இராதே

இராதே
eradevadassou

சனி, 15 செப்டம்பர், 2018

பென்குயின்



அப்பிவாய் அழகுக் குள்ளன் ;
     ஆடியே அசைந்துச் செல்வான் ;
செப்பிடும் துள்ளல் ஓசை ;
     செல்வதைக் காண ஆசை ;
வெப்பத்தை உடலில் ஏற்பான் ;
     வெண்பனி குளிரில் துய்ப்பான் ;
உப்பிய சிறகி னுள்ளே
     உலாவிடும் காற்றால் மிதப்பான் !

தன்னின முட்டை அவையம்
     தயங்காது தானே காப்பான் ;
நன்னீரைக் குடிக்க மாட்டான் ;
     நன்னீரில் வாழ மாட்டான் ;
தன்னிணைச் சேர வேண்டித்
     தனியிசைப் பாடி அழைப்பான் ;
பென்குயின் குறும்பு நடையான் ;
     பெரும்பனித் துருவம் வாழ்வோன் !

மீன்களை உணவாய்க் கொள்வான் ;
     வெகுநாட்கள் நீந்தி மகிழ்வான் ;
வான்தாவிப் பறக்க மாட்டான்
     வகைமையோ பறவை இனந்தான் ;
நாண்விடும் அம்பு போல
     நடுகடல் துள்ளி மீள்வான் ;
கூன்வளை நீண்ட அலகால்
     குதித்தோடும் மீன்கள் தின்பான் !

செவித்திறன் சிறப்பி னாலே
     செம்மையாய்க் களங்கள் காண்பான் ;
குவிந்திடும் கீழப் பார்வை
     கூர்மையால் இரைகள் கொள்வான் ;
புவிதொடும் வயிறோ வெண்மை ;
     புறமுதுகு முழுதும் கறுமை ;
அவிழ்ந்தோடும் முட்டை போல
     அடிவயிற்றால் வழுக்கிச் செல்வான் !

                                                                   
- இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக