நஞ்சு மேவும்புகை
மிஞ்சும் வாயின்வழி
நன்றே ஓடிப் பற்றுமே - மூச்சு
தன்னை நாடிச் சுற்றுமே - உடல்
நன்மை யாவும் வற்றுமே - தீமை
நாடும் போதையினைக்
கூடும் பாதைவிட்டு
நகர்த்து வோமே முற்றுமே ! ( 1 )
வஞ்ச மானபுகை
தஞ்ச மாகிவிட
வந்து சேரும் புற்றுமே - மேனி
நொந்து வீழும் இற்றுமே - காசம்
குந்தி நோவும் தொற்றுமே - உளம்
வாடிப் போகும்படித்
தேடிப் போனதெண்ணி
வருந்து வாயே கற்றுமே ! ( 2 )
கந்த லாகிவிடும்
வெந்து நுரையினீரல்
கக்கும் நஞ்சும் ஆளுமே - தும்மல்
மிக்கும் சத்தம் மூளுமே - உயிர்த்
திக்கும் ஊஞ்சல் நீளுமே - செந்நீர்
காட்டும் பாய்ச்சலிலே
ஓட்டம் மாய்ந்திடவே
கடிதில் வாழ்வு மாளுமே ! ( 3 )
சிந்தும் கோலவிழி
முந்தும் நீரினிழை
நம்பும் காதல் மிஞ்சுமே - இணை
எம்பும் ஆசை துஞ்சுமே - நாளும்
தெம்பும் இன்றி அஞ்சுமே - புகை
தீரா மோகம்விட்டு
வாரா தேகும்படிச்
செய்யு மாறே கெஞ்சுமே ! ( 4 )
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக