை ஆலின் இலைகளில்
அள்ளி கூறு கட்டிய
     அதிகம் விற்ற பழமிதே ;
வெள்ளை உப்பைத் தூவியே
     விரும்பி உண்ட பழமிது ;
கொள்ளை சுவையைத் தந்திடும்
     கொழிக்கும் சத்து நிறைந்தது !

உண்ண உவர்ந்தே இனித்திடும்
     உமிழ்நீர் பெருகிச் செரித்திடும் ;
கண்ணீர் எரிச்சல் போக்கிடும் ;
     கரையும் சிறுநீர் கற்களும் ;
எண்ண ஆற்றல் வளர்த்திடும் ;
     எளிதில் கருப்பைக் காத்திடும் ;
சுண்ண இரும்புச் சத்துகள்
     சூழ விளையும் நாவலாம் !

உடலின் சூடு தணித்திடும் ;
     உறுநோய்ப் புற்றை எதிர்த்திடும் ;
குடற்புண் மறைய உழைத்திடும் ;
     குருதி சோகை தீர்த்திடும் ;
கடமை யோடு கல்லீரல்
     காக்கும் கரிய நாவலாம் ;
தடைகள் இன்றி உண்ணலாம்
     தளர்வு நீங்கி மகிழலாம் !

அவ்வை கேட்ட கனியிதாம் ;
     அருமை குணங்கள் உடையதாம் ;
கொவ்வை வாயின் நாற்றத்தைக்
     குறைத்துத் தூய்மை செய்திடும் ;
கவ்வும் இழிவு நீர்நோயைக்
     களைந்து உடலைப் போற்றிடும் ;
தவ்வி உலுக்கிப் பொறுக்கியே
     சலிப்புத் தீர திங்கலாம் !

கரிய நீல நிறமுடை
     கரைகள் படரும் நாவிலே ;
அரிய வளங்கள் இருப்பினும்
     அளவி னோடே உண்ணவும் ;
பெரிய அளவில் உண்பதால்
     பேச்சும் கட்டும் தொண்டையில் ;
உரிய கால பருவத்தில்
     உண்டு நலமே சேர்க்கலாம் !

                                               - இராதே