பாகற்காய்
கசப்புச் சுவையே பாகற்காய்
கடிய பிணிக்கும் மருந்திடும் ;
பசப்புச் செயல்கள் இன்றியே
பயன்கள் எடுத்து வீசிடும் ;
அசத்தும் ஆற்றல் கொண்டதே
அரிய பண்பு நிறைந்தது ;
கசக்கி பிழிந்து நோய்களைக்
கண்டே விரட்டும் பாகற்காய் !
விடத்தின் கடுமை போக்கிடும்
விரவுந் தொற்றை மாய்த்திடும் ;
படருஞ் சிரங்கு சொரிகளைப்
பதமாய்த் தீர்த்துக் கட்டிடும் ;
தொடருங் குருதி சோகையின்
தொல்லை மறைய வித்திடும் ;
குடலில் புழுக்கள் நீக்கிடும்
குருதிக் கொழுப்பை எரித்திடும் !
இருமல், இழுப்பு, சளிதனை
இல்லா தாக்கி விலக்கிடும் ;
பெருகும் மஞ்சள் காமாலை
பெயர்ந்தே ஓட செய்திடும் ;
நெருக்கும் சிறுநீர்க் கற்களை
நிரவி உடைத்தே அகற்றிடும் ;
குருதி இனிப்பைச் சரித்திடும்
கொடிய புற்றை அழித்திடும் !
பொடுகுச் சிக்கல் விடுபடும்
பொலிவு தோலில் எதிர்படும் ;
இடுக்கண் கொடுக்கும் ஈரல்நோய்
எதிர்த்து வெற்றிப் பெற்றிடும் ;
கடுக்கும் மூல நோய்தனைக்
களைந்து நன்மை தந்திடும் ;
அடுக்கும் பயன்கள் பலபல
அளிக்குங் காய்தான் பாகற்காய் !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக