இராதே

இராதே
eradevadassou

திங்கள், 26 அக்டோபர், 2020

                                              பூசணி புலம்பல்

( உருப்படி )

எடுப்பு

நான் என்ன தீமை செய்தேன் ? - மனிதா
நான் என்ன தீமை செய்தேன் (நான்)

தொடுப்பு

ஏன் என்னை எடுத்துத் தரையில் மோதி
மாளவே மண்ணில் மண்டை உடைத்தாய் ? (நான்)

முடிப்பு

பச்சை கறிகாயாய் உணவில் சேர்ந்ததா ?
பதமாய்ச் சுவைத்திடும் ' அல்வா'வாய் ஆனதா ?
மெச்சும் பூசணிப் பூவைத் தந்ததா ?
மேனிப் பயனுற சாறாய்ப் போனதா ? (நான்)


கண்ணேறுக் கழிக்க வாசலில் கட்டினாய் !
காக்கையை விரட்ட பொம்மையாய் நாட்டினாய் !
மண்புவி சாலையில் உடைத்தே கொட்டினாய் !
மனத்திடை நன்றியைச் சொல்லாமல் பூட்டினாய் ! (நான்)


வீணான மூளையின் மூடப் பழக்கத்தால்
வீதியில் எனைவீசி வழக்கிடச் செய்தாயே !
ஆனான இன்னுயிர் 'அம்போ'னு போகுதே !
ஆகாத செயலினை அடியோடு செய்யாதே ! (நான்)

- இராதே





சனி, 10 அக்டோபர், 2020

            உருப்படி

( வஞ்சி வந்தனளே - மலைகுற )

எடுப்பு

சிந்து பாடினனே !- மனமகிழ்
சிந்து பாடினனே ! ( சிந்து )

தொடுப்பு

சிந்தை நடமிடு முந்தை மனமொழி
விந்தை எழுமதி வந்து முழவிட
சிந்தும் எழிலிசை உந்துங் கனவினில்
சந்தம் அழகுற முந்தும் நினைவொடு ( சிந்து )


முடிப்பு

கொஞ்சுந் தமிழிசை மஞ்சம் புகுந்திட
பஞ்ச ணையினிடை ஊடவே
மஞ்சு மிதந்திடும் பஞ்சு மொழியவள்
கெஞ்சும் இளநகை சூடவே
தஞ்சம் அருளிடும் விஞ்சுந் தமிழ்மொழி
மிஞ்சும் சிறப்பினை நாடவே
துஞ்சுந் தமிழரின் நெஞ்சம் எழுந்திட
அஞ்சும் நிகழ்வுகள் மங்க மனமகிழ் ( சிந்து )


திங்கள் ஒளிமழை அங்கி யெனவிழ
வங்க நிறைகடல் பொங்கி அலையெழ
மங்கை இதழ்வழி முங்கி யெழும்பிடுந்
தெங்கின் சுவையுடன் சங்க வளர்த்தமிழ்
சங்கம் முழங்கிடும் துங்க இசையுற
எங்கள் மொழிதமிழ் சிங்க நடையுடன்
எங்கும் நடந்திடும் தொங்கல் ஒலியுடன்
தங்குந் தமிழ்மொழி தங்க மனமகிழ் ( சிந்து )

- இராதே

(அங்கி : உடை , துங்க : தூய்மை , தெங்கு : தித்திப்பு )

Watch Again
Share



சனி, 3 அக்டோபர், 2020

                        மழை

( காவடிச் சிந்து)

பல்கும்நீர் அலைவுற முகில்தர
பாய்வுற வான்பொழி மாமழையே !
பஞ்சம்தான் இனியிலை எனும்நிலையே !
பரவவுந் தூவிடும் நீரிழையே !
பருவதண் ணீர்தரு நீர்த்துளியே !
அருகும்நீர் பொங்கிட வா வெளியே !
பங்கின்பொருந் தும்புனல்தங்
குஞ்சிறுகண் ணும்இனமும்
பந்தி விருந்திடும் வருவாயே !

