இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

, இயைபுத் துளிப்பா - ( லிமரைக்கூ ) - 2

நூலகம்  படிக்கச்  செல்
நூல்பல  கற்று  நுண்ணறிவோடு
நல்லதை  ஊருக்குச்  சொல்


செய்வோம்  விழிக் கொடை
செகத்தை  விழியிலார்  இருவர்
காணத்  திறக்கும்  நடை


உயிர்  உலாவும்  வீடு
ஊதிப்புகை  தள்ளப் புற்றாய்
மாறும்  எலும்புக்  கூடு 


அடுப்பில்  தூங்கும்  பூனை
அடிவரைச்  சுரண்டியும்  ஏழைவீட்டில்
அரிசி  இல்லாப்  பானை


சாலை விதிகளை  மதி
சிட்டெனப்  பறந்துச்  சட்டென  விரைவது
மரணம் அடையும்  கதி

                                                                                                    இராதே

சனி, 17 டிசம்பர், 2016

இயைபுத் துளிப்பா ( லிமரைக்கூ ) - 1

அரசு மழலையர் பள்ளி
ஆங்கில வழிப்பாடங்கள் கூறி
தமிழுக்கு வைக்கும் கொள்ளி


சாக்காட்டில் கூட சாதி
சாக்கடைப் புழுக்களாய்ப் புழுத்து
சமூகம் அழிக்கும் அநீதி


திண்ணையில் முதியோர் முடக்கம்
திக்கற்றுத் தவிக்கும் பெற்றோர் முகத்தில்
எண்ணற்ற கவலைகள் அடக்கம்


கண்கள் சுவைத்து கொஞ்சும்
கொட்டும் அருவி தரும் இசைக்
கேட்க செவிக் கெஞ்சும்


வயலில் மேயுது  ஆடு
பயிரைக் காக்க உடனே
விழுந்த டித்தே ஓடு
                                                                              இராதே

வெள்ளி, 4 நவம்பர், 2016

துளிப்பா - 50

கூண்டு கிளி
சீட்டெடுப்பில்
எதிர்காலம் ?



காதுவரை கம்பளி
களைகட்டுகிறது
குளிர்



அறுவடைநாள்
அடகுக் கடையில்
அரிவாள்



ஒவ்வொரு துளியிலும்
உணவு
மழை



போட்டித் தீ
வளர்கிறது
பொறாமை

                                      -  இராதே

துளிப்பா - 49

படம்
பிடிக்கிறது  வானம்
மின்னல்



எரியும்கோதும்
அடிவாங்குகிறது
பிணம்



பிடி சாம்பலுக்குள்
பிடிவாதங்கள்
வாழ்க்கை



தூண்டில் புழு
துடிக்கிறது
சுவையான மீன்



சலசலப்பில்
இருப்பை உரைக்கும்
சருகுகள்

                                             - இராதே

துளிப்பா - 48

அறை நிரம்பும்
மெழுகு ஒளி
இருள் துறப்பு



கதவுத் திறப்பில்
வெளியேறுகிறது
மௌனம்



வீடு வீடாய்
நகர்கிறது
குப்பைத் தொட்டி


மலையின்
நெத்திச் சுட்டி
அருவி



பிரேம ஆனந்தம்
நித்ய ஆனந்தம்
சிறை ஆனந்தம்

                                         - இராதே

புதன், 2 நவம்பர், 2016

துளிப்பா - 47

கிழிந்த வானம் 
தைக்கிறது
மின்னல்



காது குத்தல்
கதறுகிறது
ஆட்டுக் கடா



மலர்த் தாவும்
வண்டுகள்
மகரந்த கடத்தல்



மனத்தில் ஆடுகிறது
மாற்றான் தோட்டத்து
மாங்கனி



கடை ஏறுகிறது
தாலிக்கொடி
வறுமை

                                             -இராதே

செவ்வாய், 1 நவம்பர், 2016

துளிப்பா - 46

கீழ்வெண்மணி
இன்னும் வழிகிறது
கண்ணீர்



மரணவோலை
வாசிக்கிறது
மது



குடி
மூழ்கும்
குடி



மரணம்
விரைகிறது
விரைவு உணவு



கதறக் கதற வெளியிடுகின்றன
ஊடகங்கள்
கற்பழிப்பு

                                                                -இராதே

துளிப்பா - 45

ஒற்றைத் துளியில்
ஒளிந்திருக்கிறது
நீர்



மழை நின்றதே
கண்ணீர் சொட்டுகிறது
கூரை



அலையும்
முந்தானை
அருவி



இடி தரும்
தந்தி
மின்னல்



ஊசலாடும்
மனசு
பாசம்

                                              - இராதே

பசு

கால்மடக்கித்
தரை சாய்ந்து
உடல் பரப்பி
வைக்கோல் பிடுங்கி
அரைத்து அசைபோடலில்
மணிகுலுங்க தலையாட்டி
வால் சுழட்டிக்
காதசைத்தலில்
அண்டாமல் பறக்கின்றன
கொசுக்களும் , ஈக்களும்
தங்கள் மேய்ச்சலை
இழக்கும் போராட்டத்தில்
மீண்டும் மீண்டும்
மணியோசைக்கு
வழி வகுத்தபடி


மழை சகதியில்
கலந்து கரைந்து
சாணமும் கோமியமும்
மூக்கைத் துளைக்கும்
மணமெழுப்ப
மாட்டுக் கொட்டகை
சிந்தைனை மூளையில்
முளைவிட


அடிவயிற்றெழு
அம்மா . . .
கதறலில்
துயில் களைய
போர்வை நழுவ
கூந்தலைக்  கொண்டையாக்கிச்
சேலை திருத்தி
அரிக்கன் விளக்கொளியில்
தாழ்த்திறந்து
சாக்கு மழையாடை
உடுத்தி
கொட்டகையில்
நுழைகையில்
மெல்ல கால்சுற்றி
முட்டி உரசி
நாவால் வருடி
வாலைக் குழைக்கிறது
கன்றோடு பசு

                                                           - இராதே


திங்கள், 31 அக்டோபர், 2016

துளிப்பா - 44

பிள்ளையார் தொப்புளில்
பிணத்தின் நெற்றியில்
ஒற்றை நாணயம்



குடைக்குள்
தவளை
காளான்



வானிலை
தோகை விரிக்கிறது
மயில்



குறுக்கே போகிறான்
குழப்பத்தில்
பூனை



பீட்சா , பர்கர்
காணாமல் போகுது
அடை , வடை

                                                    - இராதே

அழகுக் குட்டி பூனை

அழகுக்  குட்டி  பூனை

          ஆளை  மயக்கப்  பார்க்குது ;

துழவு  கைகள்  தூக்கி

          துடிப்பு  நடையைப்  போடுது ;

அழகு  வாலை  நீட்டி

          அன்பைக்  கண்ணில்  காட்டுது ;

பழகச்  சொல்லி  நம்மை

          பார்த்து  வணக்கம்  சொல்லுது !
                                                                           
                                                                                      -  இராதே

துளிப்பா - 43

ஆடு புலி
ஆட்டம்
கருப்புப்பணம்



பொது குடிமை சட்டம்
அரசியல்
சதுரங்கம்



முயல்
ஆமை
முயலாமை



குளத்தில்
விழும் நிலா
தெறிக்கவில்லை நீர்



சக்கர நாற்காலியில்
சுழல்கிறது
அரசியில்

                                                          -இராதே

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

துளிப்பா - 42

புட்டிப்
பழக்கம்
சுடுகாடு வரை



போதைப் பயணம்
பாதை முடிவு
இடுகாடு



விடுதலை வீரர்
அடைபடும் சிமிழ்
சாதி



எல்லாப் பூக்களும்
பூத்திருந்தன
பூக்கூடை



கொட்டைக்குள்
குடியிருப்பு
மாம்பழத்து வண்டு

                                                -இராதே

துளிப்பா - 41

வெட்டுண்ட மரம்
அழுகை
இரப்பர்



செல்பேசிப் பயணம்
வழியனுப்புகிறது
காலம்



எல்லைக் காக்கும் சாமி
உண்டியல்
கொள்ளை



கள்ளிப் பாலில்
கரைகிறது
பெண்மை



மூடிப் போட்ட
முழு நிலவு
பர்தா

                                                     - இராதே

துளிப்பா - 40

தொடங்குகிறது 
பருவ மழை
படகு ?



காகித கப்பல்
புரளுமா
மழை ?



தொலைதூரம்
பெயர்
தொடுவானம்



ஓடினவனுக்கு
ஒன்பதில் குரு
மல்லையா



மாட்டுக்காரனின் பொய்
தலைஆட்டுகிறது
பூம் பூம் மாடு

                                                     -  இராதே

எழிற்காட்சி

இறங்கும்  முகிலினங்கள்  படியெனவே
         
          இயங்கும்  பனிப்படர்வின்  மலைமுகட்டின்

உறங்கும்  பனியுறங்கும்  பனியுருகும்
         
          உரசுங்  குளிருரசும்  உடல்சிலிர்க்கும்

கிறங்கும்  மனஞ்சுவைக்கும்  கதகதப்பில்
         
          கிளரும்  எழிலுலவும்  விழிநடைமுன்

நிறங்கள்  ஒளிவீசி  மிளிர்ந்தோடி
         
          நிரலாய்  மணிப்பரலாய்  விழுமருவி




குருகும்  குயிலினங்கள்  முனகிடுமே

          குலாவும்  மயிலினங்கள்  அகவிடுமே

சருகும் நடையொலியில்  இசைசேர்க்கும்

          சரியும்  மணற்றுகலும்  சலசலக்கும்

பெருகும்  மலையருவி  முழவிடுமே

          பிசகா  இசைமழையைப்  பொழிந்திடுமே

இருகும்  மனநிலையும்  தளர்ந்திடுமே

          இசையின்  வளநலங்கள்  உளந்தொடுமே !

                                                                                                       - இராதே

ஆமை அசைவு

ஆளரவமற்ற 
தனிமை நீட்சியில்
இதய அமைதி
கிழிபடும்
நினைவுப் போராட்டக்
கண்ணீர்த் துளிகள்
கரையும்
சோகம் உணர்த்த
சுமை கூடி
நொடிப் பொழுதுகளில்
கழியும் பயணங்களில்
ஆமை அசைவாய்
நீள்கிறது
வாழ்வு
                                                  -இராதே

எருமை நகர்வு

சொர்ணையற்ற
தோலில்
கொத்தித் தின்னும்
பறவைகளுக்கு
இறைபடும் பூச்சிகள்
விரவி நெளியும்
சேற்றில் புரண்டு
புற்கள் மேயும்
எருமை
அசைபோடலுடன்
நகர்கிறது
வாழ்க்கை !
                                  - இராதே

வெறுமை

போலியான மகிழ்விலும்
புலம்பிடும் கண்ணீரிலும்
மரணிக்கும் மௌனங்கள்
கனக்க
சுமக்கும்
இதய துடிப்புகளில்
இயங்கும் வாழ்வியல்
அந்தாதி
நிறமற்ற
பட்டாம்பூச்சிகளாய்ப்
பறக்கும்
நினைவுகள் !
                                              -இராதே

துளிப்பா - 39

காகம் 
கரைகிறது
விருந்து



நகரும் முகில்
முகம் மறைக்கும்
நிலா



ஈசல்
பறக்கிறது
எண்ணெய்த் தாள்



புகை
நுழைவாயில்
புற்று



கார்பைட் கல்
பழுக்கிறது
நோய்

                                      - இராதே

துளிப்பா - 38

மடை திறந்த
பள்ளம்
மணல்



மணல்வீடு
கலையும் கனவு
அலை



கரையேறுகிறது
காதல் புயல்
தாடி



புதை சேறு
இழுக்கிறது
ஆசை



ஜிங் ஜக்
உயர்கிறது
பதவி

                                    - இராதே

சனி, 29 அக்டோபர், 2016

துளிப்பா - 37

புற்று
கலைமாமணி
கரையான்



அரிசியில் பெயர்
இழுத்துச் செல்கிறது
எறும்பு



சுருளும்
மரவட்டை
சங்குசக்கரம்



உளியின்
வலி
சிலை



மக்கள் மீது வரி
வரிகுதிரை
தோற்கிறது


                                            - இராதே

துளிப்பா - 36

சீனப் பட்டாசு
வெடிக்கிறது
சிவகாசி



சரவெடியில்
கேட்கிறது
கூலியின் அழுகை



மத்தாப்பு 
சிரிப்பில்
மழலையர் வறுமை



கம்பி மத்தாப்பில்
ஜொலிக்கிறது
கொத்தடிமை



தீபாவளி
புஸ்வானம்
வாக்குறுதிகள்

                                             -இராதே

செவ்வாய், 25 அக்டோபர், 2016

துளிப்பா - 35

கண் அசைவில்
கனக்கிறது
காதல்



பொரி தூவல்
மீன்கள்
படையெடுப்பு




டக்டக் டகடக
இசை யிழந்த
தந்தி





குடிநீர்க் குழாய்
நன்றாக வருகிறது
காற்று




அம்மாவின் அணைப்பு
ஆறுகிறது
பசி

                                                        -இராதே






திங்கள், 24 அக்டோபர், 2016

துளிப்பா - 34

ஊர்ந்தே
ஊரளக்கிறது
நத்தை



கலைமான் கொம்பு
கிளையில் சிக்கிய
வாழ்க்கை



ஆளுக்கேற்ப
முடிவுகள்
பச்சோந்தி



எருமை குளியல்
கரை தாவும்
தவளைகள்



தேய்ந்தும்
சுமக்கிறது
செருப்பு

                                   -இராதே