இராதே

இராதே
eradevadassou

திங்கள், 31 ஜனவரி, 2022

ஏலக்காய்

 ஏலக்காய்

மணக்கும் மணக்கும் ஏலக்காய் 

 மருந்தாய் மணக்கும் ஏலக்காய் ; 

திணறும் மூச்சி ரைப்பினைச் 

 சீராய் ஒழுங்குப் படுத்திடும் ; 

உணரும் உதட்டு வெடிப்பினை 

 உரிய நிலைக்கே திருப்பிடும் ; 

உணவின் நுகர்வைக் கூட்டியே 

 உடலைத் தேத்தும் ஏலக்காய் ! 



 தும்மல், விக்கல், மூக்கொழுக்கைத் 

 தூர ஓட்டும் ஏலக்காய் ; 

விம்மும் இருமல் மூக்கடைப்பை 

 விரைந்துத் தீர்க்கும் ஏலக்காய் ; 

பம்பும் நுண்மித் தொற்றினைப் 

 பணியச் செய்யும் ஏலக்காய் ; 

தெம்பாய் உடலை மாற்றுமே 

செரிக்க வைக்கும் ஏலக்காய் ! 



 ஈறு வீக்கம் தளர்த்திடும் 

 இழிந்தத் தோலும் பொலிவுறும் ; 

சீறும் மனத்தின் அழுத்தத்தைச் 

 சீர்மைப் படுத்தும் ஏலக்காய் ; 

ஊறுங் குருதி ஓட்டத்தை 

 ஓங்குந் தூய்மை யாக்கிடும் ; 

நூறாம் அகவை எட்டிட 

 நுவலும் வழிகள் ஏலக்காய்  !


                                                           - இராதே

கிராம்பு

 கிராம்பு



  நறுமணம் மூட்டும் கிராம்பு

    நற்குண மருந்து கிராம்பு ; 

உறுமிடும் பொருமல் தீர்க்கும்

   உழன்றிடுஞ் சளியைப் போக்கும் ;

 உறுத்திடும் புண்கள் ஓயும் 

  ஒற்றிடுந் தொற்றும் மாயும் ;

 இறுகிடுந் தசையின் பிடிப்பை 

   எடுத்திடும் உணவாங் கிராம்பு ! 



 இயங்கிடும் நொதித்தல் பெருக்கி 

 எளிதில் செரித்தல் கூட்டும் ; 

தயங்கிடுங் குருதி ஓட்டத் 

 தடைகளைச் சீர்மைப் படுத்தும் ; 

துயரங்கள் ஈணும் நுண்மி 

 துரத்தியே ஒதுக்கி விலக்கும் ; 

அயர்ந்திடும் மூச்சுக் குழலின் 

 அழற்சியைத் துலக்கும் கிராம்பு ! 



 பருக்களை உதிர்க்கும் கிராம்பு 

 பல்வலி விரட்டுங் கிராம்பு ; 

இருமலின் தாக்கம் மாய்க்கும்

 ஈறுகள் சிக்கல் அறுக்கும் ; 

உருட்டிடுந் தலையின் வலியை 

 ஒழித்திடச் செய்யுங் கிராம்பு ; 

நெருடிடுந் தொண்டை எரிச்சல் 

 நேர்பட நிறுத்துங் கிராம்பு ! 

                                                        - இராதே

இஞ்சி

 இஞ்சி



  இஞ்சி நல்ல இஞ்சி 

 இஞ்சிக் குணமோ எரித்தல் ; 

இஞ்சிக் கார இஞ்சி 

 இஞ்சிக் களைப்பைச் சுருக்கும் ; 

இஞ்சிக் கடின உணவை 

 எளிதில் விரைந்துச் செரிக்கும் ; 

மிஞ்சும் நெஞ்சுச் சளியை 

 மிரட்டி இஞ்சி முறிக்கும் ! 



 குமட்டல், வாந்தி நிற்கும் 

 குருதி இனிப்பைக் குறைக்கும் ; 

கமருந் தொண்டைக் கணைப்பைக் 

 களையும் நன்கே இஞ்சி ; 

துவையல், குழம்பு, பச்சடிச்

    சுவையாய்க் கொடுக்கும் இஞ்சி ; 

சமையல் உலகை யாளும் 

 சமச்சீர் உணவாம் இஞ்சி ! 



 இஞ்சிக் கண்டால் பித்தம்

    எகிறி ஓட்டம் பிடிக்கும் ; 

இஞ்சிச் சூட்டை முடுக்கும் 

 இஞ்சி ஏப்பம் ஒடுக்கும் ; 

இஞ்சி உமிழ்நீர்ச் சுரக்கும் 

 இஞ்சிக் காற்றை நீக்கும் ; 

இஞ்சி உடலைக் காக்கும் 

 இயைந்து நன்மை சேர்க்கும் ! 

                                                        - இராதே

நெல்லிக்காய்

 நெல்லிக்காய் 



 நீண்ட இளமை கூட்டும் 

 நெல்லி நெல்லிக் காயாம் ; 

மூண்ட நோயின் தொற்றை 

 முடக்கும் நெல்லிக் காயம் ; 

தீண்டும் நுண்மி அழிக்கத் 

 திரளும் நெல்லிக் காயாம் ; 

ஆண்டு நூறு வாழ 

 அருளும் நெல்லிக் காயாம் ! 



 அடங்காச் சிறுநீர் எரிச்சல் 

 அடக்கும் நெல்லிக் காயாம் 

 மடங்காய் உயரும் அழுத்தம் 

 மட்டுப் படுத்தும் காயாம் ; 

உடலின் வீக்கம் குறைக்கும் 

 உயர்ந்த நெல்லிக் காயாம் ; 

குடலின் இயக்கம் சிறக்கக் 

 கொள்ளும் நெல்லிக் காயாம் !



 கண்ணும் உடலும் குளிரக் 

 கருணைக் காட்டுங் காயாம் ; 

புண்கள் வயிற்றில் ஆற 

 புகட்டும் நெல்லிக் காயாம் ; 

பெண்கள் கூந்தல் வளமை 

 பெருக்கும் நெல்லிக் காயாம் ; 

உண்ண மருந்து பயன்கள் 

 உகுக்கும் நெல்லிக் காயாம் ! 


                                               - இராதே

முள்ளங்கி

 முள்ளங்கி 



 மண்ணுக் குள்ள மறைந்தே இருந்த முள்ளங்கி      

 மருந்துப் பண்புக் கொண்ட கிழங்கு முள்ளங்கி  

தொண்டை வீக்கம் வலியைப் போக்கும் முள்ளங்கி 

 தொற்றும் நுண்மி எதிர்த்து நிற்கும் முள்ளங்கி ; 

கண்ட ' நீர்ச்சு ருக்கை ' எடுக்கும் முள்ளங்கி         

காய்ச்சல் , வெப்பம் ஓட வைக்கும் முள்ளங்கி ; 

உண்ண உண்ண நன்மை பயக்கும் முள்ளங்கி  

உரிய ஊட்டச் சத்தை யளிக்கும் முள்ளங்கி !


 

படியுங் கெட்டக் கொழுப்பை அகற்றும் முள்ளங்கி 

 பசியெ டுக்கும் உணர்வைத் தூண்டும் முள்ளங்கி ; 

கடின மான மலத்தை இளக்கும் முள்ளங்கி 

கடுமை யான சளியை அறுக்கும் முள்ளங்கி ; 

முடியின் வளமை செழிக்க உதவும் முள்ளங்கி 

முடியின் உதிர்தல் தடுத்து நிறுத்தும் முள்ளங்கி ; 

துடிக்கும் இதயங் காக்க வருமே முள்ளங்கி 

தூய்மை குருதித் துள்ளப் பாய்ச்சும் முள்ளங்கி !

