இராதே

இராதே
eradevadassou

புதன், 3 அக்டோபர், 2018

கொசு


( காவடிச்சிந்து )

மாலையோடி ரவிலுமே
     மாந்தரின்கு ருதியையே
     மாந்திடப்ப றந்துவரும் துன்பமாம் ! - புவி
     மானிடர்க்கு ருதியதற் கின்பமாம் !

சோலையாம்பூ விதழ்களில்
     தோன்றிடும்பூந் தேனினையே
     சுவைத்துண்டே வாழுதே நுளம்புதாம் ! - நோய்த்
     தொற்றரக்கர் தூதராய் விளம்புதாம் !

ஊசியாம்கு ழல்கள்நீட்டி
     உடலினில்ம யக்கம்பாய்ச்சி
     உறிஞ்சும்கு ருதித்தேடல் வேட்டையாம் ! - தம்
     உறவைப்பெ ருக்குகின்ற சேட்டையாம் !

வீசிடும்இ றக்கைகொண்டு
     விரவும்ம ணங்கள்கொண்டு
     விதைக்குமே நோய்களைப்பெண் கொசுக்கள் ! - அவை
     விதியினை முடிக்கும்காலன் சிசுக்கள் !

பற்றுமாம் மூளைக்காய்ச்சல்
     பரவுமாம் டெங்குக்காய்ச்சல்
     பரிசாகக் கொசுத்தருங் கொடையாம் ! - இவை
     பாமரரை மாய்க்கும் கழி சடையாம் !

முற்றுமா னைக்கால்நோயுமே
     முணறும்ம லேரியாவுமே
     முத்தமிடும் கொசுக்கொடுக்கும் வினையாம் ! - நாம்
     முயன்றால் தடுக்கலாம்இ தனையாம் !

வீட்டினையும் தூய்மைசெய்து
     வீதியையும் தூய்மைசெய்து
     விரட்டியேது ரத்திக்கொசு ஓட்டுவோம் ! - இனம்
     வேரறுக்க பல்வழிகள் தீட்டுவோம் !

தீட்டியநம் சிந்தையாலும்
     தெளிந்தநல் லறிவாலும்
     திட்டமிட்டே கொசுவினை ஒழிப்போம் ! - என்றும்
     திரும்பாவ கைகள்கண்டே அழிப்போம் !

                      - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக