மானிடரே பூவுலகில் மண்ணைக்காக்கும் மழைவளம்
மாண்டிடும்பு துக்கதைகள் உண்டோ ? உண்டோ ?
வானிடைப்பொ ழிந்துவரும் காரிருள்மு கில்களுமே
வற்றிடவ ருந்தும்நிலை உண்டு ! உண்டு !
ஏனிந்தஇ ழிவுநிலை எப்படிவந் ததோஎன்றே
யாவரும றியுமாறே சொல்லு ! சொல்லு !
கானிடையி ருந்தமரக் கூட்டத்தைவெட் டுவதாலே
கண்டதுவே இந்தத்துன்பம் எள்ளு ! எள்ளு !
தாண்டவமா டிடும்பஞ்சம் தண்ணீரில்லா வாழுந்தேசம்
தாரணியில் வந்திடுமோ மெய்யோ ? மெய்யோ ?
ஆண்டிடும்நீ ரையிறைத்தே ஆணவத்தி னாலழித்தால்
ஆண்டியாய்ப்போ யிடும்தேசம் மெய்யே ! மெய்யே !
பாட்டன்பூட்டன் வெட்டிவைத்த ஏரிகுளம் அத்தனையும்
பட்டாப்போட்டு மனையாக்கி விற்றோம் ! விற்றோம் !
கூட்டம்போட்டு நீரைக்கேட்டுச் சண்டையிடும் துயரினைக்
கொள்கையாக்கி இன்றுநாமும் பெற்றோம் ! பெற்றோம் !
கொண்டதன்ன லத்தினாலே சேர்த்துவைத்த நீரையெல்லாம்
கொட்டிக்கொட்டி வீணடித்துக் கெட்டோம் ! கெட்டோம் !
அண்டத்திலே நீரைத்தேடி ஆகாயத்தில் நீரைத்தேடி
அந்தரத்தில் கோள்கள்பல விட்டோம் ! விட்டோம் !
வாழவரும் சந்ததிக்குச் சொத்துச்சுகத் தோடுக்கூட
வங்கிபோலத் தண்ணீரினைச் சேர்ப்போம் ! சேர்ப்போம் !
பாழாப்போகும் நீர்நிலைகள் பாரிலேஉ யிர்த்தெழவும்
பற்றுடனே நாளுமதைக் காப்போம் ! காப்போம் !
- இராதே