இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 22 நவம்பர், 2026

 மாய ஊஞ்சல் !


மாய ஊஞ்சல் ஆசை கயிற்றில்

   மயங்கி ஆடுது !

பாயும் வேகம் பாயும் வீச்சில்

   பாடஞ் சொல்லுது !   ( மாய )


தேயும் ஒலிகள் உரசி உரசி

   செவிகள் கூசுது !

தேறும் மனமா ? ஆறும் மனமா ?

   தேடல் நீளுது !   ( மாய )


அவையம் காக்கும் மவுனமுட்டை

    கவலைப் பொரிக்குது ;

அசையும் வீச்சில் ஆடும்ஊசல்

   அமைதி கொல்லுது !

      பூவும் பொக்கும்;

      சொல்லும் தைக்கும் ;

      நினைவு மொய்க்குது - சேர்ந்த 

      நினைவு மொய்க்குது !    ( மாய ) - 1


கவையில் சிக்கிக் கலங்கும் மனசில்

   கறைகள் அரிக்குது ;

அடித்து அடித்து துவைக்கும் காலம்

   அழுக்கை நீக்குது !

      நாவும் திக்கும் ;

      யாவும் விக்கும் ;

      நினைவு மக்குது - சேர்ந்த

      நினைவு மக்குது !   ( மாய ) - 2


அசைவில் புரளும் வாழ்க்கைப் பொம்மை

   அடங்கத் துடிக்குது ;

ஆடும் ஊஞ்சல் மாய வீச்சை

   நிறுத்த மறுக்குது !

      ஊசல் நிக்கும் ;

      உயிரும் நிக்கும் ;

      நினைவு மக்குமா - வாழ்ந்த

      நினைவு மக்குமா ?   ( மாய ) - 3


- பொறிஞர் இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக