இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

நம்புடா

 நம்புடா !


பூமேனிப் பொன்பட்டே

      கண்ணுறங்கு !

புதுவானில் விடிவெள்ளி

      கண்ணுறங்கு !

தாலாட்டுப் பாடநான்

      தாயில்லையே ;

நீலாம்பரிப் பாடத்

      தெரியலையே !  

நீலாம்பரிப் பாடத்

      தெரியலையே !  

( பூமேனி )



பூங்காற்றும் உரசாதப்

      புல்லாங்குழல் ;

புதுமேகம் தூறிய

      மழையின்துளி ;

மங்காத ஒளிவீசும்

      மஞ்சள் நிலா ;

மாடத்துள் திகைக்கிற

      வெள்ளை புறா !   

மாடத்துள் திகைக்கிற

      வெள்ளை புறா     ( பூமேனி ) - 1



ஊருக்குள் யார்யாரோ

      புறம்பேசுவார் ;

உதவாதக் கதைக்கெல்லாம்

      உனையேசுவார் ;

பேருக்கே பொய்யான

      பாசம் வைப்பார் ;

பேசுறப் பேச்சாளே

      முள்ளாய்த் தைப்பார் ! 

பேசுறப் பேச்சாளே

      முள்ளாய்த் தைப்பார் ! 

   ( பூமேனி ) - 2



துயரந்தான் முன்வாசல்

      திறந்தே வரும் ;

தோதாகக் காதலும்

      பிறந்தே வரும் ;

துரோகங்கள் நண்பர்கள்

      தயவால் வரும் ;

தீராதத் தொல்லைகள்

      தானா வரும் ! 

தீராதத் தொல்லைகள்

      தானா வரும் ! 

   ( பூமேனி ) - 3



எல்லாமும் சந்திப்பாய்

      பின் நாளிலே  ;

இப்பவே சொல்றேன் நான்

       தெளிவாகனும் ;

வெல்வது எதிர்நின்று

      விடும் அம்புடா ;

வெற்றிதான் உனைசேரும்

      நீ நம்புடா !

 வெற்றிதான் உனைசேரும்

      நீ நம்புடா !  ( பூமேனி ) - 4



- பொறிஞர் இராதே


மாற்றம் !

 மாற்றம்


மாற்றமில்லை ஏதும் மாறவில்லை

     மாறுதலும் பேராறுதலும் தர

          யாருமில்லை - இனி

          யாருமில்லை !     ( மாற்றம் )




காற்றில் தூய்மை காணவில்லை ;

சுவாச நோயுக்குப் பஞ்சமில்லை ;

ஆற்றில் கழிவுகள் பெருந்தொல்லை ;

தொடர்ந்தால் நீரும் சோறுமில்லை !    ( மாற்றம் ) - 1



குப்பைக் கூளங்கள் வெளியில்விழும் ;

விழுகிற போதே சண்டையெழும் ;

சாக்கடை நாற்றத்தில் தெருக்கள்அழும் ;

சரிசரி யென்றே கொசுக்கள் தொழும் !    ( மாற்றம் ) - 2



தொற்றும் பிணிகள் நின்றாடும் ;

சூழலைக் கெடுத்துக் கொண்டாடும் ;

முற்றுஞ் சுத்தம் இல்லையெனில்

ஊரே எரிக்குஞ் சுடுகாடாம் !    ( மாற்றம் ) - 3



நூற்றுக்கு நூறு தன்னலந்தான் ;

நொறுங்கிப் புழுங்குதுப் பொதுநலந்தான் ;

ஏற்றுத் திருந்தவும் மனமில்லையே ;

ஏற்றால் உடல்நலக் கேடில்லையே !    ( மாற்றம் ) - 4


பொறிஞர் இராதே

காலம் !

 காலம் சுத்துற வேகம் பாரு

     கண்ணுக்கு முன்னாலே !

கடந்து வந்த பாதை பாரு

     சொல்லுக்கு பின்னாலே !    




உலகஞ் சுத்துறச் சுத்துல தானே

     உளறுந் தத்துவம் புரியும் ;

கலகம், குழப்பம் வந்தா தானே

     வாழும் வாழ்க்கைத் தெளியும் !    




சிங்கம், புலியும் சிரிச்சிப் பழகிக்

    கவிழ்த்து விடாது ;

பங்குக் கேட்டு நைசாப் பேசிக்

   கழட்டி விடாது ;

பொங்கும் பாசம் நேசம் ஊட்டித்

   தெருவில் விடாது ;

திங்குஞ் சோத்தில் விஷத்தை வைச்சித்

   தீர்த்துக் கட்டாது !    



காத்தும் மழையும் வெயிலும் அடிக்கக்

   காசுக் கேக்கலையே ;

காயும் பழமும் பயிரும் விளைய

  ' மாமூல்' கேக்கலையே ;

பூவு சிந்துந் தேனுக் கெங்க

   வட்டிக் கேக்குது ;

புரிஞ்சிக் கிட்டா மனுசன் தேறப்

   புத்தி கிடைக்குது !    



ஓடும் ஆறும் நீரும் பெருகி

   உசிரக் காக்குது ;

உறைஞ்சி போன மறுத்த மனசு

   ஊரைக் கெடுக்குது ;

பாடு படற எண்ணங் கூடப்

   பறந்து போனது ;

பார்த்த காலம் மனுசன் வாழ்வைப்

   புரட்டிப் போடுது !


கல்லாடன் கவியழகு

 தமிழ்மாமணி கல்லாடன் 84 ஆம் அகவைநாளில்  வாழ்த்தி மகிழ்ந்தோம்


கல்லாடன் கவியழகு!


கார்மேகம் ஈயுங்கொடை கருணைமழை பொய்த்திடினும்; சீர்மேவும் பூந்தென்றல் தீண்டாமல் நின்றிடினும்; தார்வாழைக் குலைத் தள்ளத் தாமாக மறந்திடினும்; பேர்போற்றும் கல்லாடன் பேசுங்கவி மறையாதே!


கறந்திட்டக் கறவைப்பால் கால்நடைகள் மடிபுகினும்; இறங்கிவீழும் காய்கனிகள் எழுந்துவந்தே கிளைபுகினும்; துறந்திட்டத் துறவியர்கள் துள்ளறத்தில் குடிபுகினும்; கரைந்திடாதே மண்ணுலகில் கல்லாடன் கவியழகே!


ஓயாதக் கடலலைகள் ஒருவேளை ஓய்ந்திடினும்; சாயாத இமயந்தான் சமயத்தில் சாய்ந்திடினும்; ஈயாதக் கருமிகள் ஈரமுடன் ஈந்திடினும்; காயாதே மண்ணுலகைக் கல்லாடன் கவியழகே!


மாறாத மாற்றத்தில் மாறுதலும் ஏற்படினும்; வாராதக் காவிரியும் வந்தே அணைத் தாண்டிடினும்; சோராதத் தேனீக்கள் சோர்வினிலே மண்டிடினும்; தீராதே தீந்தமிழ்த்தேன் கல்லாடன் கவியழகே!


– பொறிஞர் இராதே


மழை

 மழை !


மழையே மழையே - நீ எங்கே ? மறந்துப் போனாய் - வர இங்கே ?            (மழை)


கரையைச் சேரும் நுரையெங்கே ? நுரையில் பொங்கும் சுழலெங்கே ? சுழலில் துள்ளும் மீனெங்கே ? நீர்இருந் தால்தான் இவைஇங்கே !     ( மழை ) - 1


பச்சைப் பசுமை பயிரெங்கே ? பயிர்கள் தருகிற விளைச்சலெங்கே ? விளையா திருந்தால் உயிர்களெங்கே ? நீர்இருந் தால்தான் இவைஇங்கே !    ( மழை ) - 2


புலிகள் யானைகள் நீர்த்தேடும் ; குடிக்க வழியின்றி ஊர்த்தேடும் ; ஊரே மிரண்டு அரண்டோடும் ; நீர்இருந் தாலிவை மாறிவிடும் !     ( மழை ) - 3


மரங்கள் வெட்டியப் பெருங்கோபம் மனத்தில் ஆறாக் காயங்களா ? மறுபடி மரங்கள் நாட்டிடுவோம் மாறாக் காயம் ஆறாதா ?      ( மழை ) - 4


மழையே மழையே வா ! வா ! வா ! மண்ணுயிர்க் காக்க வா ! வா ! வா ! மறுத லிக்காமல் மனமிறங்கு மக்கள் வாழப் பொழிந்துவிடு !  ( மழை ) - 5


பொறிஞர் இராதே


கொதிக்கிற மீனும் வறுக்கிற மீனும்

 கொதிக்கிறமீனும் வறுக்கிற மீனும் !



கொதிக்கிற மீனும் வறுக்கிற மீனும்

ருசிக்கிற நாக்குக்குச் சொந்தமன்றோ ?


கொதிக்கிற மீனும் வறுக்கிற மீனும்

ருசிக்கிற நாக்குக்குச் சொந்தமன்றோ ?


கோலா காளான் கிழங்கானிருந்தா

யார்தான் வயித்துள்ளே தள்ளாதவரோ ?


கோலா காளான் கிழங்கானிருந்தா

யார்தான் வயித்துள்ளே தள்ளாதவரோ ?


கொதிக்கிற மீனும் வறுக்கிற மீனும்

ருசிக்கிற நாக்குக்குச் சொந்தமன்றோ ?


வவ்வா குழம்புடன் புட்டுசுறாவும்

வாட்டமா சோத்துக்குச் சேராதா ?


வவ்வா குழம்புடன் புட்டுசுறாவும்

வாட்டமா சோத்துக்குச் சேராதா ?


கொதிக்கிற மீனும் வறுக்கிற மீனும்

ருசிக்கிற நாக்குக்குச் சொந்தமன்றோ ?


வாலையிலே கருவாடுசுட்டா

மனமே துள்ளளில் ஆடாதா ?


வாலையிலே கருவாடுசுட்டா

மனமே துள்ளளில் ஆடாதா ?


கொதிக்கிற மீனும் வறுக்கிற மீனும்

ருசிக்கிற நாக்குக்குச் சொந்தமன்றோ ?



நண்டினிலே செய்த குருமாநினைத்தால்

நாக்கினில் எச்சில் ஊறாதா ?


நண்டினிலே செய்த குருமாநினைத்தால்

நாக்கினில் எச்சில் ஊறாதா ?


இறாலில் தொக்குத் தூக்கலாச் சமைச்சா

யார்தான் சோத்துக்கு மயங்காதவரோ ?


கொதிக்கிற மீனும் வறுக்கிற மீனும்

ருசிக்கிற நாக்குக்குச் சொந்தமன்றோ ?


புறப்படு தோழா !

 புறப்படு தோழா !



புறப்படு ! புறப்படு என்தோழா !

    புயலாய்ப் புறப்படு என்தோழா !

விரைவாய் வாடா என் தோழா !

    வேலைகள் கிடக்கு என் தோழா !


    புறப்படு ! புறப்படு !

    புறப்படு ! புறப்படு !    ( புறப்படு)




சுரண்டல் கும்பல் சூழ்ந்து வரும் ;

சூழ்ச்சிகள் செய்யப் புகுந்து வரும் ;

அரசியல் ஆட்டம் ஆடி வரும் ;

ஆணவத் திமிரில் ஆண்டு வரும் !   ( புறப்படு ) - 1



சொடுக்குஞ் சாட்டையைக் கையிலெடு ;

கெடுக்குங் சேட்டையை அடக்கிவிடு ;

மதவெறி முகத்திரைக் கிழித்துவிடு !

அமைதியின் பகைவரை விரட்டிவிடு !    ( புறப்படு ) - 2



சாதிக் கயவர்கள் தலையினிலே

சமரச மின்றியே கொள்ளியிடு ;

மடியும்  உரிமைக்குக் குரலைக்கொடு ;

மலரும் எழுச்சிக்கு ஆலமெடு ! ( புறப்படு ) - 3



புரட்சிக் கலப்பையால் உழுதுவிடு !

புலரும் பொதுமையின் விதைகளிடு ;

விளையுங் கதிர்களை அறுத்துஎடு ;

விடியும் இரவுக்குச் சொல்லிவிடு !   ( புறப்படு ) - 4



புடைக்குந் தோள்கள் தினவெடுக்கும் ;

புதுமைகள் திரண்டு வடிவெடுக்கும் ;

புரட்டரைத் துரத்த முடிவெடுக்கும் ;

புரட்சித் தலைமுறை தலையெடுக்கும் ! (புறப்படு ) - 5


 - பொறிஞர் இராதே


உத்தமன்

 உத்தமன்


உத்தமனா நடிப்பான் ;

ஊரைக் 'காக்கா' பிடிப்பான் ;

உள்ளுக் குள்ளே திட்டம்

       போட்டுக் கெடுப்பான் !    ( உத்தம )




மேடை யேறி மெத்தப் பேசிக்

   கொள்கையிலே புத்தனாட்டம்

     கூட்டத்திலே நீலிக் கண்ணீர் வடிப்பான் !

     கூட்டத்திலே நீலிக் கண்ணீர் வடிப்பான் ! 

பாடையிலே போகும் போதும் 

   பந்தலிலே புகழும் போதும் 

     மாலை மரியாதை வேண்டித் துடிப்பான் !

    மாலை மரியாதை வேண்டித் துடிப்பான் !     ( உத்தம ) - 1



மாடிமேலே மாடிக் கட்டி

   வீட்டி னுள்ளே 'காரை'விட்டே

     ஊழலிலே ஊற்றெடுத்துத் திளைப்பான் !

     ஊழலிலே ஊற்றெடுத்துத் திளைப்பான் !  

ஏழைப் பாழை எல்லாத்தையும்

   ஏய்ச்சி மேய்ச்சி ஏமாத்தியே

     நம்ப வைச்சிக் கழுத்தைதான் அறுப்பான் !

     நம்ப வைச்சிக் கழுத்தைதான் அறுப்பான் !    ( உத்தம ) - 2



ஊர்முழுக்க ' போஸ்ட்டர் ' ஒட்டி

வானுயர ' பேனர் ' கட்டி

     ஆனந்தமாய்க் கையைக் கொட்டி ரசிப்பான் !

     ஆனந்தமாய்க் கையைக் கொட்டி ரசிப்பான் !

கத்தை கத்தை யாகப் பணம்

   கொட்டிக் கொட்டி 'ஓட்டு' வாங்கி

     மக்களுக்கு நாமம் போட்டுச் சிரிப்பான் !

     மக்களுக்கு நாமம் போட்டுச் சிரிப்பா !   ( உத்தம ) - 3


பொறிஞர் இராதே


மனமா இது மனமா ?

 மனமா இது மனமா ?


மனமா இது ? மனமா இது ?

     இது மனமா ?

மாறி மாறி அழவதில் தான்

      தனி சுகமா ?    ( மனமா )




மௌனப் பாயை விரிச்சுப் போட்டும்

          தூக்கம் காணலையே !

மாயக் கடலில் நீந்தி நீந்திக்

          கரையச் சேரலையே !    ( மனமா )




ஆசை சூறைக் காத்து வீசி

          மனசைக் கலைப்பதும் ;

ஆடி ஆட்டம் போட்ட உடம்பும்

          அடங்கிக் கிடப்பதும் ;

ஓசை  யின்றி ஒன்னு ஒன்னா

          ஒதுங்கிப் பிரிவதும் ;

உரசிப் பார்க்கும் காலம் செய்யும்

          கோலந் தானிது !    ( மனமா ) - 1



பணமும் சொத்தும் நாளும் நம்மை

          சேர விடாது ;

பாச வலையில் துள்ளும் மீன்கள் 

          விடிவு பெறாது ;

இணக்க மில்லாப் பிணக்கு வாழ்வில்

          சோகந் தீராது ;

இறக்கும் முன்னே எத்தனை தான்

          மாய ஜாலமோ ?     ( மனமா ) - 2



உடலுக் குள்ளே இருக்கும் உயிரு

          பறக்க நினைப்பதும் ;

உருகும் சொந்த பந்தம் இன்னும்

          இழுத்துப் பிடிப்பதும் ;

முறுக்குத் திமிரு பற்று விலக

          மறுக்கும் முயல்வதும் ;

முடிய போகும் கதையின் உச்சக்

          காட்சி அல்லவா ?    ( மனமா ) - 3


 - பொறிஞர் இராதே


உதிர்ந்த பூக்கள்

 உதிர்ந்த பூக்கள் !


உதிரும் உதிரும் பூக்களே ;

உண்மை உதிர்க்கும் பூக்களே !

எதிரும் புதிரும் வினைகளாகி

எடுத்து காட்டும் பூக்களே !   ( உதிரும் )





புதிய வரவு துள்ளுமே ;

பழைய செலவு செல்லுமே ;

விதிகள் கோட்டைத் தாண்டலாம் ;

விடியல் வாழ்வைத் தூண்டலாம் !   ( உதிரும் )




விரிவு நாடும் உறவுகள் ;

விலகச் சொல்லும் பிரிவுகள் ;

விரல்கள் தொடுக்கும் மாலையில்

விரைந்து வீழும் பூக்களே !   ( உதிரும் ) - 1



மலரும் வேளை காலைதான் ;

மடிந்து போவாய் மாலைதான் ;

மறந்த மெய்மை உணர்த்தியே

மண்ணில் வீழும் பூக்களே !   ( உதிரும் ) - 2



சாய்ந்த பின்னும் சாதிகள்

சடங்குப் பார்க்கும் மனிதர்க்குச்

சரிந்து நிலைமை விளக்கிடும்

சாயுங் காலப் பூக்களே !  ( உதிரும் ) - 3



உயர்த்திப் பிடிக்கும் மதங்களை

உதற மறுக்கும் பிறவிகள்

உந்தன் பாடம் மறந்தனர்

உதிர்ந்து வீழும் பூக்களே !   ( உதிரும் ) - 4


 - பொறிஞர் இராதே


சொல்லு ! சொல்லு !


 சொல்லு ! சொல்லு !


சொல்லு ! சொல்லு !

    சொல்லு ! சொல்லு !

      உண்மையைச் சொல்லு !

      உண்மையைச் சொல்லு !     ( சொல்லு )


சொல்லுறது வலிக்குமா ?

      சோகத்தைத்தான் திணிக்குமா ?

நல்லதையும் கெட்டதையும்

      நாடறிந்த மொத்தத்தையும்    ( சொல்லு )


புத்தனா ? இல்லை சித்தனா ?

முத்திப்போன பித்தனா ?

எத்தனையோ கதையிருக்கே

எந்த கதையைச் சொல்லுறது !   ( சொல்லு ) - 1


பூவுக் குள்ளே தேனிருக்கும்

பூநாகம் மறைஞ்சிருக்கும்

நாவுக் குள்ளே சொல்லிருக்கும்

நஞ்சுந் தேனும் கலந்திருக்கும் !   ( சொல்லு ) - 2


கண்ணுக் குள்ளே பெண்ணிருக்கும்

பெண்ணு மேலே கண்ணிருக்கும்

ஒன்னுக் குள்ளே ஒன்னிருக்கும்

உரசிப் பாரு பொய்யிருக்கும் !  ( சொல்லு ) - 3


பாம்பைப் போலே சீறுறான் 

பணத்தைப் பார்த்து மாறுறான்

பல்லிளிச்சி வால் பிடிச்சுப்

பதவி சுகங் காணுறான் !    ( சொல்லு ) - 4


பானைக் குள்ளே யானையா ?

பதுங்கி நிக்கும் பூனையா ?

உள்ளக்  குள்ளே ஞானமா ?

ஓங்கி நிக்கும் ஊனமா ?    ( சொல்லு ) - 5


 - பொறிஞர் இராதே