 


குருதி இனிப்பைக் கட்டுப் படுத்தும் முள்ளங்கி 

குடலில் உலவும் பிணிகள் விரட்டும் முள்ளங்கி ; 

சுருக்கும் பித்த நீரை என்றும் முள்ளங்கி 

சூட்டைத் தணிக்கும் வேலைப் பார்க்கும் முள்ளங்கி ; 

கருமை புள்ளி பருவை நீக்கும் முள்ளங்கி 

கனக்கும் உடலின் எடையை இறக்கும் முள்ளங்கி ; 

அருமை யான மருந்தாய் உணவு முள்ளங்கி 

அள்ளிப் பகிர்ந்தே உண்டு வாழ முள்ளங்கி !

                                                                       - இராதே

சேப்பங்கிழங்கு

 சேப்பங்கிழங்கு  



சேப்பன் சேப்பங் கிழங்கால் 

 சேற்றுப் புண்ணும் ஆறும் ; 

சேப்பன் சேப்பங் கிழங்கால் 

 சேர்ந்த கொழுப்புங் கரையும் ; 

சேப்பன் சேப்பங் கிழங்கால் 

 செரித்தல் விரைவில் நிகழும் ; 

சேப்பன் சேப்பங் கிழங்கால் 

 சீண்டும் பூஞ்சை மாயும் ! 



 சேப்பன் சேப்பங் கிழங்கால்

    சீறும் நஞ்சும் அகலும் ; 

சேப்பன் சேப்பங் கிழங்கால் 

 சிதைந்து மூலமும் இளகும் ; 

சேப்பன் சேப்பங் கிழங்கால் 

 சேரும் எடையுங் குறையும் ; 

சேப்பன் சேப்பங் கிழங்கால் 

 சீர்த்தத் தொற்றும் ஒழியும் ! 



 சேப்பன் சேப்பங் கிழங்கால் 

 தேறும் வயிற்றுப் புண்கள் ; 

சேப்பன் சேப்பங் கிழங்கால் 

 தீரும் மார டைப்பும் ; 

சேப்பன் சேப்பங் கிழங்கால் 

 தெறித்தே காற்றுப் பிரியும் ; 

சேப்பன் சேப்பங் கிழங்கால் 

 செழிக்கும் உடலின் நலமே ! 


                                         - இராதே

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

அவரைக்காய்

 அவரைக்காய் 



அவரை அவரை அவரைக்காய் 

அளிக்கும்உணவே மருந்துதான் ; 

அவரைப் பிஞ்சுத் துவர்க்குமாம் 

 அவரைக் காயோ சுவைக்குமாம் ; 

அவரை நோயை எதிர்க்குமாம் 

 அவரை தூக்கங் கொடுக்குமாம் ; 

அவரை சிறுநீர்ப் பெருக்குமாம் 

 அவரை சளியை விரட்டுமாம் ! 



 அவரை தசையின் நார்களை 

 அதிக வலிமை யாக்குமாம் ; 

அவரை கால்,கை மரத்தலை 

 அகற்றி உணர்தல் மீட்குமாம் ; 

அவரை எளிதில் செரிக்குமாம் 

 அவரை சோர்வைக் கெடுக்குமாம் ;

 அவரை தோல்நோய்த் தடுக்குமாம் 

 அவரை மலத்தை இளக்குமாம் ! 



 அவரை நினைவைத் தூண்டுமாம் 

 அவரை மூலம் காக்குமாம் ; 

அவரை இருமல், பொருமலை 

 அணுகி நிறுத்தித் துரத்துமாம் ; 

அவரை குருதி நாளத்தை 

 அலசித் தூய்மை படுத்துமாம் ; 

அவரை அருளும் நன்மையை 

 அண்டி பயன்கள் கொள்ளுவோம் !


                                                    - இராதே

கோவைக்காய்

 கோவைக்காய் 



 கொடியில் காய்த்தக் கோவைக்காய்  

கொழுப்பைக் கரைக்கும் கோவைக்காய் ; 

மடிந்துத் தொங்கும் தொப்பையை

    மைய இழைத்து நிமிர்த்திடும் ; 

தடித்து நெளியும் நுரையீரல்

    தழைக்க உதவும் கோவைக்காய் ; 

கடிதில் தொற்றை மாய்த்திடக் 

 கருணைக் காட்டுங் கோவைக்காய் ! 



 துடிக்கும் நரம்பின் இயக்கத்தின் 

 துன்பம் தீர்க்குங் கோவைக்காய் ; 

கொடிய இனிப்பு நீரினைக் 

 குறைக்கப் பணிக்குங் கோவைக்காய் ; 

படியும் பல்லின் கறைகளைப் 

 பதமாய்த் துலக்குங் கோவைக்காய் ; 

நெடிய குடலின் கழிவுகள் 

 நெருக்கித் துரத்துங் கோவைக்காய் ! 



 செரித்தல் இலகு வாக்கியே 

 செயலின் திறனைக் கூட்டுங்காய் ; 

அரிக்குந் தோலின் படைகளை 

 அகற்றி விரட்டும் கோவைக்காய் ; 

உரிய வளர்ச்சி எலும்புற 

 ஊட்டம் மூட்டுங் கோவைக்காய் ; 

அரிய மருந்தாம் கோவைக்காய் 

 அறிந்தே உண்டு மகிழுங்கள் ! 


                                             - இராதே

பீர்க்கங்காய்

 பீர்க்கங்காய் 


 முடக்கு வாதம் நீக்கும் 

 முதுகு வலியைப் போக்கும் ; 

இடக்குக் கொடுக்குந் தொற்றை 

 எட்டி உதைத்து விரட்டும் ; 

அடங்க மறுக்கும் சிரங்கை 

 அடக்கி ஒடுக்கித் துரத்தும் ; 

தொடர்ந்து நன்மை நல்கும் 

 துணைவன் பீர்க்கங் காயாம் ! 



 முரட்டுச் சளியை ஓட்டும் 

 முற்றுங் கொழுப்பை உரிஞ்சும் ; 

புரட்டும் இரப்பைப் புண்ணைப் 

 புரட்சிச் செய்தே ஆற்றும் ; 

அரற்றும் வயிற்றுப் போக்கை 

 அமைதி வழியில் நிறுத்தும் ; 

முரண்டு பிடிக்கும் பிணிகள் 

 மோதி வெல்லும் பீர்க்கன் ! 



 திரளும் இனிப்பு நீரின் 

 சீற்றங் கட்டுப் படுத்தும் ; 

மருளுங் கல்லீ ரல்நோய் 

 மடியத் துணையாய் நிற்கும் ; 

உரசுந் தோலின் நோய்கள் 

 ஓடி ஒளிய வைக்கும் ; 

பரந்த மருந்துப் பயன்கள் 

 பரப்பும் காயே பீர்க்கன் ! 

                                           - இராதே

தேங்காய்

 தேங்காய்  

தென்னை மரத்தின் ' தெங்கம்பழம் ' 

 தேங்காய் என்றே அழைப்போமே ; 

தின்ன இனிப்புச் சுவைதருமே 

 தீயின் புண்கள் ஆற்றிடுமே ; 

நுண்மி எதிர்ப்பு திறன்மிகுமே 

 நோய்கள் ஓடி ஒளிந்திடுமே ; 

சுண்ணம் , இரும்பு , புரதத்தின் 

 சுரங்க மாமே தேங்காயே ! 



 தேங்கும் அமில வயிற்றுப்புண் 

 தேங்காய் உண்ணத் தேறிடுமே ; 

தேங்காய் எண்ணெய்த் தடவிவர 

 திரளும் பொடுகும் ஓடிடுமே ; 

தேங்காய் எண்ணெய் முடிவளர்க்கும் 

 தேமல், படையை நீக்கிடுமே ; 

தேங்காய்ப் பாலும் உடல்வளர்த்துத் 

 தேடி நச்சை நசுக்கிடுமே ! 



 தேங்காய் ' ஓடு' மருந்தாகும் 

 தேங்காய்ப் பூவும் மருந்தாகும் ; 

தேங்காய் இளநீர் மருந்தாகும் 

 தேங்காய் ' வழுக்கை ' மருந்தாகும் ; 

தேங்காய் எண்ணெய்ப் புண்ணாக்கும் 

 சிறப்பு மருந்தாய்ச் செயல்படுமே ; 

தேங்காய்ச் சுவைத்தே உண்போமே 

 சேரும் நன்மைகள் பெறுவோமே !

                                                                  -  இராதே

சப்போட்டாப் பழம்

 சப்போட்டா



  உருட்டும் உணவுக் குழலழற்சி 

 உருளும் இரப்பைப் பேரழற்சி 

 திருகும் குடலின் திரளழற்சி 

 தீர்க்கும் முகவர் சப்போட்டா ; 

உருக்குங் காச நோயழிக்கும் 

 உண்மை நண்பன் சப்போட்டா ; 

குருதி நாளஞ் சீராகும் 

 குருதிக் கழிச்சல் குணமாகும் ! 


 தவிட்டு நிறமாம் சப்போட்டா 

 தணிக்குந் தாகம் சப்போட்டா ; 

குவியுந் தொற்றைக் கொன்றழிக்கும் 

குடற்நோய்ப் புற்றைத் தவிர்த்தழிக்கும் ; 

அவியும் உடலும் குளிர்ச்சியுறும் 

 அழகுக் கூந்தல் நன்மையுறும் ; 

புவியும் சிறந்த பழமாமே 

 புதுமை நிகழ்த்தும் சப்போட்டா ! 



 உண்ணும் போதோ உதடொட்டும் 

 உரியுந் தோலின் பாலொட்டும் ; 

சுண்ணம் , இரும்புச் சத்துமிகும் 

 சுணக்கம், மயக்கம் மீட்டெடுக்கும் ; 

கண்ணின் நோய்கள் நலமாகும் 

 காய்ச்சல் குறைந்து சரியாகும் ; 

தின்னத் தின்னச் சுவையினிக்கும் 

 சேர்ந்தே உண்போம் சப்போட்டா ! 


                                                          - இராதே

முலாம் பழம்

 முலாம்பழம்



  வேனில் கால பழமிதாம் 

 வேட்கைத் தணிக்கும் பழமிதாம் ; 

ஊனின் சூட்டைக் குறைக்கவே 

உடனே உதவும் பழமிதாம் ; 

சீனி நோயைத் தடுக்குமாம் 

 சிரங்கை வராது முடக்குமாம் ; 

மேனிச் சோம்பல் முறிக்குமாம் ; 

 மேன்மை பழமாம் முலாமே ! 



 புத்து ணர்ச்சி யூட்டுமாம் 

 புதிய தெம்பைக் கூட்டுமாம் ; 

நித்தம் தொற்றை ஒழித்திட 

 நெடிய பணிகள் ஆற்றுமாம் ; 

இத்துத் தேயும் எலும்பினை 

 எழுச்சி காண வைக்குமாம் ; 

மெத்த மூளைச் சோர்வினை 

 மீட்கும் பழமாம் முலாமே ! 



 குருதி அணுக்கள் பெருக்குமாம்

 குருதி கட்டை உடைக்குமாம் ; 

உறுத்தும் சிறுநீர்க் கற்களை 

 உருவா காமல் போக்குமாம் ; 

இறுக்கம் நரம்பைத் தளர்த்தியே 

 இரவில் தூக்கங் கொடுக்குமாம் ; 

அறுக்கும் அனைத்து நோய்களை 

 அகற்றும் பழமாம் முலாமே ! 


                                                          - இராதே

அத்திப் பழம்

 அத்திப் பழம் 



 உணவுக் கட்டுப் பாடின்றி 

 உடலின் எடையைக் குறைத்திடும் ; 

உணருங் குருதி அழுத்தத்தை 

 உயர விடாமல் அடக்கிடும் ; 

திணறும் மதுவால் கல்லீரல் 

 தீமை முழுதும் மாய்த்திடும் ; 

இணங்க மறுக்கும் மண்ணீரல் 

 இயல்பாய் அத்தி இயக்கிடும் ! 



 குடலில் தேங்குங் கழிவுகளைக் 

 குலைத்து சிதைத்து வெளியேற்றும் ! 

குடலின் மென்மை மேன்மையுறும் 

 குடலைப் புற்றும் பற்றாதே ! 

திடமாய் இறுகும் மலம்போக 

 தீர்வை அத்தி பழங்கொடுக்கும் ! 



 வெள்ளைப் புள்ளி வெண்குட்டம் 

 வெளிருந் தோலின் நிறமாற்றம் ; 

தொல்லை மறைய துணைநிற்கும் 

 தோழன் அத்தி பழமேயாம் ; 

உள்ளம் மகிழ அத்தியினை 

 உணவாய் நாளும் ஐந்துண்ண 

எல்லா நலமுங் கிட்டிடுமே

 இனிய அத்திப் பழத்தாலே ! 


                                               - இராதே

கருணைக் கிழங்கு

 கருணைக் கிழங்கு  



உடலின் வெப்பம் இறங்கிட 

 உடலின் எடையை குறைத்திட 

 உடலின் எழிலைக் கூட்டிட 

 உழைக்குங் கிழங்குக் கருணை பார் ! 



 குடலில் நுண்மிக் கொன்றிடக் 

 குடலின் கழிவை நீக்கிடக் 

 குடலின் புண்ணை ஆற்றிடக் 

 குடலைக் காக்குங் கருணை பார் ! 



 அருகும் பசியைத் தூண்டிட 

 அமிலச் சுரப்பை நீர்த்திட 

 அரற்றும் வாயு தீர்த்திட 

 அருளை வழங்கும் கருணை பார் ! 



 உருக்கும் மூல நோய்களை 

 உளைச்சல் கொடுக்கும் கடுப்பினை 

 உலர்ந்து மூலம் சரிபட 

 உயர்ந்த மருந்து கருணை பார் ! 



 மூளும் வலிகள் விடைபெற 

 மூட்டு வலிகள் மறைபட 

 முள்ளாந் தண்டு வலிவிட 

 முனையுங் கிழங்குக் கருணை பார் ! 



 எலும்பு வலிமை பெற்றிட 

 எகிறுங் காய்ச்சல் அடங்கிட

 இரப்பைப் புற்றும் அகன்றிட 

 எளிய மருந்து கருணை பார் ! 



 பித்தக் கற்கள் போக்கிடப் 

 பித்தப் பையைக் காத்திடப் 

 பித்த நோய்கள் மாய்த்திட 

 பிறந்த கிழங்குக் கருணை பார் ! 



 இதய நலனைப் போற்றிட 

 இறுகும் மலத்தை இளக்கிட 

 எளிதில் கொழுப்பைக் கரைத்திட 

 இயங்கும் மருந்து கருணை பார் ! 

                                                       - இராதே

வெள்ளி, 28 ஜனவரி, 2022

திராட்சை

 திராட்சை 



தித்திக்கும் பழமே திராட்சை 

 திறனூட்டும் பழமே திராட்சை ; 

சத்துணவு பழமே திராட்சை

  தாகவேட்கைத் தீர்க்குந் திராட்சை ; 

அத்துமீறும் புற்றைத் தவிர்க்கும் 

 அழகிளமை உருவங் கொடுக்கும் ;

 முத்துமுத்து நன்மை அளித்தே 

  முகத்தழகை மீட்குந் திராட்சை ! 



 தலைமுடியின் மயிர்க்கால் வேர்க்குச் 

  சத்தூட்டந் தருமே திராட்சை ; 

கலைந்தமுடி உதிர்தல் நிற்கும் 

  கருகருனு மினுக்கிச் சொக்கும் ; 

மலச்சிக்கல் மாய்க்கும் மருந்து 

  வறட்சிநீங்க தோலுக்கு விருந்து 

அலைக்கழிக்குங் குருதி அழுத்தம் 

  அமைதியுற அடக்குந் திராட்சை ! 



 இளஞ்சிவப்பு , மஞ்சள் , பச்சை 

  இருள்கருப்பு நிறங்கள் திராட்சை ; 

 களைப்பான சிறுநீ ரகங்கள் 

  களிப்புறத் தூண்டுந் திராட்சை ; 

வளமையுற வயிற்றைக் காக்கும் 

  வரமேதான் வழங்குந் திராட்சை ; 

அளவின்றித் தின்றாள் துன்பம் 

  அளவோடே உண்போம் திராட்சை ! 

                                                               - இராதே

அன்னாசிப் பழம்

 அன்னாசிப் பழம் 



தொண்டை அழற்சி நீக்குமே 

 தொண்டைப் புண்ணைப் போக்குமே ; 

தொண்டைச் சதையின் வளர்ச்சியைத் 

 தோன்றா வகையில் அழிக்குமே ; 

அண்டும் நச்சுப் பொருட்களை 

 அகற்றி உடலைக் காக்குமே ; 

மண்டை மூளைக் கோளாறு 

 மறதி ஒழிக்கும் அன்னாசி ! 



 திருகும் ஒற்றைத் தலைவலி 

 திகைக்க ஓட வைக்குமாம் ; 

பெருகும் 'விக்கல்' வீக்கங்கள் 

 பிசிறு இன்றித் தீர்க்குமாம் ; 

நெருடும் மூச்சுத் திணறலை 

 நெருங்கா வண்ணம் துரத்துமே ; 

இரும்பு, புரதம், நார்ச்சத்தும் 

 இணைந்த பழமாம் அன்னாசி ! 



 எருவாய், மார்பு, மூச்சறையுள் 

 எழும்பும் புற்று நோய்களை 

உருவா காமல் ஒடுக்கிடவே 

 உதவும் பழமாம் அன்னாசி ; 

அருளும் பார்வைத் திறனையே

     அருளும் மேனி எழிலையே ; 

திருவாய்த் திறந்தே அருந்துங்கள் 

 திரண்ட பயன்கொள் அன்னாசி !

                                                       - இராதே

வெந்தயம்

 வெந்தயம்  



வெந்தயமாம் வெந்தயம் 

 வினையாற்றும் வெந்தயம் ; 

தந்திடுமாம் குளிர்ச்சினைத் 

 தரமான வெந்தயம் ; 


 நெஞ்செரிச்சல், எதிர்களித்தல் 

 நீக்கிவிடும் வெந்தயம் ; 

அஞ்சவைக்கும் மூட்டுவலி 

 அகற்றிவிடும் வெந்தயம் ; 


 மலச்சிக்கல், வயிறுவீக்கம் 

 மறையசெய்யும் வெந்தயம் ; 

தலைமுடியின் வளர்ச்சிக்குத் 

 தருமருந்தாம் வெந்தயம் ; 


 முடியுதிர்தல், தோல்வறட்சி 

 முன்தடுக்கும் வெந்தயம் ; 

படிகின்ற கொழுப்பகற்றிப் 

 பலன்வழங்கும் வெந்தயம் ; 


 பேன்,பொடுகு , ஈர்த்தொல்லைப் 

பிணிவிடுக்கும் வெந்தயம் ; 

ஊன்நரம்பின் உயிரோட்டம் 

 ஊக்குவிக்கும் வெந்தயம் ; 


 பருஅகல, கண்குளிர

    பயன்தருமே வெந்தயம் ; 

அரும்பசியை அதிகரிக்க 

 அருமருந்தே வெந்தயம் ; 


சீழ்மூலம் , சீதபேதி 

 சீராக்கும் வெந்தயம் ; 

பாழ்சளியும் , பொருமலையும் 

 பழிதீர்க்கும் வெந்தயம் ; 


 நீரழிவுக் குறைந்திடவே 

 நின்றுகாக்கும் வெந்தயம் ; 

நீர்ச்சத்துப் புரதங்கள் 

 நிறைந்தபயிரே வெந்தயம் !

                                     - இராதே

சுண்டைக்காய்

 சுண்டைக்காய் 

 சொத்தைப் பல்லும் வாய்ப்புண்ணும் 

 சுவடே இல்லா தொழிந்துவிடும் ; 

சத்தாம் இரும்பின் இருப்பதிகம் 

 தாய்ப்பால் சுரப்பு மேலோங்கும் ; 

மெத்த சோர்வு, மூட்டுவலி 

 முனகிப் புலம்பி வெளியேறும் ; 

ஒத்து வராத புளியேப்பம் 

 ஓட விரட்டும் சுண்டைக்காய் ! 



 வெள்ளை அணுக்கள் குருதியிலே 

 வெகுவாய்ச் செழிக்க ஒத்துழைக்கும் ; 

தொல்லை இருமல், மார்புசளி  

துவண்டே நடுங்கி அகண்டுவிடும் ; 

கொல்லும் வயிற்றுப் பூச்சிகளை, 

 குறைக்கும் மூலக் கடுப்புகளை ; 

கல்லீ ரல்நோய்த் தொற்றடக்கிக் 

 காக்கும் மருந்தே சுண்டைக்காய் ! 



 உருக்கும் காச பிணிமாய்க்கும் 

 உறையுங் குருதிக் கொழுப்பெடுக்கும் ; 

சுருங்கும் வயிற்றுக் கோளாறு 

சுகமே காணும் மண்ணீரல் ; 

நெருக்க மாக பணியாற்றும் 

 நேயம் மிகுந்த சுண்டைக்காய் ; 

மெருகுக் கூட்டி உடல்போற்றும் 

 மேன்மை சிகரம் சுண்டக்காய் !

                                                         - இராதே

வியாழன், 27 ஜனவரி, 2022

கொத்துமல்லி

 கொத்துமல்லி



 மயக்கம் அறுக்கும் மாமருந்து 

 மனநோய்த் தீர்க்கும் மாமருந்து ; 

துயரங் கொடுக்கும் மதுமயக்கத் 

 துன்பம் நீக்கும் மாமருந்து ; 

தயக்க மின்றிப் பசித்தூண்டும் 

 சாம்பார், ரசத்தில் உணவாகும் ; 

பயன்கள் பலவும் தந்திடுமே 

 பண்பில் மணக்கும் கொத்துமல்லி ! 



 நரம்பு, எலும்பு மண்டலங்கள் 

 நலங்கள் மேவப் பாடுபடும் ; 

பரவுந் தோலின் நோய்த்தொற்றைப் 

 பதுங்கி ஓடச் செய்துவிடும் ; 

திரையும் புரையும் விழிகளிலே 

 தீண்டா வண்ணம் துணைநிற்கும் ; 

இரவில் இனியத் தூக்கத்தை

    இயல்பாய் அருளும் கொத்துமல்லி ! 



 எத்தும் குடற்புண் மறந்தோடும் 

 எளிதில் செரித்தே உடல்தேற்றும் ; 

பித்தக் காய்ச்சல் மிரண்டோடும் 

 பிணிகள் பலவும் அரண்டோடும் ; 

மெத்த மூளை வளர்ச்சியுறும் 

 மேனிக் கட்டு வலிமையுறும் ; 

கொத்து மல்லி சிறப்புகளைக் 

 கொணர்ந்தே உணவில் பயன்கொள்வோம் !

                                                                                 - இராதே

கறிவேப்பிலை

கறிவேப்பிலை ( கறிவேம்பு )

 வாந்தி, குமட்டல், தலைசுற்றல் 

 வாய்ப்புண், சோகை, வயிற்றிரைச்சல்

 சீந்தும் மூலம், சீதபேதி 

 சீறும் பித்த நோய்களை 

ஏந்தும் உடலைச் சீராக்கும் ; 

 இயற்கைக் கொடையே கறிவேம்பு ; 

வேந்தாய் நின்று நலங்காக்கும் 

 விழையும் பயன்கள் விளைவிக்கும் ! 



 உதிரும் முடியும், இளநரையும் 

 உடனே நின்று கருகருக்கும் ; 

புதிராய்த் தோன்றும் நீரிழிவைப் 

 புரிந்துக் குறைக்க வழிகோலும் ; 

எதிர்க்கும் ஆற்றல், நோய்த்தடுப்பும் 

 எல்லாம் ஈணும் கறிவேம்பு 

எதிரி போன்றே ஒதுக்காமல் 

 இயல்பாய்ச் சேர்த்தே உண்ணுங்கள் !



தெளிவாய்ப் பார்வைத் திறன்கூடும் 

 சிதையும் ஈறுகள் வலிமைபெறும் ; 

களிங்குங் கெட்டக் கொழுப்புகளைக் 

 கரைக்கக் குருதித் தூய்மையுறும் ; 

எளிய மருந்தே கறிவேம்பு 

 எங்கும் கிடைக்குங் கறிவேம்பு ; 

துளியும் அதனைத் தவிர்க்காமல் 

 தொடர்ந்தே உண்டு மகிழுங்கள் ! 

                                                      - இராதே 

சீத்தாப் பழம்

 சீத்தாப் பழம்  



சோர்வு, சோம்பல், சோகையைத் 

 துரத்தி ஓடச் செய்திடும் ; 

பார்வை வளமும் மேம்படும் 

 படருந் தேமல் மறைந்திடும் ; 

ஆர்வ முடனே நினைவாற்றல் 

 அளவை அதிக மாக்கிடும் ; 

மார டைப்பைத் தடுத்திடும் 

 மருந்து பழமே சீத்தாவாம் ! 



 குருதிப் பெருக்கம் மேலிடும் 

 குருதி அழுத்தம் சமன்படும் ; 

அருகும் மூச்சுக் குழலதன் 

 அழற்சி நீங்கத் துணைபடும் ; 

சுருங்குந் தோலின் வறட்சியைத் 

 தோற்றப் பொலிவாய் மாற்றிடும் ; 

நெருக்கும் நச்சுக் கழிவினை 

 நீட்சி செய்தே அகற்றிடும் ; 



 தசையின் பிடிப்புச் சரிபடும் 

 தாக்கும் தொற்றோ விடுபடும் ; 

அசையா மலத்தை இளக்கிடும் 

 அறவே சளியை விலக்கிடும் ; 

அசையும் நரம்பு வலுப்படும் 

 அகத்துள் இன்பம் பிடிபடும் ; 

விசையாய் நன்மை பயத்திடும் 

 விருந்து பழமாம் சீத்தாவே !

                                                      - இராதே

புதன், 26 ஜனவரி, 2022

பாகற்காய்

 பாகற்காய் 



 கசப்புச் சுவையே பாகற்காய் 

 கடிய பிணிக்கும் மருந்திடும் ; 

பசப்புச் செயல்கள் இன்றியே 

 பயன்கள் எடுத்து வீசிடும் ; 

அசத்தும் ஆற்றல் கொண்டதே 

 அரிய பண்பு நிறைந்தது ; 

கசக்கி பிழிந்து நோய்களைக் 

 கண்டே விரட்டும் பாகற்காய் ! 



 விடத்தின் கடுமை போக்கிடும் 

 விரவுந் தொற்றை மாய்த்திடும் ; 

படருஞ் சிரங்கு சொரிகளைப் 

 பதமாய்த் தீர்த்துக் கட்டிடும் ; 

தொடருங் குருதி சோகையின் 

 தொல்லை மறைய வித்திடும் ; 

குடலில் புழுக்கள் நீக்கிடும் 

 குருதிக் கொழுப்பை எரித்திடும் ! 



 இருமல், இழுப்பு, சளிதனை 

 இல்லா தாக்கி விலக்கிடும் ; 

பெருகும் மஞ்சள் காமாலை 

 பெயர்ந்தே ஓட செய்திடும் ; 

நெருக்கும் சிறுநீர்க் கற்களை 

 நிரவி உடைத்தே அகற்றிடும் ; 

குருதி இனிப்பைச் சரித்திடும் 

 கொடிய புற்றை அழித்திடும் ! 



 பொடுகுச் சிக்கல் விடுபடும் 

 பொலிவு தோலில் எதிர்படும் ; 

இடுக்கண் கொடுக்கும் ஈரல்நோய் 

 எதிர்த்து வெற்றிப் பெற்றிடும் ; 

கடுக்கும் மூல நோய்தனைக் 

 களைந்து நன்மை தந்திடும் ; 

அடுக்கும் பயன்கள் பலபல 

 அளிக்குங் காய்தான் பாகற்காய் !

                                                                  - இராதே

சுரைக்காய்

 சுரைக்காய்  

சுரைக்காய் சுரைக்காய் சுரைக்காய் 

 சுவையாய் விளங்கும் சுரைக்காய் ;

 உரைக்கும் வேட்கைத் தணிக்கும் 

 உடலின் வெப்பங் குறைக்கும் ; 

நரம்பை ஊக்கப் படுத்தும் 

 நல்ல தூக்கங் கொடுக்கும் ; 

சுரக்கும் நீரின் மிகையால் 

 சேர்'நீர்ச் சுளுக்கு' மறையும் ! 




 பெருகும் வெப்ப நோய்கள் 

 புரண்டு மிரண்டே ஓடும் ; 

குருதி இனிப்புச் சரியும் 

 குடற்புண் சிக்கல் நசியும் ; 

நெருடும் நச்சுக் கழிவை 

 நீர்த்து சிறுநீ ராக்கும் ; 

சிறுநீ ரகத்தின் பிணிகள் 

 சிதைக்கும் ஒருகாய் சுரைக்காய் ! 




 ஓய்த லின்றி உழைத்தே 

 உணவுக் குழல்நோய் நீக்கும் ; 

காய்ச்சல் வராமல் தடுக்கும் 

 கால்,கை எரிச்சல் ஒடுக்கும் ; 

நோய்கள் எதிர்க்கும் ஆற்றல் 

 நுட்ப மாக வார்க்கும் ; 

ஆய்ந்தே உடலைப் பேணும் 

 அருங்காய் சுரைக்காய் தானே !

                                                       - இராதே

புடலை

 புடலங்காய்  


வடிவில் பாம்பாய்த் தோன்றுமாம் 

 வளமை மிக்க புடலங்காய் ; 

தடித்த வயிற்றுப் பொருமலைத் 

 தவிர்க்கும் காயாம் புடலங்காய் ; 

வெடிக்கும் மூல நோய்தனை 

 விரைந்துச் சீர்மை செய்யுமே ; 

துடிக்கும் நரம்பு மேம்படத் 

 துள்ள லோடே இயங்கும் ! 



 தொண்டைப் புண்கள் ஆற்றுமே 

 தோன்றுஞ் சூட்டைத் தணிக்குமே ; 

கண்கள் பார்வைத் துலக்குமே ; 

மண்டை நினைவின் ஆற்றலை 

 மறதிப் போக்கிக் கூட்டுமே ; 

குண்டாய் உடலும் மாறிடக் 

 கொள்ளும் மருந்தே புடலங்காய் ! 



 காய்கள், வேர்கள், இலைகளும் 

 களிக்கும் மருந்தாய் மாறுமே ; 

நோயாம் மஞ்சள் காமாலை 

 நொடிக்க வைக்கும் புடலங்காய் ; 

நோய்க ளற்ற மேனியை 

 நுவலுங் காயே புடலங்காய் ; 

வாய்த்த இயற்கை மருந்திதாம் 

 வணங்கிப் புடலை உண்ணுவோம் ! 

 - இராதே

பூசணி

 பூசணி 



 கொடியில் காய்க்கும் பூசணி 

 குளுர்ச்சித் தருமே பூசணி ; 

கடிதில் நாடா புழுக்களைக் 

 களையுங் காயே பூசணி ; 

துடிக்குங் குருதிக் கொதிப்பினைக் 

 குறைக்க வல்ல பூசணி ; 

படிக்க மறைக்கும் கண்புரைப் 

 படர விடாது பூசணி ! 



 துவலும் எலும்பு வலுவுறும் 

 துன்பப் புற்றுச் சீருறும் ; 

கவலை யின்றி நுரையீரல் 

 கடமை யாற்றத் துணைபடும் ; 

திவலை புதிய அணுக்களைத் 

 தோன்றத் தூண்டும் பூசணி ; 

உவக்கும் பயன்கள் சொரியுமே 

 உண்ண சுவைக்கும் பூசணி ; 



 செழிக்கும் நீர்மச் சத்தினால் 

 சிறுநீர்க் கழிவை அகற்றுமே ; 

ஒழியும் ஒற்றைத் தலிவலி 

 ஒழியும் நெஞ்சுச் சளியுமே ; 

பழிக்கும் எடையும் இறங்குமே 

 பார்க்க இளமை தெரியுமே ; 

எழிலை ஊட்டும் பூசணி 

 என்றும் உண்போம் பூசணி ! 

                                               - இராதே

உருளைக்கிழங்கு

 உருளைக் கிழங்கு 



 உருளை உருளைக் கிழங்காம் 

 உண்ண சிறந்த கிழங்காம் ;

 சுருக்கந் தோலில் நீக்கும் சுணங்கும் வயிற்றைக் காக்கும் ; 

பெருகும் சிறுநீர்க் கற்கள் 

 பெருக விடாமல் கரைக்கும் ;

 அருமை நிறைந்த ஆற்றல் 

 அருளும் உருளைக் கிழங்காம் !



 உடனே உணவு செரிக்கும் 

 ஊட்டம் எடையைக் கூட்டும் ; 

தடைகள் இன்றிக் குருதித் 

 தடங்கள் இயக்கும் கிழங்காம் ;

 குடலில் புற்றின் அணுக்கள் 

 குறைக்க உதவும் கிழங்காம் ; 

உடலில் புளித்த அமிலம் 

 ஒழிக்கும் உருளைக் கிழங்காம் ! 



 எண்ணெய் வழியும் முகத்தை 

 இயல்பாய் உலர வைக்கும் ; 

புண்கள் உறுத்தும் வயிற்றைப் 

 பேணிக் கடமை ஆற்றும் ; 

மண்ணின் அடியில் மறைந்தே 

 வளரும் உருளைக் கிழங்கை 

எண்ணிப் போற்றி உண்போம்

    எதிர்ப்புச் சத்துக் கொள்வோம் !


                                                            - இராதே

சீரகம்

 சீரகம் 


 உடலின் வெப்பம் தணிக்குமே 

 'உப்பும்' வயிற்றைச் சரிக்குமே ; 

குடலில் , பித்தப் பைகளில் 

 குன்றும் செயல்கள் தடுக்குமே ; 

கடமை வீரர் உணர்வோடு 

 கண்ணின் எரிச்சல் அடக்குமே ; 

தொடரும் விக்கல் நிறுத்துமே 

 தொண்டன் நமது சீரகம் ! 



 காரம் , இனிப்புக் குளிர்ச்சியும் 

  கமக்கும் மணமும் இதன்குணம் ; 

தீரா வயிற்றுப் போக்கையும் 

 தீர்க்கும் பணியில் முன்நிற்கும் ; 

ஈரல், வயிற்றுக் கட்டிகள் 

 எழும்ப முளையில் கிள்ளுமே ;

சீராய் மேனி மெருகுற 

 செப்பும் வழிகள் சீரகம் ! 



 உயரும் குருதி அழுத்தத்தை 

  ஒழுங்குப் படுத்த வகைசெயும் ; 

துயரம் நல்கும் தலைசுற்றல் 

  துன்பம் விலக வைக்குமாம் ; 

அயர்வி லாதே உழைக்குமாம் 

  அருமை கருப்பு சீரகம் 

உயர்ந்த மருந்தாம் சீரகம் 

  உணவில் சேர்த்து பயன்கொள்வோம் ! 


                                                               - இராதே

செவ்வாய், 25 ஜனவரி, 2022

மிளகு

 மிளகு 



 பத்து மிளகு கிடைத்திடின்

    பகைவர் வீட்டில் உண்ணலாம் ; 

அத்து மீறும் நஞ்சினை 

 அறுத்தே அழிக்க வல்லதாம் ; 

இத்து நசியும் நரம்பிற்கும் 

 எழுச்சி உணர்வை ஊட்டுமாம் ; 

மெத்த நல்கும் மருத்துவம் 

 மிகுந்த உணவு மிளகுதான் ! 



 சளியும், கோழை, இருமலும் 

 சட்டென் றோட உழைக்குமே : 

எளிதில் உணவும் செரித்திடும் 

 எதிர்க்கும் வாயு மாய்ந்திடும் ; 

இளிக்கும் பல்லின் கூச்சத்தை 

 இல்லா தாக்கி விடைதரும் ; 

அளிக்கும் மிளகின் பயன்கள்தாம் 

 அறிந்தே உண்டு மகிழலாம் ! 



 முறியும் உறைந்த சோம்பலும் 

 மூளும் நினைவின் ஆற்றலும் ; 

பொறிக்கும் உருளைக் கிழங்கிற்கும் 

பொங்கல், கோழி ரசத்திற்கும் 

 தெறிக்குங் கார மணந்தரும் 

 தேர்ந்த மிளகை தூவலாம் ; 

குறியாய் உடம்பைக் காத்திடும் 

 குண்டு மிளகை உண்ணங்கள் !

                                                             - இராதே

கொய்யா பழம்

கொய்யா பழம்


  செழுமை மஞ்சள் நிறமும் 

  செரிக்க வைக்கும் குணமும் 

 பழுத்த பின்னே மணமும் 

  பசியைச் சுருக்குந் திறமும் 

கொழுத்த வயிற்றுப் புண்ணைக் 

 குறைக்கும் மருந்துத் தரமும் 

அழுத்த மாக வழங்கும் 

 அருமை கொய்யா பழமே ! 



 பார்வை மேன்மை கூட்டும் 

 பற்கள் உறுதிப் பூட்டும் ; 

சீர்த்த சிரங்கு , சொரியைத் 

 தீர்த்துக் கட்டி ஓட்டும் ;

 நீர்த்து மலத்தை இளக்கும் 

 நெருடுந் தொற்றை விலக்கும் ; 

ஆர்த்தப் புற்று நோயை 

 அருந்துங் கொய்யா ஒடுக்கும் ! 



 உடலின் எடையை இறக்கும் 

 உயிரி அணுக்கள் பெருக்கும் ; 

குடலில் தெம்பைச் சேர்க்கும்

    குன்றா இளமை ஊட்டும் ; 

தொடரும் இனிப்பு நோயைத் 

 தொடரா வண்ணம் நிறுத்தும் ; 

அடர்த்தி யான நன்மை 

 அளிக்கும் கொய்யா பழமே !

                                                     - இராதே

திங்கள், 24 ஜனவரி, 2022

எலுமிச்சை


 எலுமிச்சை  

புளிப்பானத்  தனிச்சுவையே எலுமிச்சை 

 புதுத்தெம்புத் தருங்கனியே எலுமிச்சை ; 

களிப்பானப் புத்துணர்வை உண்டாக்கும் 

கடுமூலநோய்த் தணிக்கமா மருந்தாகும் ; 

சலிப்பான உடல்சோர்வுந் தலைவலியும் 

சட்டெனவே பறந்தோட வழிவகுக்கும் ; 

மலிவாக கிடைத்தாலும் மருந்தாக 

வயிற்றிரைச்சல் செரிமானம் சரியாக்கும் ! 


வாய்நாற்றம் பல்வலியும் இருமலுமே 

 வந்தஇடம் தெரியாமல் ஓட்டிவிடும் ; 

பேய்ப்பசியைத் தூண்டிவிடும், பெரும்பித்தம், 

பெருங்குமட்டல் வாந்தியையும் தடுத்துவிடும் ; 

தாய்ப்போல கனிவாக அரவணைக்கும் 

தடந்தேளின் கொடியவிடம் முறித்துவிடும் ; 

நோய்த்தொற்றும் நச்சிழிவுக் கழிவுகளை 

நொடிப்பொழுதில் சிறுநீற்றில் வெளியேற்றும்!



