இரவு வான வீதியிலே
இருளைப் போக்கி வெளிச்சம்பெற
இரவல் பெற்று ஒளிவீசி
இயங்கும் ஓருகோள் சந்திரனாம் !
தானே சுழன்று புவிச்சுற்றும்
தனியழ குடனே மறைந்துவிடும் ;
தானாய் மீண்டும் வளர்ந்துவரும்
தனியொரு துணைக்கோள் புவிக்கிதுவாம் !
முழுமை அடையும் வளர்பிறையை
முழுநில வென்றே அழைக்கின்றோம் ;
முடிவை எட்டும் தேய்பிறையோ
முழுதும் கருத்த காருவாவாம் !
நிலவின் ஈர்ப்பு விசையதனால்
நிலத்தில் கடல்நீர் உயர்ந்திறங்கும் ;
நிலையில் லாமல் அலையெழும்பும்
நிகழும் இச்செயல் ஓதங்களாம் !
நிலவில் இறங்கி கால்பதித்து
நிலைப்பெற் றார்நீல் ஆம்ஸ்ட்ராங்கே !
நிறைந்த மதியுடை நம்தேசம்
நிலவில் நின்று கொடிநாட்டும் !
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக