இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

நாவற்பழம்



பள்ளிக் கூட வாயிலில்
     பசுமை ஆலின் இலைகளில்
அள்ளி கூறு கட்டிய
     அதிகம் விற்ற பழமிதே ;
வெள்ளை உப்பைத் தூவியே
     விரும்பி உண்ட பழமிது ;
கொள்ளை சுவையைத் தந்திடும்
     கொழிக்கும் சத்து நிறைந்தது !

உண்ண உவர்ந்தே இனித்திடும்
     உமிழ்நீர் பெருகிச் செரித்திடும் ;
கண்ணீர் எரிச்சல் போக்கிடும் ;
     கரையும் சிறுநீர் கற்களும் ;
எண்ண ஆற்றல் வளர்த்திடும் ;
     எளிதில் கருப்பைக் காத்திடும் ;
சுண்ண இரும்புச் சத்துகள்
     சூழ விளையும் நாவலாம் !

உடலின் சூடு தணித்திடும் ;
     உறுநோய்ப் புற்றை எதிர்த்திடும் ;
குடற்புண் மறைய உழைத்திடும் ;
     குருதி சோகை தீர்த்திடும் ;
கடமை யோடு கல்லீரல்
     காக்கும் கரிய நாவலாம் ;
தடைகள் இன்றி உண்ணலாம்
     தளர்வு நீங்கி மகிழலாம் !

அவ்வை கேட்ட கனியிதாம் ;
     அருமை குணங்கள் உடையதாம் ;
கொவ்வை வாயின் நாற்றத்தைக்
     குறைத்துத் தூய்மை செய்திடும் ;
கவ்வும் இழிவு நீர்நோயைக்
     களைந்து உடலைப் போற்றிடும் ;
தவ்வி உலுக்கிப் பொறுக்கியே
     சலிப்புத் தீர திங்கலாம் !

கரிய நீல நிறமுடை
     கரைகள் படரும் நாவிலே ;
அரிய வளங்கள் இருப்பினும்
     அளவி னோடே உண்ணவும் ;
பெரிய அளவில் உண்பதால்
     பேச்சும் கட்டும் தொண்டையில் ;
உரிய கால பருவத்தில்
     உண்டு நலமே சேர்க்கலாம் !

                                               - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக