இராதே

இராதே
eradevadassou

வியாழன், 26 நவம்பர், 2026

ஆமையும் தேளும்

 ஆமையும் தேளும்


மெல்ல மெல்ல 

    நகர்ந்து நகர்ந்தே

      ஆமை வந்தது ;

   மேனி மேலே

      ஓடு போர்த்தி

         ஆமை வாழ்ந்தது ;

கொல்ல வரும்

   எதிரி கண்டால்

      ஓட்டுள் மறைந்தது ;

நல்ல நல்ல

   நண்பர் தேடி

      நாளுந் திரிந்தது ;

   நன்மை பயனில்

      நட்பை பெறவே

         ஆமை விழைந்தது ;

செல்லும் இடங்கள்

   சேவை செய்தே

      ஆமை வளர்ந்தது ;

   சிறந்த செயலால்

      ' செல்ல ஆமை '

         சிறப்பும் பெற்றது ;



தொல்லை எண்ணம்

   சுமக்குந் தேளும்

     ' தோது ' பார்த்தது ;

   துடிக்க வைக்கும்

      கொடுக்கில் நஞ்சைக்

         கொட்டிப் பழகுது ;

கள்ள நெஞ்சில்

   கரவு கொண்டே

      தேளும் அலையுது ;

   கரையை அடைய

      ஆமை உதவி

         தேளும் நாடுது ;

துள்ளும் ஆற்றைக்

   கடக்க தேளும்

      ஆமை ஏறுது ;

   தேளை முதுகில்

      ஆமை ஏற்றி

         நீச்சல் அடிக்குது ;

செல்லும் போதே

   ஆமை ஓட்டில்

      தேளுங் கொட்டுது ;

   ஆமை வலியில்

      கதறும் என்றே

         தேளும் நினைத்தது ;



அல்லல் இன்றி

   ஆமை சிரிக்க

      தேளும் வியந்தது ;

   அடியி்ல் கொட்ட 

      வலியை உணர்வேன்

         ஆமை சொன்னது ;

கொல்லும் சிந்தை

   கொடிய பண்பு

      கொண்ட தேளுமே

   ஓட்டின் கீழே

      கொட்ட எண்ணி

         குனிய முனைந்தது ;

உள்ளுக் குள்ளே

   உறுப்பை இழுத்தே

      ஆமை ஒளிந்தது ;

   தடுக்கி வீழ்ந்தே

      தேளும் ஆற்றில்

         அடித்தே சென்றது ;

நல்ல எண்ணம்

   நல்ல நட்பு

      நன்கு வாழுமே !

   கெட்ட எண்ணம்

      கெடுக்கும் கேண்மை

         கேடில் வீழுமே !



           - பொறிஞர் இராதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக