இராதே

இராதே
eradevadassou

வியாழன், 26 நவம்பர், 2026

கோலம்

 கோலம்


போடு கோலம் போடு

   பொட்டு புள்ளி நடுவில் இட்டுப்

      போடு கோலம் போடு !


போடு கோலம் போடு

   பொடித்த அரிசி மாவில் நாளும்

      போடு கோலம் போடு !


போடு கோலம் போடு

   புசிக்க எறும்பு ,பறவை வரவே

      போடு கோலம் போடு !


போடு கோலம் போடு

   பூசணிப்பூ சாணி வைத்து மார்கழிக்குப்

      போடு கோலம் போடு !


போடு கோலம் போடு

   பொங்கும் தமிழர் பொங்கல் விழாவில்

      போடு கோலம் போடு !


போடு கோலம் போடு

   புழங்கும் வீடு வாசல் சிறக்கப்

      போடு கோலம் போடு !


          - பொறிஞர் இராதே


சொற்கள் அறிவோம்

 சொற்கள் அறிவோம்


அட்டை  அட்டை

   பூச்சி அட்டை அறிவோம் அட்டை

ஒட்டை ஒட்டை

   ஒரு ' சாண் ' ஒட்டை அளப்போம் ஒட்டை

கட்டை கட்டை

   உடலுங் கட்டை மரத்துண்டுங் கட்டை

குட்டை குட்டை

   குளமும் குட்டை அளவும் குட்டை



கொட்டை கொட்டை

   மாவின் கொட்டை , உருண்டைக் கொட்டை

சட்டை சட்டை

   உடையும் சட்டை மதிப்பும் சட்டை

சிட்டை சிட்டை

   கணக்கு நூல் சுவடிச் சிட்டை

சொட்டை சொட்டை

   வழுக்கைச் சொட்ட பழிச்சொல் சொட்டை



தட்டை தட்டை

   சோளத் தட்டை , மூங்கல் தட்டை

திட்டை திட்டை

   தீவுந் திட்டம் திண்ணையுந் திட்டை

துட்டை துட்டை

   கட்டுக் கடங்காதவரே துட்டை

நட்டை நட்டை

   நட்டைப் பாடை இசைப்பண் நட்டை 



நிட்டை நிட்டை

   மனஉறுதி நிட்டை , வாழ்நாள் நிட்டை

நெட்டை நெட்டை

   உயரமும் எலும்புக் கூடும் நெட்டை 

நொட்டை நொட்டை 

   குற்றமும் நொட்டை குறையும் நொட்டை

பட்டை பட்டை

   வைரப்பட்டை , மரத்தோல் பட்டை



பெட்டை பெட்டை

   பேடு பெட்டை பெண்ணினம் பெட்டை

பொட்டை பொட்டை

   கண்கள் இழந்த குருடாம் பொட்டை

மட்டை மட்டை

   பந்தடிக்கும் மட்டை பாக்கின் மட்டை

முட்டை முட்டை

   கோழி முட்டை , உருண்டை முட்டை




மொட்டை மொட்டை

   தலையில் மொட்டை வெறுமை மொட்டை

வட்டை வட்டை 

   வடந்தேர் வட்டை , புலிக்கோடு வட்டை

விட்டை விட்டை

   கழுதை போடும் சாணம் விட்டை

வெட்டை வெட்டை

   வெப்பமும் வெட்டை கட்டாந்தரையும் வெட்டை


        பொறிஞர் இராதே


தன்னலம்

 தன்னலம் 


மண்ணில் விழும்

      விதையுண்டு ;

விதை வளர

      வேருண்டு ;

வேரை நம்பி

      மரமுண்டு ;

மரத்துக்கெல்லாம்

      கிளையுண்டு ;

கிளையில் துளிரும்

      இலையுண்டு ;

இலைகள் இடையில் 

      மலருண்டு ;

மலருக்குள்ளே

      தேனுண்டு ;

தேனைக் குடிக்க

      தேனீயுண்டு ;

தேனீ சேர்க்கும்

      அடையுண்டு ;

அடையைப் பிழியும்

      மனிதனுக்கோ

அளவில்லாத

      தன்னலமுண்டு !


             

              - பொறிஞர் இராதே


ஞாயிறு, 22 நவம்பர், 2026

கம்மாக்கரை


 கம்மாக்கரை


உரசுங் காத்தும்  உரசுது 

   ஊதைக் குளிரும் உலர்த்துது

சரச மாட அழைக்குது

   சடுகுடு தானே ஆடுது !


அரசல் புரசல் ஆளைய்யா

    அசரும் போது வாறியே 

பரிசம் முதலில் போடட்டும்

   பார்வை அப்புறம் மீறட்டும் !


ஒன்னும் மண்ணா இருக்கிறோம்

   உசிரில் ஒன்னாக் கலக்கிறோம்

இன்னா இப்படி முறைக்கிற

   இதுக்கு ஏனோ பதைக்கிற !


சும்மா சும்மா இளிக்கிற

   சுருக்குப் போட்டே இழுக்கிற 

பம்மி பம்மி நெளியிற

   பரவசத்திலே மிதக்கிற !


கம்மாக் கரையும் அழைக்குதே

   கெண்டையுங் கெளுத்தியுந் துள்ளுதே

இப்போ நீயும் வரலனா

   எப்போ நானும் பார்ப்பது ?


கல்யாணந் தான் நடக்கட்டும்

   கையைக் கோர்த்துத் திரியலாம்

மெய்யா லுந்தான் சொல்லுறன்

    மொத்தக் கதையும் முடிக்கலாம் !


- பொறிஞர் இராதே

பயணம்

 பயணம்


ஆசை இறங்கும் நேரம்

   ஞானம் மனத்துள் ஏறும் ;

அடிகள் கொடுத்த வலிகள்

   அனுப  வங்கள் கூறும் !    ( ஆசை)


ஓசை யின்றி நாட்கள்

   ஓடி ஒளியக் கூடும் ;

உறவும் நட்பும் மெல்ல

   உதற வாய்ப்புத் தேடும் !     ( ஆசை) 


திராட்சை ரசமும் திகட்டும் ;

   தெளிவும் இருளை அகட்டும் ;

தேடும் பொருட்கள் யாவும்

   துறக்க மனமும் விரும்பும் ;

ஓடும் கால மெல்லாம்

   உணர்ந்தே நடையாய் அரும்பும் ;

ஆடும் வாழ்க்கை படகினி

   அழகுப் பயணம் போகும் !     ( ஆசை) - 1


தலையைத் துவட்டும் மனைவி ;

   அறிவை வழங்கும் பேரன் ;

இன்னும் இருக்கும் நட்பு

   இதயம் துளிர்க்கும் இன்பம் !

சொன்னச் சொல்லும் சுவைக்கும்

   சோகம் மறைந்தும் இனிக்கும் ;

என்ன இன்னும் வேண்டும்

   இவையே தொடர்ந்தால் போதும் !     ( ஆசை) - 2


கடந்து மறக்கும் கசப்பு

   காத்துக் கிடக்கும் அன்பு 

உசப்பும் மிச்ச வாழ்வு

   உயிர்ப்பில் மிளிர நாளும்

மௌனம் உடைக்க தோழா

   மகிழ்ச்சி சுரக்க வாடா

நிறைவு நிறைவு நிறைவே

   நின்ற கவலை மறைவே !      ( ஆசை) - 3


பொறிஞர் இராதே

அடுத்த வூட்டு மயிலு

 கானா


அடுத்த வூட்டு மயிலு !

( கானா - பாடல் )


ஜின் ரம்மு பீரு பட்டை சரக்கைப் போட்டு பாடுடா !

ஜிங்குஜிங்குனு ஆடியாடிக் குத்து ஆட்டம் போடுடா !   (ஜின்)


      கண்ணு ரெண்டும் மீனுடா

      கலங்க வைச்சாப் பாருடா

      பன்னுப் போல கன்னத்துல

      குழியப் பார்த்து பம்முடா !                      (ஜின்)


மெத்தை வூட்டு மாடிமேல நின்னுப் பார்ப்பா  மைனா !

மொத்தமா தான் சைட்டடிச்சாத் திட்டுவான் அவ நைனா !

      அடுத்த வூட்டு மயிலுடா

      முறைச்சி நின்னா வெயிலுடா

      உத்து உத்து பார்த்து அவ

      ஊட்டிக் குளிரு ஸ்டெயிலுடா !   (ஜின்)


மப்பு யேறி மாடிமேல தாவிப் போனான் வீணா !

எப்பவும் அவன் கெத்து இல்லாத சப்பை மேட்டர் தானா ?

      சும்மா போட்ட சீனுக்கா

      கடிச்சிக் கிட்டான் ஊறுக்கா

      காத லெனும் பேருக்கா

      கவுந்து புட்டான் பாருக்கா !   (ஜின்)


இப்பவும் நீ இதுக்கு தானா கவல பட்டு போனே !

எப்பவும் நீ கலங்கிடாதே மேல நிக்கிற வானே !


      காத லெலாம் லேசுடா

      கவலப் படறவன் லூசுடா

      கண்டு கினு பாடிவைச்சான்

      கவிஞர் தேவ தாசுடா !  (ஜின்)


 - பொறிஞர் இராதே

உழலும் பரிசல்

 உழலும் பரிசல் !


பாவம் என்னடா பாவம் -   அடி

பட்டவன் கண்ணீர் சாபம் !

புண்ணிய மாவது என்னடா - பயன்

இல்லா உதவிகள் தானடா !    ( பாவம் )


ஆவதுங் காதல் ! நோவதுங் காதல் !

   அதிலென்ன காமம் சொல்லுடா ?

அந்த நெனப்பிலே எரியும் நெருப்புல

   வெந்தே கசக்கும் உண்மைதேனடா !    ( பாவம் ) - 1


தன்னலம் பாரா உதவிக்கிங்கே 

   தானே  பெயர்சொலுந் தர்மமடா !

தனக்காய் வேண்டிப் பிறர்க்குத்

   தருவது தானமாகும் பொருளடா !   ( பாவம் ) - 2


உறவிலே படருந் தொடரும் விரிசல்

   உழலும் மனஞ்சுழல் பரிசலடா !

பிரிவால் முந்தி ஓடும் பயணங்கள்

   உறவால் தொலைந்த மௌனமடா !    ( பாவம் ) - 3


வறியவனோடும் பழகி அமர்ந்தே

    பகிர்ந்தே உண்பதே இன்பமடா !

அறிந்தும் கைவிட்டு நழுவும்

   அன்பிலா உறவேபெருந் துன்பமடா !    ( பாவம் ) - 4


நஞ்சாய்க் கெடுப்பது நட்பாடா ?

   நல்லுயிர் தருவது நட்பாடா ?

நெஞ்சம் புலம்புதே தோனலையே

   வஞ்சம் இன்னும் அறுபட்டுத் தீரலையே !    ( பாவம் ) - 5


- பொறிஞர் இராதே