அல்லல்தீர் வுஉருபெ றநீர்வழி
ஆறுகள் நிறைவுற பெய்திடுவாய் !
ஆழ்ஏரி மதகுகள் நீரேறி
அருவுறும் வறுமையை மாய்த்திடுவாய் !
அரங்கணி நீர்வளம் தேங்கிடுமே !
மரமொளிர் பசுமையும் ஓங்கிடுமே !
அன்னங்களும் வண்டினமும்
கண்கவரும் இன்பமென்றுன்
அன்பி னழைப்பொடு வருவாயே !

விண்ணில்பே ரிடியுமு டன்அலை
மின்ன லெழுதிடும் தூரிகையாம் !
விஞ்சும்பே ரழகுடன் நடம்புரி
வேகமுகி லாலணையும் காரிகையாம் !
விளைபயிர் உயிர்பெற வீழுமூற்றே !
மிகமிகும் அறுவடை ஈணும்சாற்றே !
விண்ணுதிரும் பொன்விளையும்
கண்டுவிருந் துண்ணுதல்முன்
விந்தை அறத்தினள் வெளிவாராய் !

- இராதே

                        நிலவு

( காவடிச் சிந்து )
( பாதி ராத்திரி வீட்டு மெட்டு )

நீல வானத்தில் மாலை யில்வந்து
நின்றி டும்வெள்ளித் தட்டு - மஞ்சு
நெற்றி யில்இட்டப் பொட்டு - மின்னல்
நீச்ச லில்ஒளிர் வட்டு - ஒளி
நீட்டிக் கூட்டிக்கொண் டேகி டநீரில்
நெகிழுதே அல்லி மொட்டு !

கால மும் இர வோடு தான்உன்னை
காண்ப தேகளிப் பாகும் - காளை,
கன்னி யர்மனம் நோகும் - உந்தன்
கருணை யால்இடர் போகும் - கவி
கற்ற பாவலர் கற்ப னைக்கும்உன்
காட்சி யேபரி சாகும் !

தேனி லாவிலே காத லார்மனம்
செம்மை யாயின்பம் ஊட்டும் - இணை
தீதி லாச்சுவை கூட்டும் - மகிழ்
சிந்து பாவியம் தீட்டும் - மெல்ல
தேயு றும்பிறழ் உள்ளத் தீச்சலை
செப்ப மாய் அற ஓட்டும் !

வானி யங்கிடும் வெண்ணி லாவந்து
வருட வேகுளிர் வீசும் - நோக்க
வாட்ட மாய்க்கண்கள் கூசும் - கேட்க
வண்ட மிழ்மொழி பேசும் - கலை
மாற்றத் தால்வரு மேற்ற தாழ்வுகள்
மாற வே போகும் மாசும் !

தேய்ந்தி ளைத்துநீ நாள்வளர் பிறை
தேர்ந்த கோளுறு காலம் - புவி
சேர்ந்த ஓட்ட 'மாய் மாலம்' -- அந்தி
தீண்ட லில்இடும் ஆலம் - வெய்யோன்
சிந்தி டும்ஒளி இந்து மேவிட
சீர்பெ றும்அருங் கோலம் !

பாய்ந்தெ ழுங்கடல் ஓய்ந்தி டும்அலை
பாரி னில்உந்தன் ஆர்ப்பு - விசை
பரவ லில்வரும் ஈர்ப்பு - ஓதம்
பங்கி டும்விளை யாட்டி னால்நிகழ்
பாரு றும்வினை வார்ப்பு !

பூமி யைச்சுழல் மைய மாய்க்கொண்டுப்
பொற்பு றுந் துணைக் கோளாம் ! - பிறை
போலு ரு அரி வாளாம் - வான்
பூ நி லாக்குறை சூளாம் - மதி
பூர ணவடி வாகி டும்நிலை
பூணு தல்திரு நாளாம் !

பாம ரர்க்கல் லல்தந்தி டும்பகல்
பைச லாகும்'மை' காட்டில் - எழும்
பால்நி லாஒளி நாட்டில் - சுடர்
பாய்ச்சி டுங்குடி வீட்டில் - வடை
பாட்டி சுட்டிடுங் காட்சித் தோன்றலோ
பார்வை மாயம்கண் கூட்டில் ?
- இராதே
சூள் : சாபம் , பொற்பு : அழகு
Image may contain: sky and cloud




              



You, Viramany