மாய ஊஞ்சல் !
மாய ஊஞ்சல் ஆசை கயிற்றில்
மயங்கி ஆடுது !
பாயும் வேகம் பாயும் வீச்சில்
பாடஞ் சொல்லுது ! ( மாய )
தேயும் ஒலிகள் உரசி உரசி
செவிகள் கூசுது !
தேறும் மனமா ? ஆறும் மனமா ?
தேடல் நீளுது ! ( மாய )
அவையம் காக்கும் மவுனமுட்டை
கவலைப் பொரிக்குது ;
அசையும் வீச்சில் ஆடும்ஊசல்
அமைதி கொல்லுது !
பூவும் பொக்கும்;
சொல்லும் தைக்கும் ;
நினைவு மொய்க்குது - சேர்ந்த
நினைவு மொய்க்குது ! ( மாய ) - 1
கவையில் சிக்கிக் கலங்கும் மனசில்
கறைகள் அரிக்குது ;
அடித்து அடித்து துவைக்கும் காலம்
அழுக்கை நீக்குது !
நாவும் திக்கும் ;
யாவும் விக்கும் ;
நினைவு மக்குது - சேர்ந்த
நினைவு மக்குது ! ( மாய ) - 2
அசைவில் புரளும் வாழ்க்கைப் பொம்மை
அடங்கத் துடிக்குது ;
ஆடும் ஊஞ்சல் மாய வீச்சை
நிறுத்த மறுக்குது !
ஊசல் நிக்கும் ;
உயிரும் நிக்கும் ;
நினைவு மக்குமா - வாழ்ந்த
நினைவு மக்குமா ? ( மாய ) - 3
- பொறிஞர் இராதே