யானைக்கால் நோய்க்குறைக்க இதுஉதவும் 

அழுக்கான 'நகசுத்தி' நோய்த்தீர்க்கும் ; 

பானைப்போல் பருத்தஉடல் இளைக்கவைக்கும் 

பதமாக குருதிக்குழாய் அடைப்பெடுக்கும் ; 

சேனையென உடல்போற்றி உயிர்க்காக்கும் 

சீற்றமுறும் வாய்ப்புண்ணைச் சீராக்கும் ; 

தேனைப்போல் இனிக்கின்ற நற்பயன்கள் 

தினந்தந்து நமைகாக்கும் எலுமிச்சை !

                                                                 -இராதே

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

நீடு துயில் நீக்கவந்த ஞாயிறு !

 நீடு துயில் நீக்கவந்த ஞாயிறே ! 

 ( தமிழ்மாமணி 'ஆனந்தா' ந.கோவிந்தசாமி அவர்களின் 104 ஆவது பிறந்தநாள் 18.01.2022 )


தும்பை தோற்கும் தூய வெள்ளை 

 துலங்கும் சிரிப்பைத் தூவுகின்ற ராசரே ; 

அம்பை போல விரைந்துச் சென்று 

 அருமை தமிழை ஆதரித்தத் தீரரே ; 

வம்புப் பேசி வாழும் உலகில் 

 வாய்மை பேசிப் பேரெடுத்தத் தூயரே ; 

தெம்பு கொண்டு தேகப் பயிற்சி 

 தினமும் கண்டே ஆர்ப்பரித்தச் சூரரே ! 



 இளமை தொட்டே இலக்கி யத்தை 

 ஈர்த்துக் குடித்தே ஈன்றமழை மேகமே ; 

வளமை யான குரலின் வீச்சில் 

 வண்ணத் தமிழை ஒலித்துநின்ற கீதமே ; 

தலைமை யேற்றுத் தொண்டில் துயரைத் 

தடுக்கப் பாய்ந்தே ஓடிவந்த நேயரே ; 

நிலையில் நின்றே ஒழுக்கம் ஓம்பி 

 நீடு துயிலை நீக்கவந்த ஞாயிறே ! 



 கன்னித் தமிழைக் கம்பர் புகழைக் 

கண்ணின் இமையாய்க் காத்துநின்ற வீரரே ; 

அன்பர் சங்கர் தாசர் நினைவை 

 ஆண்டு தோறும் போற்றிவந்த சீலரே ; 

இன்பத் தமிழை அள்ளிப் பருகி 

 இளமை எழிலில் தோன்றிவந்த ஈசரே ; 

அன்பு வெள்ளம் புரண்டே ஓடி 

ஆனந் தஆறாய்ப் பாய்ந்தெழுந்த நேசரே ! 



 காலைத் தொட்டே காலன் ஓட 

கடுமை யான நடைபயில்கோ விந்தரே ; 

வேளை தோறும் உணவை அளவாய்த்

 தேடும் வேள்வி நிகழ்த்திவென்ற சித்தரே ! 

தாளை வணங்கி போற்றி நெகிழ்ந்தேன் 

தமிழின் இசையைக் கூட்டுகின்ற நாதரே ; 

நாளை உலகம் உந்தன் வாழ்வை 

நாளும் நாளும் வாழ்த்தியென்றும் பாடுமே !

                                                                    - இராதே

விளாம்பழம்

 விளாம் பழம் 



 இனிப்புத் துவர்ப்புப் புளிப்பொடும் 

 இனிய சுவையைத் தரும்பழம் ; 

கனியுங் காயும் இலைபிசின்

   களைந்த பட்டை வேர்களும் 

தனித்துப் பிரியும் ஓடுமே 

 தரமாய் நல்கும் மருத்துவம் ; 

அணிகள் வகுத்து நன்மையை

    அரணாய்க் காக்கும் பழமிதே ! 



 பிசினைப் பொடித்தே உண்பதால் 

 போக்குங் குருதி நின்றிடும் ; 

பசியின் மந்தம் விடுபட 

 பயனாய் வாய்த்த இப்பழம் ; 

மசிய இடித்த மரப்பட்டை 

 மாற்றும் வாயின் கசப்பதை ; 

கசியுங் கோழை அகற்றிட 

 கருணைச் செய்யும் விளாம்பழம் ! 



 பித்தம் வாந்தித் தலைவலி

    பிதற்றும் வாயின் புண்களை 

நித்தம் நின்றுப் போக்கிடும் ; 

 நிலைமை சீராய் மாற்றிடும் ;

 சுத்தம் செய்து குருதியைத் 

 தொற்றும் அணுக்கள் நீக்கிடும் ; 

மெத்த மகிழ்ந்தே உண்ணுங்கள் ; 

மேன்மை பழமாம் விளாம்பழம் ! 

                                                            - இராதே

பலாப்பழம்

 பலாப் பழம்



  பச்சை முள்ளு தோலுடன் 

 பருத்துப் பெருத்தப் பலாப்பழம் ; 

மெச்சும் மணத்தை வீசுமே ; 

 வெட்டி யறுக்கப் பால்பிசின் 

நச்சு நச்சென் றொட்டுமே 

 நல்ல எண்ணெய்த் துணைகொண்டே 

அச்ச மின்றி அறுக்கலாம் 

 அருமை சுளைகள் சுவைக்கலாம் ! 



 ஊட்டம் நிறைந்த உயிர்ச்சத்தும் 

 உயர்ந்த செம்புச் சத்துகளும் 

வாட்ட மாக கொண்டதால் 

 வழங்கும் நன்மை பலபல ; 

ஆட்டம் போடுங் குடல்புற்றை 

 அடக்கி அழிக்க வல்லதாம் ; 

ஓட்ட மாக நச்சுயிரி 

 ஓடி ஒளிந்தே அகலுமே ! 



 வெள்ளை அணுக்கள் குருதியில் 

 மேலும் மேலும் பெருகிட 

தொல்லை சோகை ஒழிந்திடும் ; 

துவலும் எலும்பும் வலுவுறும் ; 

துள்ளும் இளமை கூடிடும் 

 தோன்றும் நரைகள் மறைந்திடும் ; 

அல்லல் கொடுக்கும் தீங்கினை 

 அடித்தே விரட்டும் பலாப்பழம் ! 

                                                         - இராதே

தேன்

 தேன் 



 தேனு தேனு தேனுங்க '

தேறல்' என்னும் தேனுங்க ; 

காணும் பயனோ நூறுங்க 

 காயம், புண்ணை ஆற்றுங்க ; 

பேணும் முகத்தின் தோலுக்குப் 

 புத்து ணர்ச்சி ஊட்டுங்க ; 

வேணும் மட்டுங் குடிக்கலாம் 

 வேண்டும் நன்மை கொள்ளலாம் ! 



 விரைவில் உணவைச் செரித்திடும் 

 விரட்டும் நோயைத் தூரங்க ; 

இரைப்பை, சிறுநீர் உறுப்பினை 

 எளிதில் போற்றிக் காங்குங்க ; 

நரம்பு மண்ட லத்தினை 

 நன்கே அமைதிப் படுத்துங்க ; 

இரவு தூங்க வைக்குங்க 

 இனிமை நிறைந்தத் தேனுங்க ! 



 இயங்கும் வயிற்றின் நண்பனாம் 

 இந்த தேனு தானுங்க ; 

செயலில் முந்தி நிற்குங்க 

 சிதையும் திசுவை மீட்குங்க ; 

அயர்வைப் போக்கி நலந்தரும் 

 அருமை தேனை அருந்துங்க ; 

இயற்கை அளித்த நன்கொடை 

 இன்பத் தேனே மருந்துங்க ! 

                                                    - இராதே

சிலம்பு

 சிலம்பு 


அரசியல் பிழைத்தோர்க் கெல்லாம் 

 அறமதே கூற்றாய் மாறும் ; 

 உரமுள கருத்தை ஞாலம்

   உணர்ந்திட உரைத்த நல்ல 

தரமுள காதை தந்தே

   தரணியை நிமிர்த்தும் ஞான 

வரமதாய் சிலம்பை வார்த்தான் 

 வரகவி இளங்கோ அன்றே ! 



 கற்பதன் பெருமை தன்னை 

 கண்ணகி வடிவில் ஏற்றி 

கற்புநெறி வையம் மேவ 

 கருத்துடன் சிலம்பை நூற்றுச் 

சொற்சுவை அணிகள் கோர்த்துச் 

 சுந்தரத் தமிழில் யாத்து 

நிற்கவே காலந் தோறும் 

 நிலைத்திடும் சிலம்பு தந்தான் ! 



 ஊழ்வினை உறுத்து வந்தே 

 ஊட்டிடும் காட்சிக் கண்முன் 

சூழ்நிலை களத்தைப் பூட்டிச் 

 சுழன்றிடும் சிலம்பின் மாட்சி 

பாழ்நிலை அடையா வண்ணம் 

 பண்புடன் தமிழர் வாழ 

வாழ்வுளோர் அறிந்து கொள்ள 

 வகைபட அளித்தான் இளங்கோ ! 



 சிலம்பிலே தமிழர் பண்பு 

 சிறப்புடன் திகழ்தல் கண்டோம் ; 

சிலம்பிலே தமிழர் மாண்பு 

 சீருடன் ஒளிர்தல் கண்டோம் ; 

சிலம்பிலே தமிழர் வாழ்வு 

 செப்பமாய் மிளிர்தல் கண்டோம் ; 

சிலம்பதை நாளுங் கற்றுச் 

 செம்மொழிப் போற்றி நிற்போம் ! 

                                                           

                                                                 - இராதே

வியாழன், 20 ஜனவரி, 2022

பூண்டு

 பூண்டு 


 பூண்டு பூண்டு பூண்டு 

  புரட்சிப் பயிராம் பூண்டு ; 

தூண்டும் கார அமிலம் 

  தொற்றை முற்றும் அழிக்கும் ; 

கூண்டு போல காப்புக் 

 கொண்டே இதயம் காக்கும் ; 

பூண்டே உணவு மருந்து 

  புவிக்குக் கிடைத்த விருந்து ! 



 குருதிக் குழாயை விரிக்கும், 

  குருதி ஓட்டம் பெருக்கும் ; 

குருதிக் கட்டிகள் உடைக்கும் , 

  குருதி உறைதல் எதிர்க்கும் ; 

குருதிக் கொழுப்பைக் கரைக்கும் , 

  குருதிக் கொதிப்பை அடக்கும் ;

குருதி வளத்தைப் பேணும்

  குணமே கொண்ட பூண்டு !



 பருக்கள் , மருக்கள் நீக்கும் 

  பல்லின் சொத்தைப் போக்கும் ; 

உருக்கும் புற்றை மாய்க்கும் 

  உடலின் சோர்வை ஏய்க்கும் ; 

பெருகும் வாயு தொல்லை 

  பிணிக்கு இதுவே மருந்தாம் ; 

அருமை உணர்ந்தே பூண்டை

    அதிகம் உணவில் சேர்ப்போம் !

                                                    - இராதே

பப்பாளி

 பப்பாளி


  மாவு, புரதம், நார்ச்சத்து 

 மண்டிக் கிடக்கும் பப்பாளி ; 

மேவும் நரம்புத் தளர்ச்சியினை 

 மேன்மை யுறுத்தி வளப்படுத்தும் ; 

நாவும் மகிழ்வில் நீருறும் 

 நன்கு செரிக்க வழிவகுக்கும் ; 

நோவும் சாவும் அண்டாமல் 

 நூறு வயது வாழ்விக்கும் ! 



 சிறுநீர்க கற்கள் கரைந்தோடும் ; 

 சிதையும் பற்கள் சீர்மையுறும் ; 

இறுகும் மலமும் இளகிவிடும் ; 

 எளிதில் உடலும் இளைத்துவிடும் ; 

குறுகும் முகத்தின் சுருக்கங்கள் 

 குன்றி முகமே பொலிவுபெறும் ; 

அறுமே கண்கள் கோளாறு ; 

 அனைத்தும் தருமாம் பப்பாளி ! 



 அழகுக் கூட்டும் பப்பாளி ; 

 அறிவைத் தூண்டும் பப்பாளி ; 

துழவித் துருவி நோய்த்தீர்க்கும் ; 

 துடிக்கும் இதய நலம்பேணும் ; 

முழக்க மிட்டே கூவுங்கள் 

 முதன்மை பழமே பப்பாளி ; 

பழத்தில் மருத்துவர் பப்பாளி ; 

 பறித்து பகிர்ந்தே தின்னுங்கள் ! 

                                                      - இராதே

புதன், 19 ஜனவரி, 2022

வெண்டை

 வெண்டை வெண்டை வெண்டைக்காய் ; 

 வெப்பம் தணிக்கும் குளிர்ச்சிக்காய் ; 

மண்டை மூளை சுறுசுறுப்பை 

 மடங்காய்ப் பெருக்கும் வெண்டைக்காய் ; 

சண்டைப் போட்டு நோயெதிர்ப்பைச் 

 சரள மாக்கிப் புற்றழிக்கும் ; 

கண்ட நேர பசிவேட்கைக் 

 கட்டுப் படுத்தி எடைதடுக்கும் ! 



 மெச்சும் பசையாய்க் கொழகொழப்பு 

 மிகுந்து நாரின் சத்தளிக்கும் ; 

நச்சால் உழலும் கல்லீரல் 

 நலிவைப் போக்கிச் சீராக்கும் ; 

அச்சம் அளிக்கும் மூச்சிரைப்பு 

 அடக்கி அமைதி வழிகோலும் ; 

எச்சம் போக்கும் சிறுநீரில் 

 இழியும் சத்தைத் தடுத்துவிடும் ! 



 பச்சைப் பசேல் வெண்டைக்காய் 

 பார்வைக் குறைவை மேம்படுத்தும் ; 

உச்சக் குருதி அழுத்தத்தை 

 உயர்த்தும் கொழுப்பைக் கரைத்துவிடும் ; 

அச்சம் ஊட்டும் நமனையே 

 அண்டா தோட்டும் வெண்டைக்காய் ; 

மிச்ச மின்றி உண்ணுங்கள் ; 

 மேன்மை நலனைக் காணுங்கள் ! 

                                                         - இராதே

செவ்வாய், 18 ஜனவரி, 2022

மாதுளை

 மாதுளை 


 சுத்த குருதி நிறத்திலே  

  சுவைகள் தெறிக்கும் பரல்களாய் 

முத்து முத்து மணியென 

   மூடித் தோலுள் மாதுளை 

சத்து பலவும் இதனிடம் 

   சளைக்க சளைக்க கிடைத்திடும் ; 

நித்தம் நித்தம் உண்ணுங்கள் ; 

   நிறைந்த பயனைக் கொள்ளுங்கள் ! 



 அத்து மீறும் கொழுப்பினை 

   அடக்கி எடையைக் குறைத்திடும் ; 

மெத்து மெத்து விதைகளால் 

   மேனித் தோலைப் பேணிடும் ; 

பித்த நோய்கள் தாக்கத்தைப் 

   பிடர்ப்பி டித்துத் தள்ளிடும் ; 

இத்துப் போன நரம்பினை 

   இயக்கி வலிமை கூட்டிடும் ; 



 தலையில் முடியின் வேர்களைத் 

   தழைக்க நன்கு உதவிடும் ; 

நிலைத்தே நினைவின் ஆற்றலை 

   நீடித்தி ருக்கப் பயன்தரும் ; 

குலைந்த இதயம் சீர்பட 

   குறித்த நன்மை தந்திடும் ; 

நலங்கள் வழங்கும் மாதுளையை 

   நாளும் விரும்பி உண்ணுவோம் ! 

                                                        - இராதே